Published : 24 Oct 2021 11:40 AM
Last Updated : 24 Oct 2021 11:40 AM
பிரிட்டனில் பணிக்குச் செல்லும் மகளிரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில் பங்கேற்ற 99 சதவீதப் பெண்கள் இயற்கையான உடல்நிலை மாற்றமான மாதவிடாய் நிற்றல் காலகட்டத்தில் ஏற்படும் சிக்கல்களும் பணியிடத்தில் உதவிகரமான சூழல் இல்லாமல் இருப்பதும் தங்கள் பணிவாழ்வைப் பாதிப்பதாகக் கூறியுள்ளனர். மாதவிடாய் நிற்றல் நிபுணர் மருத்துவர் லூசி நியூசன் என்பவர் நடத்தும் லாபநோக்கற்ற மருத்துவ ஆய்வு நிறுவனம் சார்பில் 3,800 பெண்களிடம் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. மாதவிடாய் நிற்றல் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதே இந்தக் கருத்துக்கணிப்பின் நோக்கம்.
இதில் பங்கேற்ற பெண்களில் 59 சதவீதத்தினர் மாதவிடாய் நிற்றல் காலத்தில் பணியிலிருந்து விடுப்பு எடுத்துக்கொள்வதாகவும் 18 சதவீதத்தினர் எட்டு வாரம் வரை அந்த விடுப்பு நீள்வதாகவும் தெரிவித்துள்ளனர். பணித்திறன் குறைவது, மோசமான வேலை தரம், கவனிக்கும் திறனில் ஏற்படும் சிக்கல்கள் ஆகியவையே இதற்கு முதன்மையான காரணங்களாகச் சுட்டப்பட்டிருக்கின்றன. ஐந்தில் ஒருவர் மாதவிடாய் நிற்றலின்போது நிகழும் உடல்நலச் சிக்கல்களின் காரணமாகவே பதவி உயர்வு வாய்ப்பை ஏற்க மறுத்துவிடுவதாகத் தெரிவித்துள்ளனர்.
60 சதவீதத்தினர் தங்கள் பணியிடங்களில் மாதவிடாய் நிற்றலை எதிர்கொள்ளத் தேவையான ஆதரவு கிடைப்பதில்லை என்று கூறியுள்ளனர். இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகள், பணியிடங்களில் மாதவிடாய் நிற்றலுக்கு ஆதரவான சூழலை ஏற்படுத்தும் என்றும் நியூசன் தெரிவித்துள்ளார். மேலும் மாதவிடாய் நிற்றல் குறித்த ஆதாரபூர்வமான தகவல்கள் மற்றும் சிகிச்சையைப் பெற்று உடல்நலச் சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் இந்த ஆய்வு உணர்த்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போராடிய மாணவியர் மீது கொடூரத் தாக்குதல்
உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தபோது விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார். முன்னதாக அக்டோபர் 10 அன்று அஜய் மிஸ்ரா அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் மாணவர் அமைப்பான அனைத்திந்திய மாணவர் சங்கம் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டு வாசலில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் பங்கேற்றவர்களை அப்புறப்படுத்திய காவல்துறையினர் அவர்களைத் தடுப்புக் காவலில் வைத்துவிட்டு விடுவித்தனர்.
இந்தச் சூழலில் இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற மாணவியர் இருவரைப் பெண் காவலர்கள் சிலர் கடுமையாகத் தாக்கியதாகப் பாதிக்கப்பட்ட 20 வயது மாணவி ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவுசெய்தார். காவலர்கள் தன்னையும் இன்னொரு மாணவியையும் வெவ்வேறு இடங்களில் வைத்து ஆடையைக் களைந்து அவமதித்ததாகவும் பிறப்புறுப்பில் தொடர்ந்து பல முறை கால்களால் மிதித்ததாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார். மேலும், வலியில் துடித்து அழும் அளவுக்குத் தன்னை அடித்ததோடு உடனடி மருத்துவ சிகிச்சையைப் பெற விடாமல் தடுத்ததாகவும் காவல்துறையினர் மீது அந்தப் பெண் குற்றம்சாட்டியிருக்கிறார். மாணவியர் மீதான இந்தக் கொடூர தாக்குதலுக்காகச் சமூக ஊடகங்களில் பலர் டெல்லி காவல்துறையை விமர்சித்தனர்.
இதையடுத்து டெல்லி காவல்துறை தலைமையகத்தின் முன்னிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியர் மீதான தாக்குதலைக் கண்டித்தும் தாக்குதலுக்கு உத்தரவிட்டதாகக் குற்றம்சாட்டப்படும் சாணக்யபுரி காவல் நிலையத்தின் உதவி ஆணையர் பிரக்யா ஆனந்த் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் மகளிர் அமைப்புகளும் மாணவர் அமைப்புகளும் அக்டோபர் 13 அன்று போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று டெல்லி காவல்துறை இணை ஆணையர் ஜஸ்பால் சிங் வாக்குறுதி அளித்துள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் 44 விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பான ‘சம்யுக்த கிசான் மோர்சா’ மாணவியர் மீதான டெல்லி காவல்துறையினரின் தாக்குதலைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. உதவி ஆணையர் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்னும் மாணவியரின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. பெண்கள் பாதுகாப்பாகவும் கண்ணியத்துடனும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவே மகளிர் காவல்துறை என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. காவல்துறை பெண்களை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்குப் பல்வேறு விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், பெண்கள் போராட்டக் குரல் எழுப்பும்போது அந்தக் காவல்துறை விதிமுறைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு ஒடுக்குமுறை சிந்தனை முன்னிலை பெற்றுவிடுகிறது. இந்தப் போக்கை பின்பற்றுவதில் ஆண் காவலர்களுக்கும் பெண் காவலர்களுக்கும் பெரிய வேறுபாடு இருப்பதில்லை என்னும் வேதனைக்குரிய உண்மையை இந்தச் சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT