Published : 25 Sep 2021 03:32 AM
Last Updated : 25 Sep 2021 03:32 AM
இன்சுலினைக் கண்டுபிடித்து 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை யொட்டி உலகெங்கிலும் மருத்துவர் களும் பொதுமக்களும் அண்மையில் அதைக் கொண்டாடி மகிழ்ந்தனர். அதைத் தொடர்ந்து இப்போது பி.சி.ஜி. (BCG) தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. பி.சி.ஜி. காசநோயைத் தடுப்பதற்குப் போடப்படும் முதன்மைத் தடுப்பூசி. இது குழந்தைகள் பிறந்தவுடன் தோள்பட்டை அருகே போடப்படுகிறது. இது கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்பக் காலத்தில் குழந்தைகளுக்கு வாய்வழி மருந்தாகவே வழங்கப்பட்டது.
இது குழந்தைகளுக்கு ஏற்படும் காசநோயை மட்டுமல்லாமல் பலதரப்பட்ட வைரஸ் நோய்கள், சுவாசக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் போன்றவற்றையும் தடுக்கும்.நெஞ்சகக் காசநோயைத் தடுப்பதைவிட மூளைக் காசநோய் போன்ற மோசமான காசநோய் வகைகளைப் பெரிதும் தடுக்கும்.உடலின் தடுப்பாற்றல் மண்டலத்தைத் தூண்டி பொது ஆரோக்கியத்தை வலுப்படுத்தும்.மேலும், இது தொழுநோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. சிறுநீரகப்பைப் புற்றுநோய்க்கும் மெலனோமா புற்றுநோய்க்கும் இது தடுப்பு மருந்தாகப் பயன்படுகிறது. உலகில் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்துவருவதற்கு பி.சி.ஜி. தடுப்பூசியும் முக்கியக் காரணம்.
பி.சி.ஜி. அறிமுகம்
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆல்பர்ட் கால்மெட் (Albert Calmette), கமில் கியூரான் (Camille Guerin) எனும் இரண்டு பிரெஞ்சு அறிவியலாளர்கள் பி.சி.ஜி. தடுப்பூசி யைக் கண்டுபிடித்தனர். அதனால்தான் இந்தப் பெயர் (Bacillus Calmette Guerin – BCG). பசுக்களுக்குக் காசநோயை உருவாக்கும் மைக்கோபாக்டீரியம் போவிஸ் (Mycobacterium bovis) எனும் பாக்டீரியத்தின் வீரியத்தைக் குறைத்து இந்தத் தடுப்பூசியை உருவாக்கினர். காசநோய்க் கிருமிகள் மிகவும் மெதுவாகவே வளரும் என்பதால், இந்தத் தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதற்கு 13 ஆண்டுகள் பிடித்தன. 1921இல் இது மனிதப் பயன்பாட்டுக்கு வந்தது. இன்றளவில் உலகில் காசநோயைத் தடுப்பதற்குச் செலுத்தப்படும் ஒரே தடுப்பூசி பி.சி.ஜி. மட்டுமே. தடுப்பூசிகளிலேயே பக்கவிளைவுகள் இல்லாததும் மிகுந்த பாதுகாப்பு கொண்டதும் இதுவே. உலகெங் கிலும் ஆண்டுதோறும் சுமார் ஒரு கோடியே 20 லட்சம் தவணைகள் பி.சி.ஜி. தடுப்பூசி செலுத்தப்படுவது வழக்கத்தில் உள்ளது. இந்தியாவில் 1948இல் இது குறிப்பிட்ட வட்டாரத்துக் குழந்தை களுக்கு மட்டும் செலுத்தப்பட்டது. பிறகு 1962இல் தேசியக் காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் இது இணைக்கப்பட்டு இந்தியக் குழந்தைகள் அனைவருக்கும் செலுத்தப்படுவது கட்டாயமானது.
தடுப்பாற்றலில் வேறுபாடு!
மற்ற தடுப்பூசிகளைப் போலில்லாமல், பி.சி.ஜி. தடுப்பூசி எல்லா நாடுகளிலும் ஒன்றுபோல் தடுப்பாற்றலைத் தருவதில்லை என்பது இதிலுள்ள ஒரு குறை. சில நாடுகளில் மிக நன்றாகவும் பல நாடுகளில் குறைவாகவும் இது செயல்படுவதை ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். முக்கியமாக, நிலநடுக் கோட்டுக்கு அப்பால் இருக்கும் நாடுகளில் அதிகச் செயல்பாடும், அதன் அருகிலுள்ள நாடுகளில் குறைந்த செயல்பாடும் உள்ளதை அவர்கள் அறிந்துள்ளனர். உதாரணத்துக்கு, நிலநடுக் கோட்டுக்கு அப்பால் இருக்கும் இங்கிலாந்து, நார்வே, ஸ்வீடன், டென்மார்க் ஆகிய நாடுகளில் இது காசநோய்க்கு எதிராக நல்ல தடுப்பாற்றலைத் தந்திருக்கிறது. ஆனால், காசநோய் அதிகம் பரவியுள்ள, நிலநடுக் கோட்டுக்கு அருகிலுள்ள இந்தியா, கென்யா, மலாவி போன்ற நாடுகளில் இந்தத் தடுப்பூசி அவ்வளவாகப் பலன் அளிக்கவில்லை.
முக்கியமாக, வயது வந்தவர்களுக்குக் காசநோய் ஏற்படுவதைத் தடுப்பதில்லை என்பது இதில் உள்ள பெருங்குறை. 1968க்கும் 1983க்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சார்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் வயதாக ஆக பி.சி.ஜி.யின் தடுப்பாற்றல் குறைந்து வருகிறது என்பதால், குழந்தைகளுக்கு 27 சதவீதத் தடுப்பாற்றல்தான் தருவதாகவும் பெரிய வர்களுக்குச் சிறிதளவுகூடத் தடுப்பாற்றல் தருவதில்லை என்பதையும் உறுதிசெய்தனர். இந்தியச் சுற்றுச்சூழலில் மனிதர்களுக்குக் காசநோயை ஏற்படுத்தும் மைகோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் பாக்டீரியாக் களின் ஆதிக்கம் அதிகம் என்றும், அவை பி.சி.ஜி.யின் வீரியத்துக்குச் சவால் விடுகின்றன என்றும் அவர்கள் காரணம் தெரிவித்துள்ளனர்.
காசநோய் ஒழிப்பு சாத்தியமா?
காசநோய் என்பது இன்று நேற்று ஏற்பட்டதல்ல; பொ.ஆ.மு. (கி.மு.) 3000 ஆண்டுகளுக்கு முன்பு உருவான எகிப்திய பிரமிடுகளில் இந்த நோய் குறித்த குறிப்புகள் இருப்பதை வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், காசநோய்க்குப் பிறகு உலகில் பரவத் தொடங்கிய பெரியம்மை, தொழுநோய், காலரா, பிளேக், போலியோ போன்றவற்றைக்கூடத் தடுப்பூசிகள் மூலம் ஒழித்துவிட்டோம்; அறிவியல் துறையில் புகுந்துள்ள நவீனத் தொழில்நுட்பங்களின் துணையுடன் நன்றாகக் கட்டுப்படுத்தி விட்டோம். ஆனால், இன்னமும் காசநோய் மட்டும் உலக அளவில் பிரச்சினைக்குரிய தொற்றுநோயாக நீடிக்கிறது. உலகச் சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி 2019இல் மட்டும் ஒரு கோடிப் பேருக்குப் புதிதாகக் காசநோய் பரவியிருக்கிறது. 14 லட்சம் பேர் காசநோயால் இறந்திருக்கின்றனர். இந்த இறப்பில் 27 சதவீதத்தினர் இந்தியர்கள்.
2025க்குள் இந்தியாவில் காசநோயை ஒழித்துவிட வேண்டும் எனும் குறிக்கோளுடன் செயல்படும் இந்த நேரத்தில், காசநோயைக் குணமாக்கும் நவீன மருந்துகளும் பி.சி.ஜி.யை விட அதிக ஆற்றல் கொண்ட தடுப்பூசிகள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட வேண்டிய கட்டாய மும் ஏற்பட்டுள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த பத்தாண்டுகளில் உலக அளவில் 14 புதிய தடுப்பூசிகள் காசநோய்க்குக் கண்டுபிடிக்கப்பட்டு, தன்னார்வலர்களிடம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் இந்தியத் தடுப்பூசிகளும் உண்டு. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் கண்டுபிடிப்புகளான வி.பி.எம்., 1002 (VPM 1002), ‘எம்.ஐ.பி’ (Mycobacterium indicus pranii - MIP) ஆகியவை மூன்றாம் கட்ட ஆய்வில் இருக்கின்றன. இவை மிக விரைவிலேயே மனிதப் பயன்பாட்டுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கரோனாவும் பி.சி.ஜி.யும்
கரோனா பரவத் தொடங்கி உலக மக்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்திருந்தபோது கரோனாவை பி.சி.ஜி. தடுப்பூசி தடுக்கிறது என்கிற கருத்து வலுப்பெற்று, மன ஆறுதல் கொடுத்ததையும் இங்கே குறிப்பிட வேண்டும். கோவிட 19 நோயால் இறந்தவர்களின் புள்ளிவிவரங்களைக் கவனித்தபோது பி.சி.ஜி. தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வழக்கமுள்ள நாடுகளில் இறப்பு விகிதம் ஆறு மடங்கு குறைவாக இருப்பதுதான் காரணம். பி.சி.ஜி. தடுப்பூசி வழக்கத்தில் இல்லாத இத்தாலியில் கரோனாவால் இறந்தவர்கள் 100க்கு 12 பேர்; ஸ்பெயினில் 29 பேர்; அமெரிக்காவில் இதுவரை 5 பேர். அதேநேரம் இந்தத் தடுப்பூசி போடும் வழக்கமுள்ள சீனாவில் இறப்பு விகிதம் 0.14%; ஜெர்மனியில் 1.8%. இந்தியாவில் இந்தத் தடுப்பூசி போடப்படும் வழக்கம் இருப்பதால் அமெரிக்கா, இத்தாலி போன்று இங்கே இறப்பு விகிதம் இதுவரை கூடவில்லை என்பதும் இந்தக் கருத்துக்கு வலுச்சேர்க்கிறது.
உலக அளவில் கரோனா பரவத் தொடங்கிய கடந்த 18 மாதங்களில் கரோனாவுக்கு எதிராக 17 தடுப்பூசிகள் அவசரக் காலப் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டதும் 97 தடுப்பூசிகள் பல கட்ட ஆராய்ச்சிகளில் இருப்பதையும் ஒப்பிடும்போது காசநோய்க்கு பி.சி.ஜி. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு ஒரு நூற்றாண்டு காலம் நிறைவுற்றாலும், பி.சி.ஜி. தடுப்பூசி தவிர வேறு புதிய தடுப்பூசிகள் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை என்பது இன்றுள்ள அறிவிய லாளர்களுக்கான சவாலாகவே கருதப்படுகிறது. காரணம், கரோனா தடுப்பூசி ஆய்வுகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியோடு ஒப்பிடும்போது, காசநோய்க்கான தடுப்பூசி ஆய்வுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மிகவும் சொற்பம். ஆகவே, காசநோய் ஒழிப்பில் தீவிரம் காட்டும் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இனிமேலாவது புதிய ஆராய்ச்சிகளுக்குப் போதிய நிதி ஒதுக்கி, கரோனாவுக்குத் தடுப்பூசி கண்டுபிடித்ததுபோல் காசநோய்க்கும் ஆற்றலுள்ள தடுப்பூசியைக் கண்டுபிடித்தாக வேண்டும்.
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT