Published : 22 Nov 2021 11:30 AM
Last Updated : 22 Nov 2021 11:30 AM

கரோனா  காலகட்டத்தின் புதிய டிரெண்டுகள்!

சித்தார்த்தன் சுந்தரம்

sidvigh@gmail.com

சரித்திர நிகழ்வுகளைக் குறிப்பிடுவதற்கு நாம் இதுவரையிலும் கி.மு, கி.பி என்றே எழுதி வருகிறோம். ஆனால் கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, அது க.மு, க.பி என அழைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏற்கனவே நாம் `புதிய இயல்பு வாழ்க்கை’ (New Normal Life) என பேச ஆரம்பித்திருக்கிறோம்.

2021-ம் ஆண்டிலும் அதற்குப் பிறகான காலகட்டத்திலும் என்னென்ன புதிய போக்குகள் நிலவும் என்பது குறித்து பன்னாட்டு ஆலோசனை நிறுவனமான மெக்கின்சி சில மாதங்களுக்கு முன்பாக கட்டுரையொன்றை வெளியிட்டது. அதன் கணிப்புப்படி டிரெண்டாக உள்ள விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம்.

`தேவைகள்தான் கண்டுபிடிப்புகளின் தாய்’என்பது முதுமொழி. அவ்வகையில் நெருக்கடிகள் ஏற்படும்போதுதான் புதிய தீர்வுகளும், புதிய கண்டுபிடிப்புகளும் ஏற்படும் என சொல்கிறார் மெக்கின்சியின் தலைவர்களில் ஒருவரான கெவின் ஸ்னீடர். இவர் கணிப்புப்படி, தற்போது உருவாகியிருக்கும் எட்டு புதிய போக்குகள் இனி வரும் காலங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்.

முதலாவது, புத்தாக்கம். நெருக்கடி காலங்கள் புதிய சாத்தியங்களுக்கும், புதிய கண்டு பிடிப்புகளுக்கும் வழிவகுக்கும் என்பதை கரோனா காலகட்டம் மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது. கரோனா பெருந்தொற்று காலத்தில் அமெரிக்காவில் வழங்கப்பட்ட காப்புரிமைகளின் (patents) எண்ணிக்கை 2019-ம் ஆண்டைக் காட்டிலும் இரட்டிப்பாகும்.

இரண்டாவது, நுகர்வோர்களின் நடத்தைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றம். கடந்த பத்தாண்டுகளில் உலகம் டிஜிட்டலை நோக்கி நகர்ந்த வேகத்தைவிட, இந்தப் பெருந்தொற்று காலத்தின் முதல் மூன்று மாதங்களில் உலகம் டிஜிட்டலை நோக்கி மிக வேகமாக நகர்ந்தது. வர்த்தகம், கல்வி, மருத்துவம் என பல துறைகளும் டிஜிட்டலை நோக்கி நகர்ந்துள்ளன. தற்போது இ-காமர்ஸ் துறை பெருந்தொற்று காலத்துக்கு முன்பு இருந்ததைவிட ஐந்து மடங்கு வரையில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதைப் போல `வீட்டிலிருந்து வேலை செய்வது’ என்ற நடைமுறை பல விதங்களில் வேலைசார் கட்டமைப்பை பெரும் மாற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.

மூன்றாவது, சுற்றுச்சூழல் குறித்த கவனம். பருவநிலை மாற்றம் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், அதன் தீவிரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பருவநிலை மாற்றம் குறித்து அனைத்துத் தளங்களிலும் தீவிரமாக விவாதிக்கப்பட்டுவருகிறது. அதன் தொடர்ச்சியாக மாற்று எரிசக்தியை நோக்கிய நகர்வு தீவிரமடைந்திருக்கிறது. மாற்று எரிசக்தி கட்டமைப்பு தொடர்பாக உலகளாவிய அளவில் ஆண்டுக்கு 3.5 டிரில்லியன் டாலர் வரை முதலீடு மேற்கொள்ளபடக்கூடும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. இது கச்சா எண்ணெய்யை அடிப்படையாகக் கொண்டுள்ள பொருளாதாரக் கட்டமைப்பில் பெறும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அந்த வகையில் மாற்று எரிசக்தியை நோக்கிய நகர்வு உலக நாடுகளின் அரசியல் போக்கில் தாக்கம் செலுத்தும் காரணியாக விளங்கும்.

நான்காவது, சுகாதாரம். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நமது வாழ்வியல் முறையை மாற்றிப் போட்டிருப்பதோடு, அது குறித்து சிந்திக்கவும் வைத்திருக்கிறது ஹெல்த்கேர். கரோனா காலத்தில் உலகெங்கும் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கென்று சுமார் 180 பில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் தடுப்பூசி கண்டுபிடிப்பும் அடங்கும். சிகா வைரஸ் பரவியபோது அது தொடர்பான மருத்துவ ஆராய்ச்சிகளுக்குச் செலவிடப்பட்ட தொகையைவிட இது 180 மடங்கு அதிகம். அந்த வகையில் இனிவரும் காலங்களில் உலக நாடுகள் சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தும்.

ஐந்தாவது, தொழில்துறைக்கும் அரசுக்கும்இடையிலான உறவு. இந்தப் பெருந்தொற்று காலத்தில் தொழில்துறை மிகப் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது. தொழில்துறையைக் காப்பற்றவும் அதன் மூலம் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டன. தொழில்துறையையும் பொருளாதாரத்தையும் வலுப்படுத்தி நல்ல வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல அரசானது தொழில்துறையோடு இணக்கமாக செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதால் இனி தொழில்துறையில் அரசின் ஈடுபாடு அதிகமாக இருக்கும்.

ஆறாவது, கார்ப்பரேட் போர்ட்போலியோக்களை மறுசீரமைப்பு செய்வதாகும். கரோனா ஊரடங்கினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்கும் பொருட்டு அரசுகள் சலுகைத் திட்டங்களை அதிகரித்தன. ஆனால், இவற்றின் பலன்கள் நிறுவனங்களுக்கு முறையாக சென்று சேரவில்லை. மாறாக, மேல்மட்டத்தில் இருக்கும் பெருநிறுவனங்கள் மட்டுமே அரசின் சலுகைகளால் பலன் அடைந்தன. கடந்த ஆண்டு மேல்மட்டத்தில் இருந்த பெருநிறுவனங்கள் சுமார் 240 பில்லியன் டாலர் அளவுக்கு பொருளாதார லாபம் அடைந்த வேளையில் கீழ் மட்டத்தில் இருந்த நிறுவனங்களில் 20 சதவிகித நிறுவனங்கள் 400 பில்லியன் டாலர் அளவுக்கு நஷ்டமடைந்திருக்கின்றன. இந்த இரண்டு நிலைகளுக்கு இடையே இருக்கும் இடைவெளியைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அரசுகள் உள்ளன.

ஏழாவதாக, விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி. கரோனா முதல் அலையின் தீவிரம் குறைந்த சமயத்தில், உலகளாவிய அளவில் ஊரடங்கு கட்டுப்பாடு படிப்படியாக தளர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மக்கள் பயன்பாட்டுக்கான பொருட்களின் தேவை அதிகரித்தது. திடீரென்று தேவை பல மடங்கு உயர்ந்ததால் அவற்றை விநியோகம் செய்வதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

உலக நாடுகளின் தொழிற்சாலைகள் அதன் மூலப் பொருட்களுக்கு சீனாவையே பெரிதும் நம்பி இருப்பது விநியோகச் சங்கிலியில் நெருக்கடி ஏற்பட்டிருப்பதற்கு ஒரு முக்கியக் காரணம். இன்னும் விநியோகத்தில் சிக்கல் தொடர்கிறது. எதிர்காலத்தில் இப்படியான ஒரு சூழல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் புதிய கட்டமைப்பை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உலக நாடுகள் உள்ளன.

இறுதியாக, விமானப் போக்குவரத்து. கரோனா சூழல் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்ட விமான போக்குவரத்து மீண்டும் புத்துயிர் பெறும். ஆனால் இது பழைய நிலைமைக்கு வருவதற்கு எப்படியும் இன்னும் 2-3 ஆண்டுகள் ஆகலாம். இவை தவிர, இனி தொழிற்துறையில் ஆட்டோ மேஷனை அறிமுகப்படுத்துவது துரிதப்படுத்தப் படும் என்றும் அதனால் வேலைக் கட்டமைப்பு பெரும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்றும் மெக்கின்சி நிறுவனம் குறிப்பிடுகிறது.

அதன் ஆய்வின்படி, 70 சதவிகித நிறுவனங்கள் தங்களின் சில செயல்பாடுகளை ஆட்டோமேட் செய்ய உள்ளன. இதனால் ஏற்படும் வேலையிழப்பை ஆட்டோமேஷன் துறையில் ஏற்படக்கூடிய வேலை வாய்ப்பு ஓரளவுக்கு சரி செய்யக்கூடும். மேற்குறிப்பிட்ட புதிய போக்குகளால் அவை சார்ந்த துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் ஏற்படலாம். அந்த வகையில் இந்த எட்டு புதியப் போக்குகள்தான் இனிவரும் காலத்தை வரையறுக்கும் என்று நாம் சொல்ல முடியும். எனவே, புது இயல்பு நிலைக்கு நம்மை பழக்கிக்கொண்டு புதிய போக்குகளை எதிர்கொள்வோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x