Last Updated : 03 Jun, 2014 09:00 AM

 

Published : 03 Jun 2014 09:00 AM
Last Updated : 03 Jun 2014 09:00 AM

ரத்தக் கொதிப்பை தொடரும் நோய்களைத் தடுக்க...

நான் முன்னாள் ராணுவத்தைச் சேர்ந்தவர், வயது 45. எனக்குச் சாப்பிட்டவுடன் மூக்கு ஒழுக ஆரம்பித்துவிடுகிறது. இந்தச் சளித் தொல்லை குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் இருக்கிறது. அதற்குப் பிறகு சளி இருப்பது போல் தெரிவதில்லை. காலையில் 7.30 மணிக்குக் காலை உணவும், மதியம் 1 மணிக்குப் பழங்களும், மாலையில் 5 மணிக்கும் சாப்பிடுகிறேன். இரவு படுக்கப் போகும் முன் 8 மணிக்குப் பழங்கள் சாப்பிடுகிறேன். இதற்கு என்ன தீர்வு?

ஜெ.பாலன், போரூர், சென்னை

உங்கள் உணவில் சில, உடனடி ஒவ்வாமையைத் தருவதையோ அல்லது எங்கள் சித்த மருத்துவ மொழியில் சொன்னால் பித்த மாறுபாட்டைத் தருவதையோ செய்கிறது. உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை (Immune system) சீரமைப்பதுதான் (Modulate) சரியான தீர்வைத் தரும். இரவு உணவில் நீங்கள் பழம் சாப்பிடுவதாக எழுதியுள்ளீர்கள். அதில் கமலா ஆரஞ்சு, திராட்சை பழத்தைத் தவிர்க்கவும். உணவில் நிறைய மிளகைச் சேர்த்துக்கொள்ளுங்கள். பால், இனிப்பு, நீர்க் காய்கறிகள் போன்றவற்றை உணவில் சேர்ப்பதைக் குறைத்துக்கொள்ளவும்.

சித்த மருத்துவ மூலிகை மருந்துகளான சீந்தில்தண்டு சூரணம், மிளகு கல்பம் ஆகியவற்றை மருத்துவர் ஆலோசனையுடன் சில காலம் சாப்பிடுங்கள். பிராணாயாமப் பயிற்சியும் இத்துடன் சேர்ந்தால் இன்னும் விரைவாகக் குணமடைய வசதிசெய்யும்.

எனக்கு வயது 45. உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது. கடந்த சில வருடங்களாக எனது பி.பி. அளவு பெரும்பாலான நேரம் 90-130. சில நேரம் 100-150 ஆக இருக்கிறது. இதற்கு இயற்கையான தீர்வு சாத்தியமா?

எஸ்.பாலசுந்தரம், மின்னஞ்சல்

ரத்தக் கொதிப்பு மிக அதிகமாக, உதாரணத்துக்கு இதயம் சுருங்குகையில் 170க்கு மேலும், விரிவடையும்போது 100க்கு மேலும் இருக்கும்போது, சித்த மருத்துவ மூலிகையால் உடனடியாக அதைச் சீராக்குவது சாத்தியமில்லை.

நவீன மருத்துவ உதவியை நாடுவது நல்லது. நவீன மருந்துகளை இதற்காக எடுத்துக்கொண்டால்கூடத் துணையாக வெண்தாமரை, மருதம் பட்டை, சீரகம் முதலான மூலிகைகளைக் கொண்ட மருந்துகளைத் தினசரி உட்கொள்ளலாம். நாளடைவில் ரத்தக் கொதிப்பால் மாரடைப்பு வராதிருக்கவும், இதய, சிறுநீரகப் பாதிப்புகள் நிகழாமலிருக்கவும் இது நிச்சயம் உதவிடும்.

வெண்தாமரைச் சூரணம் எந்த அளவுக்கு ரத்தக் கொதிப்பில் பயனாகிறது, எப்படி உடலில் வேலை செய்கிறது என நவீன ஆய்வுத் தரவுகள் மிக நுண்ணிய உயர் ஆய்வுகளுக்குப் பின்னர் சமீபகாலத்தில் மருத்துவ நூல்களில் வெளியாகியுள்ளன. உணவில் வெந்தயக் கீரை, முருங்கைக் கீரை, சிறிய வெங்காயம் ஆகியவற்றை அடிக்கடி சேர்த்துக்கொள்வது மிக அவசியம். கூடவே சீதளி பிராணாயாமப் பயிற்சியையும் நீங்கள் எடுத்தால் ரத்தக் கொதிப்பு எப்போதும் கட்டுக்குள் இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x