Last Updated : 04 Jul, 2021 07:23 PM

 

Published : 04 Jul 2021 07:23 PM
Last Updated : 04 Jul 2021 07:23 PM

காசநோயாளிகள் கரோனாவுக்கு இலக்காகிறார்களா? தப்பிப்பது எப்படி?- டாக்டர் வி.பி.துரை பேட்டி

இந்தியாவில் தற்போது கரோனாவின் பாதிப்பை விடக் காசநோயின் பாதிப்பு அதிகமாக உள்ளதைப் புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன. ஆம். நம் நாட்டில் ஆண்டுதோறும் 4.5 லட்சம் பேர் காசநோயால் இறக்கின்றனர். கரோனா பெருந்தொற்றுக் காலகட்டத்தில் 10-20% காசநோயாளிகள் கூடுதலாக இறந்திருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு 62 ஆயிரம் காசநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

"கொலைகார நோய்களுக்கெல்லாம் தலைவன் காசநோய்" என்று 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மருத்துவர்கள் கூறுவார்கள். இன்றளவும் இதனை காசநோய் மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறது. காசநோய், கரோனா ஆகிய இரண்டு நோய்களும் பாதிக்கப்பட்ட நபர் இருமும்போதோ தும்மும்போதோ மற்றவர்களுக்குப் பரவுகின்றன என்பதால், காசநோய் பாதிப்பு கரோனாவுக்கான வழியை ஏற்படுத்திவிடுமா, காசநோயாளிகள் கரோனாவுக்கு இலக்காகிறார்களா, அவர்கள் கரோனாவிலிருந்து தப்பித்துக் கொள்வது எப்படி போன்ற முக்கியச் சந்தேகங்களுக்கு குமரி மாவட்ட காசநோய் ஒழிப்பு துணை இயக்குநர் டாக்டர் வி.பி.துரை விடையளிக்கிறார்.

காசநோயின் அறிகுறிகள் என்ன?

காசநோயை கரோனாவிற்கு பிக்பாஸ் என்று கூறலாம். கரோனாவிற்கும் காசநோய்க்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அறிகுறிகள். இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்றவை இரண்டு வியாதிகளுக்கும் பொதுவானவை. தற்பொழுது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு, காசநோய் கண்டறிதலில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே சிகிச்சையில் இருக்கும் காசநோயாளிகளுக்குத் தங்கு தடையின்றி மருத்து மாத்திரைகள் களப்பணியாளர்களால் வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகிறது. ஆனால், புதிய நோயாளிகளைக் கண்டறிவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம். ஒன்று, ஊரடங்கினால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இதில் காசநோயால் பாதிக்கப்பட்ட நபர்களும் அடங்குவர். இரண்டு, காசநோயின் அறிகுறிகள் கரோனாவிற்கும் பொருந்துவதால் எங்கே நம்மை தனிமைப்படுத்தி விடுவார்களோ என்ற அச்சத்தில் காசநோய் அறிகுறிகள் உள்ளவர்கள் மருத்துவமனைக்குச் செல்லாமல் அருகில் இருக்கும் மருந்துக்கடையில் மருந்துகளை உட்கொண்டு தற்காலிக நிவாரணம் பெறுகிறார்கள். இது நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

இரண்டு நோய்களுமே பொருளாதாரத்தைக் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. காசநோயினால் ஆண்டிற்கு 13,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம் இந்த நோய் நடுத்தர வயதுடையோரை பாதிப்பதே ஆகும்.

நோயாளிகள் என்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும்?

உடல் எடை குறைவது, மெலிதல், களைப்பு, சுவாசிக்க சிரமம் ஆகியவை காசநோய் மற்றும் கரோனா பாதிப்பின் பிரதான அறிகுறிகள். எனவே, காசநோயாளிகள், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் புரதச் சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். மொச்சை, கடலை, பயறு வகைகளைத் தினமும் சாப்பிடலாம். அசைவ உணவுப் பழக்கம் இருப்பவர்கள் கோழிக்கறி, மீன், முட்டை போன்றவற்றைச் சாப்பிடலாம். ஆட்டுக்கறியில் கொழுப்பு அதிகம் என்பதால் அதைத் தவிர்க்கலாம்.

காசநோயால் பாதிக்கப்பட்டவர் தடுப்பூசி போடலாமா?

காசநோயாளிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள எந்தத் தடையுமில்லை.

கரோனா பாதிப்பின்போது காசநோய் பரிசோதனை செய்ய வேண்டுமா?

சர்க்கரை நோய் காசநோய், கரோனா ஆகிய இரு நோய்களுக்கும் பெரிய பாதிப்பு காரணி. கோவிட் தொற்றும் காசநோயும் சர்க்கரை நோயாளிகளைத் தாக்கினால் இறப்பு சதவிகிதம் அதிகரிக்கும். ஒருவருக்கு கோவிட் பரிசோதனை செய்து அது நெகட்டிவ் என்று வந்துவிட்டால் வேறு ஒரு நோயும் தனக்கில்லை என்று விட்டுவிடக் கூடாது. 2 வாரத்திற்கு மேல் சளி இருமல் இருந்தால் அவர்கள் காசநோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மேலும் கரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களுக்குத் தொடர் இருமலிருந்தால் அவர்களும் காசநோய் (TB) பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இரண்டு நோயும் சேர்ந்திருக்க வாய்ப்புகள் உள்ளன.

புகைப் பிடிப்பது பாதிப்பைத் தீவிரமாக்குமா?

காசநோய், நுரையீரலின் சதைப் பகுதியைப் பாதிக்கும். அங்கிருந்து மெது மெதுவாகக் காற்றுப் பரிவர்த்தனை நடைபெறும் இடத்துக்கு வரும். ஆனால், கோவிட் தொற்று காற்றுப் பரிவர்த்தனை நடைபெறும் இடத்தையே அழிக்கும். அதனால்தான் கோவிட் தொற்றால் உடனடியாக அல்லது நாள் கணக்கில் உயிரிழப்பு நேர்கிறது. காசநோய் ஆபத்தானதுதான். ஆனால், மரணம் நிகழ மாதக் கணக்கில் ஆகிறது.

புகைப் பிடிக்காதவர்களுக்கு மூச்சுக்குழாயில் எதிர்ப்பு அணுக்கள் தயாராக இருக்கும். அது காசநோய்க் கிருமிகள் வந்தவுடன் அழித்துவிடும். ஆனால், புகைப் பிடிப்பவர்களுக்கு எதிர்ப்பு அணுக்கள் இருக்காது. அதனால் காசநோய், கரோனா ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, புகைப் பிடிப்பதை விட்டொழிப்பது நல்லது. மதுவை விடப் புகைப் பிடிக்கும் பழக்கம் ஆபத்தானது. பீடி, சிகரெட் உள்ளிட்ட எல்லா புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் உடலின் எல்லா உறுப்புகளும் பாதிக்கப்படும்.

ஆஸ்துமா, காசநோய், புற்றுநோய், கரோனா என எல்லா நோய்களுக்கும் நுரையீரல் பாதிப்புதான் காரணியாக விளங்குகிறது. எனவே நுரையீரலை வலுப்படுத்தப் புகை பிடிப்பதைத் தவிர்ப்பது அவசர அவசியம்.

முகக்கவசம் அணிவது அவசியமா?

காசநோயாளிகளுக்கும் இதர நுரையீரல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் குறைந்த நோய் எதிர்ப்பாற்றல் காரணமாக கரோனா தொற்று எளிதில் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிவதால் கரோனா, காசநோய், பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட சுவாசம் தொடர்பான மற்ற நோய்களும் குறைய வாய்ப்புள்ளது. கரோனா வைரஸ் தொற்று தற்போது கட்டுக்குள் இருந்தாலும், தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், அனைவரும் முகக்கவசம் அணிந்து வெளியில் செல்வதுதான் பாதுகாப்பானது.

இவ்வாறு டாக்டர் வி.பி.துரை தெரிவித்தார்.

க.நாகப்பன்,

தொடர்புக்கு: nagappan.k@hindutamil.co.in.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x