Published : 10 Nov 2015 02:23 PM
Last Updated : 10 Nov 2015 02:23 PM
அரசியல் தலைவர்களின் தலைகள் அச்சிடப்பட்ட அஞ்சல் தலைகள் அவ்வப்போது தலைப்புச் செய்திகளாகக்கூட மாறுவதைப் பார்த்திருப்பீர்கள்.
ஆட்சி மாறும்போது அஞ்சல் தலைகளில் இடம்பெற்ற உருவப்படங்களும் மாறும் வழக்கம் நமது நாட்டில் ஆங்கிலேயர்கள் காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது. இங்கிலாந்தின் அரசியோ அரசரோ மாறும்போது அஞ்சல் தலையின் வடிவமைப்பும்கூட மாறியது. 1856-க்கும் 1926-க்கும் இடைப்பட்ட காலத்தில் விக்டோரியா அரசி, ஏழாம் எட்வர்ட், ஐந்தாம் ஜார்ஜ், ஆறாம் ஜார்ஜ் அரசர்களின் உருவப்படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக இந்திய அஞ்சல் தலைகளில் இடம்பெற்றன. அந்தக் காலகட்டத்தில் இந்திய அஞ்சல் தலைகள் லண்டனில்தான் அச்சிடப்பட்டன. 1926-ம் ஆண்டில் நாசிக் நகரத்தில் இந்தியா செக்யூரிட்டி பிரஸ் தொடங்கப்பட்டதும் அஞ்சல் தலைகளை அச்சிடும் பொறுப்பு அதனிடம் ஒப்படைக்கப்பட்டது.
அஞ்சல் கட்டணம் முன்கூட்டியே செலுத்தப்பட்டுவிட்டது என்பதைக் குறிப்பதற்காக அஞ்சல் தலைகள் பயன்படுத்தப்படுகின்றன.
உலகின் முதலாவது அஞ்சல் தலையை இங்கிலாந்துதான் வெளியிட்டது. 1840-ம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி வெளியிடப்பட்ட அந்த அஞ்சல் தலையின் பெயர் பென்னி பிளேக். பென்னி என்பது நாணயத்தின் பெயர். அஞ்சல் தலையை வெளியிட்ட இரண்டாவது நாடு பிரேஸில். ஆண்டு 1843.
ஆங்கிலேயர்காலத்து இந்தியாவின், சிந்து மாகாணத்தின் கமிஷனராக இருந்த பார்ட்ல் ஃபெரேரே என்பவர் 1852-ல் முதன்முதலாக காகிதத்திலான அஞ்சல் தலைகளை நடைமுறைப்படுத்தினார். புகழ்பெற்ற இந்த அஞ்சல் தலைகள்தான் இந்தியாவில் மட்டுமல்லாமல் ஆசியக் கண்டத்திலும் முதலாவது காகிதத்திலான அஞ்சல்தலைகள்.
இந்த அஞ்சல் தலைகளின் அறிமுகத்துக்குப் பிறகு, இந்தியாவின் மற்றப் பகுதிகளிலும் அஞ்சல் தலைகள் பயன்பாட்டுக்கு வந்தன. ஆனாலும் இந்தியா முழுவதுக்குமான அஞ்சல் தலைகளை அச்சிடும்வகையில் போதுமான இயந்திர வசதி அப்போது இல்லை. கேப்டன் துப்லியேர் என்பவர் பெருமுயற்சி எடுத்து லிதோகிராப் முறையில் அஞ்சல் தலைகளை அச்சிடுவதில் வெற்றிகண்டார். அவரது முயற்சியின் காரணமாகவே முதலாவது அகில இந்திய அஞ்சல் தலை 1854 செப்டம்பரில் வெளியானது.
இங்கிலாந்தைச் சேர்ந்த ரவுலண்ட் ஹில் நவீன தபால்துறையில் பெரிய அளவிலான சீர்திருத்தங்களுக்காகக் குரல் கொடுத்தார். அஞ்சல் தலை திரட்டும் கலைக்கு ஃபிலேட்லி என்று பெயர். கிடைப்பதற்கு அரிதான அஞ்சல் தலைகளுக்கு மதிப்பு அதிகம். அதிலும் தப்பும் தவறுமாக அச்சிடப்பட்ட தலைகளின் விலை மதிப்பு அதிகமோ அதிகம்.
தொடர்புக்கு: selvapuviyarasan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT