Published : 04 Jun 2021 09:42 AM
Last Updated : 04 Jun 2021 09:42 AM
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கிவரும் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பவர் பூஜா ஹெக்டே. இரண்டாம் அலைக் கரோனா தொற்றில் மிதமான பாதிப்புக்கு ஆளாகி மீண்டிருந்தார். கதாநாயகிகள் பலரும் கரோனா விழிப்புணர்வு வீடியோக்களைப் பதிவிட்டு வரும்நிலையில், பூஜா, 100 ஏழைக் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கிறார். அந்த 100 குடும்பங்களை தன்னார்வலர்கள் மூலம் கவனமாகத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான மளிகை பொருட்களை வழங்கியிருக்கிறார்.
வரலாறு முக்கியம்!
‘ஆரண்ய காண்டம்', ‘சூப்பர் டீலக்ஸ்’ என இரண்டு படங்களின் மூலம் முக்கிய இயக்குநர்களின் பட்டியலில் இடம் பிடித்துக்கொண்டவர் தியாகராஜன் குமாரராஜா. தற்போது தன்னுடைய மூன்றாவது படத்துக்கான திரைக்கதையை எழுதி வருகிறார். இம்முறை அவர் எழுதி வருவது வரலாற்றுக் கதைக் களன். திரைக்கதை முழுமையாக முடிந்த பிறகே நடிகரையும் தயாரிப்பாளரையும் முடிவு செய்ய இருக்கிறாராம்.
கரோனாவே கதறியது!
கரோனா இரண்டாம் அலைப் பெருதொற்றின் தீவிரத்தால் இந்தியா நொந்து நூலாகிக் கிடக்கிறது. மருத்துவ உதவிகேட்டும், ‘கருப்புப் பூஞ்சை நோய் சிகிச்சைக்கு இந்த மருந்து உடனடியாகத் தேவை.. வழிகாட்டுங்கள்’ எனக் கதறியும் நூற்றுக்கணக்கில் ட்வீட்டுகள் வந்துகொண்டிருக்கும் இக்கட்டான தருணம் இது. இச்சமயத்தில் அஜித், விஜய் ஆகிய இரண்டு முன்னணி நடிகர்களின் பெயரால் ட்விட்டரில், எதிரும் புதிருமான இரண்டு #ஹேஷ்டேக்குகளை உருவாக்கி அவற்றை இந்திய அளவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பிரபலப்படுத்திக்கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்து நொந்துபோன நெட்டிசன்கள் பலர் அவர்களைக் கடுமையாகக் கண்டித்தனர். ‘ட்விட்டரைக் கண்டு பிடிக்காமலேயே இருந்திருக்கலாம்’ என்று ஒருவரும் ‘உங்கள் ஹேஷ்டேக்குகளைப் பார்த்து கரோனாவே கதறும்’ என்று மற்றொருவரும் மனம்வெறுத்துப் பதிவிட்டிருந்தனர்.
வில்லன் கிங்
மணிரத்னத்தின் ‘கடல்’ படத்தில் தன்னுடைய வில்லன் வேடக் கணக்கை தொடங்கினார் ஆக்ஷன் கிங் அர்ஜுன். தமிழ் சினிமாவில், அவர் எதிர்மறைக் வேடங்களில் நடிப்பதை ரசிகர்கள் இங்கே ‘டிக்’ அடித்ததைத் தொடர்ந்து, தற்போது டோலிவுட்டிலும் தனது வில்லன் பயணத்தை தொடங்கியிருக்கிறார். மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்கும் ‘சர்க்காரு வாரி பாட்டா’ என்கிற தெலுங்கு படத்தில் அர்ஜுனை வில்லனாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
துணிவான கருத்து!
லட்சத் தீவுக்கு மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டங்கள், திட்டங்கள் தொடர்பாக, அங்கு வாழும் மக்கள் அதிருப்தியடைந்து போராடி வருவது சமீபத்தில் சர்ச்சையானது. இது பற்றி, மலையாள நடிகரும் இயக்குநருமான பிருத்வி ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தற்போது லட்சத்தீவில் நடைபெறும் பிரச்சினைகள் குறித்து அம்மக்கள் பொதுவெளியில் வெளிப்படுத்த வேண்டும். அந்த மக்களின் விருப்பத்தை அரசு கேட்க வேண்டும்”என்று பதிவிட்டிருந்தார். அவருடைய இந்தப் பதிவுக்கு எதிர்ப்பும் ஆதரவும் வந்த நிலையில்,“பிருத்வி ராஜ் வெளிப்படுத்திய உணர்வு.. நமது சமூகத்தின் உணர்வு. இது கேரளாவில் வாழும் எவருக்கும் இயல்பாக வரும் ஓர் உணர்வு.” எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டியிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT