Published : 22 Mar 2016 11:43 AM
Last Updated : 22 Mar 2016 11:43 AM
குழந்தைகளின் வருத்தம் தோய்ந்த விழிகளை, வேதனைப்படும் இதயத்தை ஆற்றுப்படுத்தும் மருந்தாக வகுப்பறை செயல்பட முடியும். அது உயிருள்ள, துடிக்கும் ஒற்றை இதயமாக இயங்குவது ஆசிரியர் கையில்தான் உள்ளது. சிங்காரவேலர்.
கல்வியும் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளும்
ஒவ்வொரு முறை பொதுத்தேர்வுகள் வந்து போகும் போதெல்லாம் ரஸியா சுல்தானாவை நினைக்காமல் இருக்க முடியவதில்லை. ஆனால் நம் கல்விமுறை ரஸியா மாதிரி கடுமையாக நோய் வாய்பட்ட குழந்தைகள் மீது எந்த இரக்கமும் காட்டுவதில்லை. பொதுவாக வகுப்பறையின் அன்றாட விதிகள், பாடதிட்டம், பயிற்சி இவற்றினிடையே ‘எல்லாரும் சாப்பிட்டீர்களா’ என்றுகூடக் கேட்க முடியாத ஆசிரியர்கள்தான் இருக்கிறார்கள்.
ஒரு குழந்தையின் அனலாய் சுடும் காய்ச்சலைவிட நான்காம் வாய்ப்பாடு முக்கியம். அவரது சைனஸ் தலைவலியைவிட ‘மூளை’ பற்றிய பாடம் அதிமுக்கியம் என்றே வகுப்புகள் முரட்டுத்தனமாய் செயல்படுகின்றன. இந்த நிலையை மீறிக் கடும் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் சாதிக்க முடியும் என எனக்குக் காட்டியவர்தான் மாணவி ரஸியா சுல்தானா.
குழந்தைகள் உடல்நலமும் பள்ளிகளும்
குழந்தைகளை வளர்ந்துவரும் முழு மனிதர்களாகக் கருதி உலகின் முதல் குழந்தைகள் நல மருத்துவமனையை ஏற்படுத்தியவர் ஆபிரஹாம் ஜாக்கோபி (Abraham Jacobi ). குழந்தைகளுக்கான தனி மருத்துவ சிகிச்சை முறையும் (Pediatrics) சுகாதார இயலையும் ஏற்படுத்தியவர். ஜெர்மனியில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்த மருத்துவக் கல்வியாளர். உடல்நலம் பேணுதலைப் பாடத்தில், கல்வியில் ஒரு பகுதியாக ஆக்கியவர். 1882-ல் ராண்டால் தீவுகளில் தெருவோரக் குழந்தைகள் அமைப்பு, அனாதை விடுதிகள் என மருத்துவ உலகை வீதி மக்களிடம் கொண்டு சென்றவர். பள்ளிகளை (குழந்தை) வளர்ப்பு மையங்கள் (Growth Centers) என அழைத்தார். பள்ளி ஆசிரியர்களுக்கு அவர் முன்வைத்த கருத்துகள் ஜாக்கோபி சுகாதார(Jacobi Health Rules) விதிகள் என அழைக்கப்படுகின்றன.
ஜாக்கோபி விதிகளின்படி பள்ளிகளில் குழந்தை களின் உடல்நலம், வளர்ச்சி வீதம், நோய்கள் பற்றிய ஒரு பதிவேடு பேணப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை சுகாதாரம், விபத்துகளில் முதலுதவி போன்றவற்றில் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். மாதம் ஒருமுறை மருத்துவ உதவியாளர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து குழந்தைகளைச் சந்திக்க வேண்டும். பள்ளிகளில் அன்றாட சரிவிகித உணவு (Balance Diet) வழங்கப்பட வேண்டும் என 1874-லேயே பரிந்துரைத்தார்.
முதல் மத்திய உணவுத்திட்டம்
ஜாக்கோபியோடு நேரடிக் கடிதத் தொடர்பில் இருந்தவர் தமிழகத்தின் சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர். ஆங்கிலேயர் ஆட்சியில் சென்னை 18-வது வார்டு கவுன்சிலராக இருந்த சிங்காரவேலர் பள்ளிகளில் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்தார். அந்தச் சமயத்தில்தான் முதல் முறையாக குழந்தைகளுக்கு மதிய உணவு பள்ளியிலேயே வழங்கப்பட்டது என வரலாறு பதிவுசெய்துள்ளது. காமராசர் தமிழக அளவில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்திருந்தாலும் பிறகு அது எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டமாக மாறினாலும் அதன் முதல் படியை எடுத்துவைத்த பெருமை சிங்காரவேலரையே சேரும்.
இன்று ஆசிரியர்களின் அணுகுமுறை சரிசெய்யப்படாமல் உள்ளதால் ஜாக்கோபி கனவு கண்ட வளர்ச்சி மையங்களாகப் பள்ளிகள் செயல்பட முடியாத நிலையே உள்ளது. கடும் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளும் இந்த நிலையை மீறி இதற்காகக் கைகொடுக்க முடியும் என எனக்குக் காட்டியவர் மாணவி ரஸியா சுல்தானா.
மரணத்தை எதிர்நோக்கிய மருத்துவர் ரஸியா
நான் பணிபுரியும் பள்ளியில் பதினொராம் வகுப்பிற்கான சேர்க்கை நடந்துகொண்டிருந்த சமயம். இஸ்லாமியப் பெரியவர் ஒருவர் விருட்டென அறைக்குள் வந்து “சார், என் பேத்தி வருவா. தயவுசெய்து இடம் இல்லைனு சொல்லி அனுப்பிடுங்க” என்று சத்தமாகச் சொன்னார். இடம் கேட்டு வருபவர்களையே இதுவரை பார்த்திருக்கிறேன். அடுத்து சற்று நேரத்தில் உள்ளே தனது விண்ணப்பத்தோடு பர்தா அணிந்த மாணவி நுழைந்தார். “சார், எங்க தாத்தா சேர்க்காதீங்கனு சொல்லி இருப்பாரே... நான் டாக்டராகணும்னு ஆசைப்படறேன் சார். பிளீஸ்…” என்றார்.
நான் வழக்கமான தலைமை ஆசிரியராய், “முதலில் தலை பர்தாவை கழட்டு. அப்போதுதான் நீ யார் என்பதைப் பார்க்க முடியும்” என்றேன் கறாராக. மிகுந்த தயக்கத்துடன் அதை அவர் அகற்றியபோது எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து இன்று வரை நான் மீளவில்லை. அவரது தலையில் முடியே இல்லை. “எனக்கு பிளட் கான்சர். ஆனால் நான் டாக்டராகனும்னு ஆசை. நல்லா படிப்பேன் சார்” என்றார். என் மனம் இளகியது.
பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார். அவர் எடுத்துக்கொண்ட (கீமோதெரபி) கதிர்வீச்சு சிகிச்சை முதலான சிகிச்சைகளால் பதற்றதோடு நாட்கள் கழிந்தன. மருத்துவராகும் வெறியோடு அவர் படித்ததைக் கண்கூடாகக் கண்டோம்.விடுதிக் காப்பாளராகப் பணியாற்றும் ஆசிரியைகள் உட்பட யாருக்கு காய்ச்சல், உடல் சோர்வு என்றாலும் ரஸியாவையே அணுகியதைப் பார்த்து வியந்தேன்.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து கொண்டிருந்தபோது இயற்பியல் தேர்வின் முதல் ஒரு மணி நேரம் முடிந்த நேரத்தில் ஒரு மாணவர் மடாரென்று மயங்கி பெஞ்சிலிருந்து கீழே விழுந்தார். பொதுத்தேர்வு என்றால் மாணவரை வெளியே அனுப்பவும் கூடாது. மருத்துவ உதவிக்கு என்ன செய்வது என தவித்தோம். இதுகுறித்து அறிந்து தனது தேர்வரையிலிருந்து அந்த அறைக்கு விரைந்து வந்த ரஸியா தான் பையில் வைத்திருந்த எலுமிச்சைப் பழத்தை எடுத்துச் சாறாக்கித் தண்ணீரில் கலந்து அதில் சிறிது உப்பு சேர்த்துப் பருகவைத்தார். மயக்கம் கலைந்து அந்த மாணவரும் தேர்வை எழுதி முடித்தார். “இது பயத்தால் ஏற்பட்ட குறை ரத்த அழுத்த நிலைதான். அடிக்கடி தண்ணீர் குடித்தாலே போதும்” என ரஸியா விளக்கியபோது ஆசிரியர்கள் எல்லோரும் குழந்தை மாதிரி கேட்டுக்கொண்டோம்.
பாட நலன் மட்டுமல்ல; குழந்தைகளின் உடல் நலம் எவ்வளவு முக்கியம் என எனக்குக் காட்டிய ரஸியா, தஞ்சை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து, தான் விரும்பிய மருத்துவக் கல்வி படித்துக்கொண்டிருந்தபோதே இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.
தொடர்புக்கு: eranatarasan@yahoo.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT