Published : 15 Mar 2016 12:09 PM
Last Updated : 15 Mar 2016 12:09 PM
செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருக்குமா என்ற கேள்விக்கு பூமியில் உள்ள அடகாமா பாலைவனம் விடையளிக்கிறது. செவ்வாய் கிரகத்திலுள்ள நிலப்பரப்புக்கு ஈடாக உலகிலேயே வறண்ட பகுதி என்று கருதப்படும் இடத்தில் செவ்வாய் கிரக ஆய்வகம் ஒன்றை உருவாக்கி நாஸாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆராய்ந்துள்ளனர். எப்படியான உயிரினங்கள் வாழ முடியும் என்பதற்கான ஆய்வுகளையும் அங்கே நடத்தியுள்ளனர்.
குறைந்தபட்ச அளவே நீர்வளமும், அதிகபட்ச புற ஊதாக் கதிர்வீச்சும் கொண்ட நிலப்பரப்பாக சிலி நாட்டில் உள்ள அடகாமா பாலைவனம் கருதப்படுகிறது. இந்த நிலப்பரப்பிலுள்ள பாறைகளின் அடிப்பகுதி மற்றும் மடிப்புகளுக்குள் நுண்ணுயிர் கூட்டங்கள் தவிர வேறு எந்த உயிர்களும் இல்லை.
செவ்வாய் கிரகத்திலும் உயிரினங்கள் இருக்கும் வாய்ப்பு இருக்குமானால் இதே மாதிரியான நுண்ணுயிர்கள் மட்டுமே அங்கு வாழ சாத்தியம் உள்ளது என்கிறார்கள் நாஸா விஞ்ஞானிகள். ஒரு மாத காலம் கள ஆய்வுப் பணிகளுக்குப் பின்னர் இந்த முடிவுக்கு வந்துள்ளனர் ஆய்வாளர்கள். அடகாமா பாலைவனத்தில் நிலவும் அதிகபட்ச வறண்ட தன்மை செவ்வாய் கிரகத்தையொத்த பண்புகளைக் கொண்டது.
உயிர் காட்டிகள்
செவ்வாய் கிரகத்தின் குளிர் மற்றும் வறண்ட நிலைகள், அதன் நிலப்பரப்புக்குக் கீழே உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியங்களைத் தெரிவிக்கின்றன. ஏனெனில் மேற்பரப்பில் இருக்கும் கதிர்வீச்சின் பாதிப்பு, நிலத்துக்குக் கீழே குறைவாகவே இருக்கும். இதுவரை ரோபாக்கள் வழியாகவே செவ்வாய் கிரக ஆராய்ச்சிகள் நடந்துள்ளன.
அடகாமா பாலைவனப் பரிசோதனையில் இருபதுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பங்குபெற்றுள்ளனர். அமெரிக்கா, சிலி, ஸ்பெய்ன் மற்றும் பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்தவர்கள் உச்சபட்ச புழுதிப் புயல் அடிக்கும் சூழ்நிலையில் இங்கே தங்கள் ஆய்வை நிகழ்த்தியுள்ளனர். இந்த ஆய்வுகள் நடத்தப்பட்ட இடம் யுங்காய் நிலையம் என்றழைக்கப்படுகிறது. ஆளற்ற சுரங்க நகரமான இந்த இடம் அன்டபாகஸ்டா பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT