Published : 10 Nov 2015 02:35 PM
Last Updated : 10 Nov 2015 02:35 PM

ஆங்கிலம் அறிவோமே -83: வல்கரும் நாசூக்கும்

பலரும் கடிதங்களில் பயன்படுத்தும் ஒரு வாக்கியம் Please do the needful. செய்து முடிக்க வேண்டிய காரியத்தைச் செய்யுங்கள் என்ற அர்த்தத்தில் இதை எழுதுகிறோம். Please do the needful என்றால் தேவையானதைச் செய்யுங்கள் என்று மட்டுமே பொருள். அதைவிடக் கொஞ்சம்கூட அதிகமாகவோ, குறைவாகவோ செய்துவிட வேண்டாம் என்ற அர்த்தம் இதில் தொனிக்கிறது.

TRANCE - TRANS

Trance என்பது ஒருவித அரைமயக்க நிலையைக் குறிக்கிறது. அதாவது ‘மனோவசியம் (hypnosis) செய்யும்போது உண்டாகக்கூடிய நிலையைப் போல’ என்று வைத்துக்கொள்ளலாம்.

Trans என்றால் என்ன அர்த்தம்? இது பெரும்பாலும் வேறொரு வார்த்தையின் முன்பாக ஒட்டப்படும் ஒரு வார்த்தைப் பகுதி. முன்னொட்டு அதாவது Prefix. Across அல்லது beyond என்று இதற்குப் பொருள் கூறலாம். Transcontinental, transatlantic என்பதுபோல. மறுபுறம் என்பது இதன் தோராயமான அர்த்தம். வேறொரு வடிவத்தில் என்ற பொருளிலும் இது பயன்படுகிறது. (Transform, translate)

இரண்டு கண்டங்களில் பரவியுள்ள நாடுகளை transcontinental countries என்பார்கள். துருக்கி, ரஷ்யா, எகிப்து போன்றவற்றை இப்படிக் கூறலாம். துருக்கியும், ரஷ்யாவும், ஆசியா, ஐரோப்பா ஆகிய இரண்டு கண்டங்களிலும் உள்ளன.

ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய இரு கண்டங்களிலும் எகிப்து உள்ளது.

மூன்று வாசகர்கள் மூன்று வார்த்தைகளுக்கான அர்த்தங்களைக் கேட்டிருக்கிறார்கள். அவை categorical, ratify மற்றும் battery.

Categorical என்றால் ஆணித்தரமான என்று அர்த்தம். அதாவது எந்தக் குழப்பமும் இல்லாமல் நேரிடையாகவும் தெளிவாகவும் என்று பொருள். Unambiguously explicit and direct.

Ratification என்றால் உறுதிப்படுத்துதல் என்று அர்த்தம். ஒன்றை ratify செய்வது என்றால் அதை அதிகாரபூர்வமாகச் செல்லுபடியாக்குவது என்று அர்த்தம். The countries will ratify the treaty by the end of this month.

Battery என்றால் நாம் கேமராவிலோ, டிரான்சிஸ்டர் ரேடியோவிலோ போடும் விஷயம் மட்டுமல்ல. கனமான ஆயுதங்களைச் சேமிக்க உருவாகியுள்ள சிறப்புக் கேந்திரத்தையும் battery என்பார்கள்.

ஒன்றுபோலவே உள்ள பல சிறு பகுதிகள் - அவை பெரும்பாலும் ஒன்றுக்கொன்று இணைந்துள்ளன என்றால் A battery of equipment to monitor blood pressure என்பது போலக் கூறலாம்.

சட்டத்தின் கோணத்தில் battery என்றால் வன்முறையைப் பயன்படுத்துதல் என்று பொருள்.

மேற்படி மூன்று வார்த்தைகளுக்கிடையே ஒரு சுவாரசியமான ஒற்றுமை இருக்கிறது. அது என்ன என்பது புரிகிறதா? அதே பொதுவான அம்சம் உள்ள வேறு சில வார்த்தைகளையும் பார்ப்போம்.

Assessment என்றால் மதிப்பீடு. ஒரு பொருளை மதிப்பிடலாம். ஒரு நபரையும் மதிப்பிடலாம். எதையும் மதிப்பிடலாம். The damage due to the earthquake was assessed at 20 billion dollars. The Committee must assess the relative importance of the issues.

Pigmentation என்பது நிறமேற்றம். தோலின் நிறமிகளை pigment என்போம்.

Crabby என்றால் எரிச்சலை ஏற்படுத்துதல் என்று பொருள் Irritable எனலாம்.

Emulate என்றால் வேறு ஒருவர் அல்லது ஒன்றைப் போல நடந்துகொள்வது. Many Kings wanted to emulate Alexandar.

Antagonist என்பவர் யார்? Protogonist-ஐ எதிர்ப்பவர். அப்படியானால் Protogonist யார்? அவர்தான் ஹீரோ. மையப் பாத்திரம். அப்படியானால் Antagonist என்பவரை வில்லன் எனலாமா? லாம்.

வருடங்களைக் குறிப்பிடும்போது சிலர் C.E. என்று குறிப்பிடுவது ஏன்?

முன்பெல்லாம் வருடங்களைக் குறிப்பிடும்போது குறிப்பிட்ட எண்ணுடன் B.C., A.D., ஆகிய எழுத்துகளைப் பயன்படுத்தினார்கள். B.C. என்றால் Before Christ. A.D. என்றால் Anno Domini. (Year of our Lord என்பதைக் குறிப்பதுதான் Anno Domini).

இப்போதெல்லாம் பல்வேறு மதத்தவரும் உலகளவில் இந்த வருட எண்ணிக்கையை ஏற்றுக் கொண்டுவிட்டனர். பிறகு அதில் ‘மதத்தின் நிழல்’ படிய வேண்டியதில்லை என்று கணிசமானவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் C.E., B.C.E., ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.

B.C.E. என்றால் Before the Common Era. அதாவது 400 B.C. என்பதை 400 B.C.E. என்கிறார்கள்.

C.E. என்றால் Common Era. அதாவது A.D.2015 என்பதை 2015 C.E. என்கிறார்கள்.

வரலாற்று ஆசிரியர்கள் சில வருடங்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் கூடவே Circa என்று குறிப்பிடுவதுண்டு. Circa என்றால் தோராயமாக என்று அர்த்தம். அதாவது ‘கிட்டத்தட்ட அந்த வருடத்தில்’ என்று பொருள்.

“அவன் ரொம்ப வல்கரா பேசறான்’’. இப்படிச் சொல்லும்போது பொதுவாக vulgar என்பதற்கு நாம் கொடுக்கும் அர்த்தம் ஓரளவுதான் சரி.

“இவ்வளவு vulgar ஆன வசனங்கள் இருந்தும் இந்தப் படம் எப்படித்தான் சென்சாரிலிருந்து தப்பித்ததோ!’’ எனும்போது பாலியல்ரீதியான இரட்டை அர்த்த வசனங்களை நாம் அப்படிக் குறிப்பிட வாய்ப்பு அதிகம்.

ஆனால் vulgar என்றால் நாசூக்கு இல்லாத என்று அர்த்தம். அதாவது sophistification இல்லாத. Vulgar joke என்றால் அநாகரிகமான நகைச்சுவை. அதில் ‘Adults only’ தன்மை இருக்க வேண்டுமென்று அவசியமில்லை.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x