Published : 09 Nov 2021 12:10 PM
Last Updated : 09 Nov 2021 12:10 PM
பயிற்சியாளர் ரவி சாஸ்திரி - கேப்டன் விராட் கோலி கூட்டணி ஒரு ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) தொடரையும் வெல்லாமலேயே முடிவுக்கு வருகிறது. இடையில் ஓராண்டைத் தவிர்த்து 2015 முதல் 2021 வரை பயிற்சியாளராக இருந்திருக்கிறார் ரவி சாஸ்திரி. 2017 முதல் மூன்று வடிவ கேப்டன் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார் கோலி. இவர்கள் கூட்டணியில் 2019-இல் 50 ஓவர் உலகக் கோப்பை, 2021-இல் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2021-இல் டி20 உலகக் கோப்பை என மூன்று தொடர்களைச் சந்தித்தும் ஒரு தொடரையும் வெல்லவில்லை.
இந்த மூன்று தொடர்களில் 2021 தொடரில் இறுதிக்கும், 2019-இல் அரையிறுதிக்கும் இந்திய அணி தகுதி பெற்றது. இந்த டி20 உலகக் கோப்பையில் சுற்றுப் போட்டியோடு மூட்டை முடிச்சைக் கட்டிவிட்டது இந்திய அணி. இதற்கு முன்பு தோனி - ரவி சாஸ்திரி கூட்டணியில் 2015-இல் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி (ரவி சாஸ்திரி இயக்குநராக இருந்தார்), 2016-இல் டி20 உலகக் கோப்பையையும் இந்தியா வெல்லவில்லை. ஆக, ஒரு ஐசிசி தொடரையும் வெல்லாமலேயே ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.
ஹூட்டில் என்ன இருக்கு?
ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஷேர்சாட், யூடியூப், வாட்ஸ் அப் என அணிவகுக்கும் சமூக ஊடகங்களுக்குப் பஞ்சமே இல்லை. அந்த வரிசையில் நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா தொடங்கிய ‘ஹூட்’டும் சேர்ந்திருக்கிறது. எண்ணங்களையும் கருத்துகளையும் குரல் வழியாகச் சொல்லும் செயலி இது. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் சொல்ல வேண்டிய விஷயங்களைப் பெரும்பாலும் தட்டச்சு செய்துதான் சொல்ல முடியும். வீடியோ, ஆடியோவாகச் சொல்லவும் வசதி இருக்கிறது.
ஆனால், ‘ஹூட்’ செயலியில் குரல் வழியாக நம்முடைய எண்ணங்களைப் பகிரலாம். இதற்காக செயலியில் உள்ள ரெக்கார்டரை இயக்கினால் போதும். பேச வேண்டியதைப் பேசிவிடலாம். பிற சமூக ஊடகங்களில் இருப்பதுபோலவே லைக், கமெண்ட், ஷேர் பட்டன்களும் இதில் உள்ளன. ‘ஹூட்’ செயலியைத் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் இயக்கலாம். சர்வதேச மொழிகள் சிலவும் தற்போது இந்தச் செயலியில் கிடைக்கின்றன. இரு வாரங்களிலேயே இந்தச் செயலி, லட்சம் பதிவிறக்கத்தைத் தாண்டியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT