Published : 08 Oct 2021 08:20 PM
Last Updated : 08 Oct 2021 08:20 PM
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களின் மூலம் 15 GW அளவுக்கு தமிழ்நாட்டில் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது. வெற்றிகரமாக நிறுவப்பட்டு இருக்கும் இந்தத் திட்டங்கள், மின்னுற்பத்தியில் 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி தமிழ்நாடு நகர்வதற்கான சூழலை உருவாக்கி உள்ளது. இந்த ஆக்கப்பூர்வமான சூழலைப் பயன்படுத்தி, புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கிய 100 சதவீத நகர்வை துரிதப்படுத்த அரசாங்கமும் நாமும் என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்த இணையவழிக் கலந்துரையாடலை, கிளைமேட் டிரண்ட்ஸ்-பூவுலகின் நண்பர்கள் அமைப்புகள் இணைந்து சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தது.
அந்தக் கலந்துரையாடலில், மாநில ஆற்றல் துறையின் முதன்மைச் செயலாளரான டிபி யாதவ், ஐ.இ.இ.ஃப்.ஏ நிறுவனத்தின் ஆற்றல் பொருளாதார நிபுணரான காஷிஷ் ஷா, சூரிய ஆற்றல் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் அசோக் குமார், ஆரோவில் கன்சல்டிங் குழுமத்தின் இணை நிறுவனர் மார்ட்டின் ஷெஃர்ப்லெர் ஆகியோர் பங்கேற்று தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
மாநில எரிசக்தி முதன்மை செயலாளர் டிபி யாதவ், புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவதன் மூலம் நிலக்கரி அடிப்படையிலான ஆற்றல் உற்பத்தியிலிருந்து படிப்படியாக வெளியேற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். ”தற்போது, இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 16 சதவீதமாக இருக்கிறது. மாநில அளவில் எடுத்துக்கொண்டால், மொத்த மின்னுற்பத்தியில் 42 சதவீதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் பெறப்படுகிறது. இந்த நிலையை இன்னும் மேம்படுத்தப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் மூலம் மின்னுற்பத்தி செய்யும் திட்டங்களை தமிழ்நாடு அதிகம் நிறுவ வேண்டும்” என்றார்.
பசுமை ஆற்றல் மாற்றத்தில் மாநிலத்தின் தலைமைத்துவம் குறித்து ஆற்றல் பொருளாதார நிபுணர் காஷிஷ் ஷா பேசுகையில், "தமிழ்நாடு காற்றாலை மின்னுற்பத்தியில் முன்னணியில் உள்ளது. பழைய காற்றாலைகளை நவீனமயமாக்குவதன் மூலம் காற்று மின்னுற்பத்தியை மேலும் அதிகரிக்க முடியும். தமிழ்நாடு அரசு இதை உடனடியாகச் செயல்படுத்தி, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக மாற வேண்டும்” என்று கூறினார்.
மாநில திட்டக்குழு உறுப்பினராக இருக்கும் திமுக சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா பேசுகையில், கடந்த சில மாதங்களில் இரட்டிப்பாகி இருக்கும் மின் வாகனங்களின் எண்ணிக்கை, உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சூரிய ஆற்றலின் மூலம் சார்ஜ் செய்யும் உள்கட்டமைப்பை ஏற்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன என்று தெரிவித்தார்.
"எங்கள் அரசாங்கம் பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளைக் கூர்ந்து கவனித்துவருகிறது. நிலையான ஆற்றல் குறித்த உலகளாவிய பார்வையை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அதற்கான முன்னெடுப்புகளையும் நாங்கள் உடனடியாக மேற்கொண்டு வருகிறோம். எதிர்காலத்தில் மின் வாகனங்கள் மிகப்பெரிய ஆற்றல் நுகர்வோராக இருக்கும். அது சூரிய ஆற்றலைச் சார்ந்து இருக்கும் என்பதால், தமிழகத்தில் சூரிய உற்பத்தி 4,000 மெகாவாட் அதிகரிக்கப்படும். பத்து ஆண்டுகளில் 20,000 மெகாவாட் சூரிய ஆற்றல் மின்னுற்பத்தி செய்யப்படும்” என்று டிஆர்பி ராஜா தெரிவித்தார்.
மேலும், “புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியைப் பொறுத்தவரை , நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் போட்டி போடுகிறோம். எங்களின் தரநிலைகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முடிந்தவரை நெருக்கமாக இருக்குமாறு வடிவமைத்து இருக்கிறோம். இது மற்ற இந்திய மாநிலங்களிலிருந்து தமிழகத்தை உயர்த்தி பிடிக்கிறது. தமிழக மக்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உடனடியாகப் பயன்படுத்தும் நிலைக்குச் செல்ல வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதற்கான சூழலை உருவாக்குவதே எங்களுடைய தலையாய பணி” என்று ராஜா உறுதிபடக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...