Published : 16 Feb 2016 11:53 AM
Last Updated : 16 Feb 2016 11:53 AM

ஆங்கிலம் அறிவோமே - 97: மின்னுவதெல்லாம் பொன் அல்ல

ஒரு வாசகர் “Italian pizza என்கிறோம், Indian railway என்கிறோம், ஆக நாட்டின் பெயருடன் ‘n’ அல்லது ‘an’ போட்டால் இப்படிப்பட்ட வார்த்தைகளை அமைத்துவிட முடியும் அல்லவா?” என்றார். அவரின் கேள்விக்கு “அல்லவே அல்ல” என்றுதான் பதிலளிக்க முடிகிறது. அவர் French fries சாப்பிட்டவர். Swiss razor - ஐப் பயன்படுத்தியவர். Spanish delight ஐஸ்க்ரீமை சுவைத்தவர். அல்லது இவை எதையுமே செய்யாதவர் என்றபோதிலும் நமது பதில் அதுதான்.

உச்சரிப்புக் குறியீடுகள்

Phonetic symbols என்கிறார்களே இவை என்ன என்பது ஒரு நண்பரின் கேள்வி.

ஒரு வார்த்தையை எப்படிப் படிப்பது? முதலில் தமிழ் உச்சரிப்பைப் பார்ப்போம். பலூன் என்ற வார்த்தையை எப்படி உச்சரிப்பது? ஆங்கில வார்த்தை தெரிந்தவர்கள் (Balloon) அதை சரியாக உச்சரிப்பார்கள். ஆங்கிலம் தெரியாது என்று வைத்துக் கொள்ளுங்கள். பலூன் என்ற வார்த்தையில் முதலில் இடம் பெறும் ‘ப’ என்ற எழுத்தை எப்படி உச்சரிப்பது? பங்காளி என்ற வார்த்தையில் ‘ப’ என்ற எழுத்தை எப்படி உச்சரிப்போமோ அப்படி அழுத்தமாகவா? அல்லது இன்பம் என்ற வார்த்தையில் ‘ப’ என்ற எழுத்தை எப்படி உச்சரிப்போமோ அப்படியா?

முன்பெல்லாம் சில பத்திரிகைகளில் இன்பத்திலுள்ள ‘ப’ என்ற எழுத்தை சரியாக உச்சரிக்க வேண்டுமென்றால் அந்த எழுத்தை கொஞ்சம் பெரிதாக அல்லது அழுத்தமாக அச்சிடுவார்கள். இதைப் புரிந்து கொண்டு அந்த வார்த்தைக்கு அதன் முன்பு அறிமுகம் ஆகாதவர்கள்கூட அதை சரியாக உச்சரித்துவிட முடியும். இப்படி சரியான உச்சரிப்புக்குப் பயன்படக் கூடிய குறியீடுகளை Phonetic symbols என்பார்கள்.

இப்போது ஆங்கிலத்துக்கு வருவோம். ஆங்கிலத்தை ‘கட்-புட் மொழி’ என்பதுண்டு. அதாவது cut என்பது கட் என்றால் put என்பது ‘பட்’ தானே? ஆனால் அதை புட் என்று சொல்கிறோம் இல்லையா? ஆக ஆங்கிலத்தில் எழுத்தை மட்டும் கொண்டு சரியாக உச்சரித்துவிட முடியும் என்று கூற முடியாது. (போதாக்குறைக்கு silent letters வேறு).

Cup, look ஆகிய வார்த்தைகள் நமக்கு ஏற்கெனவே அறிமுகமானவை. எனவே, அவற்றை சரியாகவே கப், லுக் என்று உச்சரிக்கிறோம். ஆனால், ஒருவேளை அந்த வார்த்தைகளை இப்போதுதான் முதல் முறையாகப் படிக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது cup என்ற வார்த்தையை ‘குப்’ என்றுதானே படிப்போம்? Look என்ற வார்த்தையை ‘லூக்’ என்றுதானே படிப்போம்?

இப்படி படித்துவிடக் கூடாது என்பதற்காகச் சில குறியீடுகளைப் பயன்படுத்துகிறார்கள். க என்ற எழுத்து க் + அ ஆகிய இரண்டையும் சேர்த்தால் கிடைப்பது. கு என்ற எழுத்து க் + உ ஆகிய இரண்டையும் சேர்த்தால் கிடைப்பது.

ஒரு எழுத்தைத் தொடர்ந்து ^ என்ற குறியீடு இருந்தால் ‘+ அ’ என்று படிக்க வேண்டும். Cup என்று எழுதிவிட்டு அடைப்புக்குறிக்குள் k^p என்று எழுதினால் அது ‘கப்’தான். ‘குப்’ அல்ல என்பது புரிந்துவிடும். ஆக u, p ஆகிய எழுத்துகளுக்கு இடையே இருப்பது phonetic symbol.

“அலுவலகத்தில் நான் பேசிக்கொண்டி ருந்த போது ஒருவர் “This is sheer fiddle-faddle” என்றார். அர்த்தம் புரியாததால் சங்கடமாக இருந்தது. அகராதியும் உதவவில்லை. அவர் கூறியதற்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசக நண்பர். அதன் அர்த்தம் புரிந்ததால் அதைக் கூற எனக்குக் கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது. Fiddle-faddle என்றால் மிகவும் அபத்தம் என்று அர்த்தம். அதாவது utter nonsense.

இப்படி ஆங்கிலத்தில் வேறு சில வார்த்தைகளும் உண்டு. ஏதோ எதுகைமோனைக்காக அர்த்தமில்லாமல் சேர்க்கப்படும் வார்த்தைகள். (தமிழில்கூட இப்படிப்பட்ட வார்த்தைகளுக்குப் பஞ்சமில்லை. அவன் நல்லா ‘வகதொகையா’ வளர்ந்திருக்கான். அவர் ஒண்ணும் ‘ஏப்பசாப்ப’ இல்ல என்பதுபோல்). ஆங்கிலத்தில் இதுபோன்ற வார்த்தைகளை flip-flop words என்பார்கள்.

Here everything is hunky dory என்றால் ‘எல்லாம் நலமாக இருக்கிறது’ என்று அர்த்தம். மாறாக helter skelter என்றால் எல்லாம் மிகவும் குழப்பமாக இருக்கிறது என்று அர்த்தம். “அடடா. திடீர்னு வந்துட்டீங்களே வீடு ரொம்ப helter skelter -ஆ இருக்கு. அஞ்சு நிமிஷம் கொடுங்க, சரி பண்ணிடறேன்”.

சில ஆங்கில நூல்களிலும், ஆங்கில நாளிதழ் தலையங்கங்களிலும் அடிக்கடி இடம் பெறும் வார்த்தைள் ‘hoi polloi’. இதற்குப் பொருள் ‘சாதாரண, சராசரி மனிதர்கள்’.

Bigwig என்றால் வி.ஐ.பி.

Claptrap என்றால் அற்பப் பேச்சு. அதாவது நம்பக் கூடாத அளப்பு. Do not believe what he says. It is just a load of claptrap.

Why are you dilly dallying? என்று கேட்டால் எதற்காக எதையும் செய்யாமல் நேரத்தை வீணாக்குகிறாய் என்று அர்த்தம். இப்படி இருப்பவர்கள் “Ho-hum” என்று சொல்லக் கூடும். இது போரடிக்கிறது என்பதை உணர்த்தும் வார்த்தைகள் இவை.

Downtown என்றால் நகருக்குள் என்று பொருள். She works downtown, but live in the suburbs.

சிப்ஸ்

* Hinny என்பது என்ன மிருகம்?

கலப்பு இனம். அதன் அப்பா குதிரை. அம்மா கழுதை.

* You have much time in hand என்பது சரியா? அல்லது on hand என்பது சரியா?

You have much time on hand என்பதே சரி.

* Open minded என்றால் வெளிப்படையாகப் பேசுவதா?

இல்லை. எதிர்க் கருத்து சரியென்றால் அதை ஏற்றுக்கொள்கிற பக்குவம்.

“ஓர் ஆங்கிலப் பழமொழியை கரடுமுரடான விதத்தில் கொடுத்திருக்கிறேன். கண்டுபிடியுங்கள்” என்ற முன்னுரையோடு ஒரு வாசக நண்பர் அளித்திருக்கும் புதிர் இது.

“Everything that sparkles with effulgence is not a yellow, malleable, ductile metallic element”.

All that glitters is not gold என்பதுதானே அந்தப் பழமொழி? அதாவது ‘மின்னுவதெல்லாம் பொன் அல்ல’.

(Sparkle என்றால் மின்னுதல். Malleable என்றால் நன்கு வளையக் கூடிய. Ductile என்றால் மெல்லிய கம்பியாக நீட்டக்கூடிய. Efflugence என்றால் எக்கச்சக்க பளபளப்பு).

சிறிது அவகாசம் கொடுத்திருந்தால் நாங்களே கண்டுபிடித்திருப்போமே என்று உங்களில் சிலர் ஆதங்கப்பட்டிருக்கக் கூடும். அல்லது அந்தக் கரடுமுரடாக்கப்பட்ட மொழிபெயர்ப்பைப் படிக்கும்போதே கூட சிலர் கண்டுபிடித்திருக்கலாம். உங்கள் அனைவருக்குமான ஒரு புதிர் கீழே இருக்கிறது. மற்றொரு ஆங்கிலப் பழமொழியைக் கரடுமுரடான விதத்தில் கார்ட்டூனில் காணலாம். கண்டுபிடியுங்கள்.

- தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x