Last Updated : 22 Mar, 2016 12:14 PM

 

Published : 22 Mar 2016 12:14 PM
Last Updated : 22 Mar 2016 12:14 PM

சேதி தெரியுமா? - ராக்கெட்டுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்டுகளின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்த திட்டமிட்டிருப்பதாக இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார் மார்ச் 14 அன்று தெரிவித்தார். ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசுகையில் இதைத் தெரிவித்தார். “ஆண்டுக்கு 7 ராக்கெட்டுகளை இஸ்ரோ செலுத்தி வருகிறது. விண்ணில் இந்தியாவின் 34 செயற்கைக் கோள்கள் உள்ளன. ஆனால், தேவையைவிட இந்த எண்ணிக்கை குறைவு. பூமியின் பருவநிலை மாற்ற ஆராய்ச்சி மற்றும் தகவல் தொடர்புக்குக் கூடுதலாகச் செயற்கைக் கோள்கள் தேவை. எனவே, விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்டுகளின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 12 ஆக உயர்த்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது” என்று தெரிவித்தார்.



வாழ ஏற்ற நகரம் ஹைதராபாத்

இந்தியாவில் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த நகரங்கள் பட்டியலில் ஹைதராபாத் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த மெர்சர் மனிதவள ஆலோசனை நிறுவனம் மார்ச் 12-ல் வெளியிட்ட பட்டியலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் உலகின் பல்வேறு நகரங்களை ஆய்வு செய்து இந்த அமைப்பு பட்டியல் வெளியிட்டு வருகிறது. இதன்படி உலகளவில் 230 நகரங்கள் ஆய்வு செய்யப்பட்டு தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில் ஆஸ்திரிய தலைநகர் வியன்னா முதலிடத்தைப் பிடித்தது. ஜூரிச் (சுவிட்சர்லாந்து), ஆக்லாந்து (நியூசிலாந்து) ஆகியவை அடுத்தடுத்த இடத்தைப் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் இந்தியாவின் ஹைதராபாத் 140-வது இடத்தையும், சென்னை 150-வது இடத்தையும் பிடித்தன. பாதுகாப்பான உலக நகரங்கள் வரிசையில் சென்னை 113-வது இடத்தில் உள்ளது.



இட ஒதுக்கீடு முறையில் மாற்றம் இல்லை

சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு முறையில் மாற்றம் கொண்டு வரும் எந்த ஒரு திட்டமும் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மார்ச் 14-ல் தெரிவித்தார். ‘வசதி படைத்தோரும் இட ஒதுக்கீடு கேட்பது அரசியல் சாசனத்தின் உணர்வுக்கு விரோதமானது’ என்று ஆர்.எஸ்.எஸ். கூறியதை அடுத்து, அருண் ஜேட்லி இதனை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, “தற்போதைய இட ஒதுக்கீடு முறையே தொடர்ந்து பராமரிக்கப்படும் என்பது அரசின் கொள்கை. இதில் மாற்றம் எதுவும் கிடையாது” என்றார். இட ஒதுக்கீட்டில் பொருளாதார அடிப்படைகளைப் புகுத்த ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது என்று எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டையடுத்து அருண் ஜேட்லி இந்த விளக்கத்தை அளித்தார்.



தத்து எடுப்புச் சட்டத்துக்கு விதிமுறைகள்

இந்தியக் குழந்தைகளை நாட்டுக்கு உள்ளேயும் நாட்டுக்கு வெளியில் இருந்தும் தத்து எடுப்பதை ஒழுங்குபடுத்தும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலையில், இந்தச் சட்டத்தின் கீழ் விதி முறைகளை வகுக்க வேண்டும் என்று மார்ச் 15-ல் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. தத்து எடுப்பது அல்லது கொடுப்பது தொடர்பான புகார்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவும் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

குழந்தைகள் தத்து எடுப்பதை சிறார் நீதிச் சட்டம் - 2002-ன் பிரிவு 2(ஏஏ) வரையறுக்கிறது. குழந்தைகளுக்கு உரிய அனைத்து உரிமைகள் மற்றும் பொறுப்புகளைத் தத்து எடுக்கும் பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு இந்தப் பிரிவு அளிக்கிறது. தத்து எடுக்கும் பெற்றோர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு இந்தப் பிரிவு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டது.



மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை அருகே மார்ச் 13-ல் நடந்த சாதி ஆணவக் கொலை குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. 4 வார காலத்துக்குள் இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், போலீஸ் டிஜிபி ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டது. தலித் சமூகத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர் சங்கர், ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த கவுசல்யா என்கிற பெண்ணைச் சில மாதங்களுக்கு முன்பு சாதிமறுப்பு திருமணம் செய்தார்.

பெண்ணின் குடும்பத்தினருக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லாததால் உடுமலைப்பேட்டையில் இளம் தம்பதியரை 3 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் சங்கர் உயிரிழந்தார். தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் கொலை குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.



நிறைவேறியது ரியல் எஸ்டேட் மசோதா

மாநிலங்களவையைத் தொடர்ந்து மக்களவையிலும் ரியல் எஸ்டேட் மசோதா (ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி) மார்ச் 16 அன்று நிறைவேறியது. கடந்த 2013-ல் காங்கிரஸ் ஆட்சியின்போது ரியல் எஸ்டேட் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு மசோதாவில் பல்வேறு திருத்தங்களைச் செய்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத் தொடர்ந்து எதிர்க் கட்சிகளின் ஆலோசனையின் பேரில் மசோதாவில் 20 முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஆளும் பாஜகவுக்குப் பெரும்பான்மை பலம் இருப்பதால் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. தற்போது வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புணர்வுடன் மாற்றும் நோக்கத்தில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டிருக்கிறது. வீடு வாங்குபவர்கள், விற்பவர்கள் என இரு தரப்புக்கும் ஒரு தெளிவான புரிந்துணர்வை ஏற்படுத்த இந்த மசோதா உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x