Published : 26 Oct 2021 10:58 AM
Last Updated : 26 Oct 2021 10:58 AM
பயனர்களின் பயன்பாட்டைப் பொறுத்துப் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துவது கூகுளின் வழக்கம். அந்த வகையில் கூகுள் காலண்டரில் புதிய அம்சம் ஒன்று அறிமுகமாக உள்ளது. ‘ஃபோகஸ் டைம்’ என்பதுதான் அந்த வசதி. இது அலுவலகம், கல்வி நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கான வசதி. கரோனா காலத்தில் வீட்டிலிருந்தே வேலை செய்யும் கலாச்சாரம் பெருகியுள்ள நிலையில், பல வேலைகள், ஆன்லைன் மீட்டிங்குகள், நிகழ்வுகள் போன்றவை அணிவகுக்கலாம். சில வேளைகளில் ஒரே நேரத்தில் இரு நிகழ்வுகளுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் போகலாம் அல்லது மற்ற நிகழ்வுகளுக்கான பணிகளைச் செய்ய முடியாமலும் போகலாம். ஆனால், ‘ஃபோகஸ் டைம்’ வசதியை ஆக்டிவேட் செய்துவைத்தால் ஒரே நேரத்தில் இரு நிகழ்வுகளுக்கான நேரத்தை ஒதுக்க முடியாது. ஏற்கெனவே உள்ள நிகழ்வை எடுத்துரைத்துப் புதிய நிகழ்வை நிராகரித்துவிடும். இதனால், வேலையில் முழு கவனம் செலுத்தவும் முடியும். இன்னொரு நிகழ்வை மாற்றியும் வைத்துக்கொள்ளலாம்.
ஹாரிபாட்டர் வாட்ச்
புகழ்பெற்ற ஹாரிபாட்டர் கற்பனைக் கதைகளில் வந்த பல அம்சங்கள், ஏற்கெனவே நிஜத்திலும் அறிமுகமாகியிருக்கின்றன. ஹாரிபாட்டரின் முதல் பாகத்தில் வெளிவந்த கடிகாரத்தை மையமாக வைத்து ஒன்பிளஸ் நிறுவனம் ‘ஹாரிபாட்டர் வாட்ச்’சை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வாட்சில் நிறைய ஹாரிபாட்டர் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. வட்ட வடிவிலான டிஸ்பிளேவைக் கொண்டுள்ள இந்த வாட்சின் அடிபாகம், ஹாரிபாட்டர் தீம்களில் கொடுக்கப்பட்டுள்ளன. ஃபிட்னஸ் வாட்சுகள் இளைஞர்களை மையம்கொண்டுள்ள வேளையில், அதை மையப்படுத்தி இந்த வாட்ச்கள் சந்தைக்கு வந்துள்ளன. இதில் 110 வொர்க் அவுட்கள் இடம்பெற்றுள்ளன. வாட்ச்சின் விலை 16,999 ரூபாய்!
வாழை இலை பேக்கிங்!
சுற்றுச்சூழலையும் மனிதர்களின் உடல் நலனையும் பற்றிக் கவலைப்படமால், சூடான உணவுப் பொருட்களைக்கூட பிளாஸ்டிக்கில் பொட்டலமாகத் தரும் காலம் இது. ஆனால், தாய்லாந்தில் உள்ள ரிம்பிங் என்கிற சூப்பர் மார்க்கெட், வாழை இலையில் பேக் செய்து அசத்துகிறது. 80 ஆண்டுகளுக்கு முன்பு சியான்மாய் நகரில் தொடங்கப்பட்ட இந்த சூப்பர் மார்க்கெட்டை ‘பச்சை மாளிகை’ என்றே மக்கள் அழைக்கிறார்கள். காய்கறி, பழங்கள், மளிகை, உணவு என இங்கே எதை வாங்கினாலும், வாழை இலையில் மட்டுமே பேக் செய்து கொடுக்கிறார்கள். பிளாஸ்டிக் கவர்களைப் பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்குச் சிறப்புச் சலுகையும் தருகிறார்கள். தாய்லாந்தில் வாழை விளைச்சல் அதிகம் என்பதால், இந்த உத்தியைப் பயன்படுத்துகிறார்கள். இந்த வித்தியாசமான சூப்பர் மார்க்கெட் பற்றிய ஒளிப்படங்களைச் சமூக ஊடகங்களில் ஒருவர் பகிர, அந்த ஒளிப்படங்கள் வைரல் ஆகிவிட்டன.
தொகுப்பு: டி.கே
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment