Published : 26 May 2021 01:22 PM
Last Updated : 26 May 2021 01:22 PM
கரோனா நோய்த்தொற்றுக் காலத்தின் தொடக்கத்திலிருந்தே பல்வேறு மருந்துகள், மருத்துவ முறைகள் பரிந்துரைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்நிலையில், ஒரு சில நாட்களாக கரோனா நோய்த் தொற்றுக்கு அரசினால் ஒரு மருத்துவமாகப் பரிந்துரைக்கப்பட்ட 'ஆவி அல்லது வேது பிடித்தல்' (Steam Inhalation) என்னும் மருத்துவ முறையின் பயன்பாடு பெரும் விவாதத்துக்குள்ளாகி இருக்கின்றது.
'என்னப்பா இது நம்ம தாத்தா, பாட்டி காலத்திலிருந்து செய்துகிட்டு இருக்கிற ஒரு விஷயம்தானே, இதுல என்னப்பா பிரச்சினையென நீங்கள் கேட்கலாம். வேது பிடித்தால் 'கரோனா நோய் வராது', 'கரோனாவுக்கு காரணமான வைரஸினை செயலிழக்கச் செய்யலாம்' எனவும், சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், 'வேது பிடித்தல் கரோனா வைரஸினைக் கொல்லும்' எனச் சமூக வலைதளங்களில் அளித்துவரும் மருத்துவ ஆலோசனைகளால்தான் வேது பிடித்தல் இப்போது விவாதத்திற்குள்ளாகி இருக்கின்றது.
தமிழக அரசும், 'மருத்துவரின் பரிந்துரையின்றி கரோனா நோய்த் தொற்றுக்கு வேது பிடிக்க வேண்டாம்' என அறிவுறுத்தியிருக்கின்றது. பல ஆண்டுகாலமாக ஜலதோஷம், தலைவலி, தலைபாரம், மூக்கடைப்பு போன்ற நோய் நிலைகளுக்குப் பயன்பாட்டில் உள்ள 'வேது பிடித்தல்' அறிவியல்பூர்வமானது தானா? இதன் மருத்துவப் பயன்கள் என்ன என்பது குறித்துப் பார்ப்போம்.
பல்வேறு மருத்துவ முறைகளில் வேது பிடித்தல்
சித்த மருத்துவத்தில் வாய் வழியாக உண்ணக்கூடிய மருந்துகளை அக மருந்துகள் (Internal medicine) என்றும், வெளிப்பிரயோகத்திற்கு பயன்படுத்தக்கூடிய மருந்துகளைப் புற மருந்துகள் (External Medicine) எனவும் சொல்லப்பட்டிருக்கின்றன. மொத்தம் 32 வகையான புறமருந்துகளில், 'வேது பிடித்த'லும் ஒரு மருத்துவ முறையாக அறியப்படுகின்றது. சித்த மருத்துவ நூல்களான 'தேரையர் யமக வெண்பா', குணபாடம் (மூலிகை) ஆகியன, நோய் நிலைக்கேற்றவாறு நொச்சி, ஆடாதோடை, கற்பூரவள்ளி, துளசி, வெற்றிலை, சாம்பிராணி, மஞ்சள் ஆகிய மூலிகைகளை வேது பிடிக்கப் பயன்படுத்தலாம் என்கின்றது.
சித்த - ஆயுர்வேத மருத்துவத்தில் சளி, இருமல், தலைவலி, தலைபாரம், ஆஸ்துமா - பீனிசம் (Sinusitis) போன்ற நோய் நிலைகளுக்கு 'வேது பிடித்தல்' பெருமளவில் பரிந்துரைக்கப்படுகின்றது. மரபுவழி சீன (Traditional Chinese Medicine) மருத்துவத்திலும் பல்வேறு மருந்துகள் வேது பிடித்தலுக்காக வழங்கப்படுகின்றது. மேலும், புதிய மருத்துவத் தொழில்நுட்பங்களின் அடிப்படையில் Metered dose inhalation (MDI), Aromatic inhalation and Nebulized inhalation-போன்ற வேது பிடித்தல் முறைகளும் சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றது. அலோபதி மருத்துவத்திலும் சுவாச நோய்களில் காணப்படும் குறிகுணங்களுக்கு மென்தால் (Menthol), பென்சாயின் (Benzoin), Methyl salicylate போன்ற மருந்துகளைப் போட்டு வேது பிடிக்க அறிவுறுத்தப்படுகின்றது.
வேது பிடித்தலும் அறிவியல் தரவுகளும்
வேது பிடித்தல் குறித்துப் பல மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான அறிவியல் தரவுகள் அறிவியல் இதழ்களில் வெளியாகியுள்ளன. பொதுவாக, வேது பிடித்தல் மேல் சுவாசப்பாதை நோய்த்தொற்றில் காணப்படும் மூக்கடைப்பு, தலைபாரம், தலைவலி போன்ற குறிகுணங்களைக் குறைத்து உடல் நலனை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. துளசி போன்ற மூலிகைகளைக் போட்டு வேது பிடிப்பது, வெறும் நீரினைக் கொண்டு வேது பிடித்தலைக் காட்டிலும் சாதாரண சளியின் தீவிரத்தினைக் குறைத்து, விரைவில் நோய் நிலையிலிருந்து குணம் பெற பயனுடையதாக இருக்கின்றது என அறிவியல் தரவுகள் தெரிவிக்கின்றன.
இவையன்றி, வேது பிடித்தலுக்காக பயன்படுத்தப்படும் துளசி, நொச்சி, மஞ்சள் போன்ற மூலிகைகள் anti-inflammatory, anti-bacterial, bronchodilator ஆகிய மருத்துவப் பயன்களைக் கொண்டுள்ளன என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், இம்மூலிகைகள் நோய் எதிர்ப்புத்திறனை மேம்படுத்தும் திறன் பெற்றவை எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா நோய்த் தொற்றில், கரோனா வைரஸ் மூக்கின் உட்பகுதியிலுள்ள சளிச்சவ்வின் மேற்பரப்பிலுள்ள ACE2-receptor மேல் ஒட்டிக்கொள்கின்றது பின்னர், இவ்வைரஸானது பல்கிப் பெருகி சுவாசப்பதையின் அண்டைப் பகுதிகளான paranasal sinuses - தொண்டைப் பகுதியில் தொற்றினை ஏற்படுத்துகின்றன.
இதன் அடிப்படையில், வேது பிடித்தலுக்காக பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் நொச்சி, ஆடாதோடை, தைலமரம் போன்ற மூலிகைகளின் கரோனா நோய் குணப்படுத்தும் - அதன் பரவலைத் தடுக்கும் செயல் திறன் பற்றி அறிய இம்மூலிகைகளின் தாவர வேதிப்பொருள்களைக் கொண்டு In silico study எனப்படும் கரோனா வைரஸின் மேற்புறத்தில் காணப்படும் Mpro, S-protein and RdRp புரதங்களின் - நமது உடலில் காணப்படும் ACE2-receptor மீது இம்மூலிகைகளின் தாவர வேதிப்பொருள்களின் Molecular docking பற்றி ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின் முடிவில், கரோனா வைரஸின் மேற்புறத்தில் காணப்படும் S-protein - நமது ACE2-receptor மீது இம்மூலிகைகளின் தாவர வேதிப்பொருள் இணைந்து (binding affinity) கொள்வது கண்டறியப்பட்டுள்ளது. இந்த முதல்கட்ட ஆய்வுகள் நொச்சி, ஆடாதோடை, தைலமரம் மூலிகைகளின் தாவர வேதிப் பொருள்களான (Phytochemicals) Phytoligands-Eudesmol, Vasicolinone, Apigenn-o-7-glucuronide ஆகியன கரோனா வைரஸின் மேற்புறத்தில் காணப்படும் புரதங்களுடன் இணைந்து கரோனா வைரஸினை செயலிழக்க /அவை நமது உடலில் பல்கிப் பெருகுவதைத் தடுக்கும் திறன் பெற்றுள்ளன என்பதை உணர்த்துகின்றன.
ரெம்டெசிவிர் போன்ற அலோபதி மருந்துகளும் இந்த அடிப்படையில்தான் கரோனா நோய்க்குப் பயன்படுத்தப்படுகின்றது. கரோனா வைரஸுக்கு எதிரான இம்மூலிகைகளின் செயல்திறன் குறித்த ஆய்வுகளைத் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் பட்சத்தில் வேது பிடித்தலின் மருத்துவப் பயனையையும் நாம் முழுமையாக அறிந்துகொள்ள முடியும். மேலும், வேது பிடித்தல் என்பது ஒரு Non-invasive மருத்துவ அணுகுமுறை, அதாவது வாய் அல்லது ஊசியின் வழியாகவோ மருந்தினை உடலுக்குள் செலுத்துவதற்கு பதிலாக, மூக்கின் வழியாக மருந்தினை உடலுக்குள் செலுத்தும் மருத்துவ முறை. இதனை அலோபதி மருத்துவத்தில் ஆஸ்துமாவிற்குப் பயன்படுத்தப்படும் நெபுலைசருக்கு இணையான ஒரு மருத்துவ அணுகுமுறையாக ஒப்பிடலாம்.
கரோனா நோய்த் தொற்றில் வேது பிடித்தல்
கரோனா நோய்த் தொற்றில் பரிந்துரைக்கப்படும் 'பாரசிடமால் மாத்திரை சுரத்தினைக் குறைத்து நோயின் தீவிரத்தைத் தணிக்கின்றது. இதுபோல, கரோனா நோய்த் தொற்றின் ஆரம்ப நிலையில் காணப்படும் சளி, மூக்கடைப்பு, தலைவலி - தலைபாரம் போன்ற குறிகுணங்களைக் குறைப்பதற்கு தினமும் இரு முறை, 10 - 15 நிமிடம் வரை வேது பிடித்தலை அவசியம் மேற்கொள்ளலாம். மேலும், மூலிகைகளைக் கொண்டு வேது பிடிப்பது, நோயின் தீவிரத்தினைக் குறைப்பதில் பயனுடயதாக இருக்கும். அதேநேரத்தில், கரோனா நோயின் மிதமான (moderate) - தீவிர (severe) நிலை நுரையீரல் தொற்றில் வேது பிடிக்கக் கூடாது.
'வேது பிடித்தல் கரோனா வைரஸைக் கொல்லும்' என்னும் தவறான எண்ணத்துடன் நமது மூக்கினையும் நுரையீரலையும் ஆவியில் வேகவைக்க முயல வேண்டாம்.
அதிகமான நேரம் அல்லது முறை வேது பிடிக்கும்போது நமது மேல் சுவாசப் பகுதி, தொண்டை போன்ற பகுதிகள் பாதிக்கப்பட்டு, புண்ணாகி நோய்த் தொற்று அதிகமாவதற்கும் வாய்ப்புள்ளது. மேலும், கூட்டமாக அல்லது ஒரு இயக்கமாக வேது பிடித்தல் நோய்ப் பரவலை அதிகரிக்கும். எனவே, இத்தகைய முறையினைத் தவிர்க்க வேண்டும்.
பாரம்பரிய சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டது போல், நமது சுவாசப் பாதையினைத் தூய்மைப்படுத்துவதற்காக கரோனா நோயாளர்களை கவனிக்கும் முன்கள மருத்துவப் பணியாளர்கள், அதிக நோயாளர்களைக் கவனிக்கும் முன்கள மருத்துவப் பணியாளர்கள், அதிக மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதிக்குச் சென்றுவிட்டு, வீட்டுக்கு வருபவர்கள் தடுப்பு முறையாக ஒரு முறை வேது பிடிப்பது பயனுடையதாக இருக்கும். அதே வேளையில், கரோனாவின் தடுப்பு முறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், அடிக்கடி கைகளைக் கழுவுவதால், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் போன்ற பாதுகாப்பு முறைகளையும் தொடர்ந்து கடைப்பிடிப்போம். கரோனா நோய்த் தொற்றினை வெல்வோம்.
கட்டுரையாளர்: பா.இரா. செந்தில்குமார்,
தேசிய சித்த மருத்துவ நிறுவன மருத்துவர்,
தொடர்புக்கு: senthilkumarbr@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT