Published : 21 Sep 2020 09:18 AM
Last Updated : 21 Sep 2020 09:18 AM
ஒவ்வொரு காலகட்டத்தின் சூழலுக்கும் ஏற்ப மனிதர்கள் செய்துவந்த வேலைகளின் தன்மையும் அவற்றுக்கான ஊதியமும் விதிமுறைகளும் மாற்றம் கண்டுவந்திருக்கின்றன. கடந்த பத்தாண்டுகளில் கணினியின் ஆதிக்கம் அதிகரித்த பிறகு வேலையின் சூழல் எப்படி மாறியிருக்கிறது என்பதை கண்கூடாக தற்போதைய தலைமுறை பார்த்திருக்கிறது. தற்போது மீண்டும் ஒரு புதிய பரிணாமத்துக்குள் நாம் நுழைய வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது என்று சொல்லலாம்.
கரோனா பாதிப்பு தொடங்கிய பிறகு அதற்கான சூழல் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக உலகம் வேலையிழப்பு, ஊதியக் குறைப்பு, தொழில் முடக்கம் போன்றவற்றை கண்டிருக்கிறது. தற்போது சற்று ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக இயல்புக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறோம். புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும், வேலையிழந்தவர்கள் வேலைக்கு மீண்டும் அழைக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை பலரிடம் இருக்கிறது. ஆனால் எதார்த்தத்தில் வேலைவாய்ப்புக்கான சூழல் எதிர்பார்ப்புக்கு மாறாகவே உள்ளது.
நிறுவனங்கள் குறைந்த ஊழியர்களை வைத்து வேலைகளை செய்துமுடிக்க பழகிவருகின்றன. வேலையிழப்பிலிருந்து தப்பித்த ஊழியர்களும் ‘சம்பளம் குறைக்கப்பட்டால் என்ன, வேலை போகவில்லையே’ என்ற மனநிலைக்கு வந்து விட்டனர். ஏற்கனவே வேலை தேடிக்கொண்டிப்பவர்களும், கரோனா காலகட்டத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டதால் வேலை தேட வேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டிருப்பவர்களும் நிச்சயமற்ற எதிர்காலத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஒரு புறம் இந்தியா அதன் வரலாற்றில் மிக மோசமான வேலையின்மையை எதிர்கொண்டுவருகிறது. மறுபுறம் வேலை வாய்ப்புகள் புதிய பரிணாமம் எடுத்துவருகின்றன. கடந்த பத்தாண்டுகளில், டிஜிட்டல், இணையம்,
செயற்கை நுண்ணறிவு ஆகிய தொழில் நுட்பங்களின் வளர்ச்சி உலக அளவில் வேலைவாய்ப்புகளையும், வேலைகளின் தன்மையும் பெரிய மாற்றத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. தற்போது கரோனா அந்த மாற்றங்களை இன்னும் தீவிரப்படுத்திவருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் 90 சதவீத வேலைவாய்ப்புகள் முறைசாரா தொழில்களின் வழியே உருவாகும் சூழலில்தான் இருக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகள், தனியார் துறைகளின் வழியிலான வேலைவாய்ப்புகள் 8 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. தலைமுறை தலைமுறையான தொழில்கள், வணிகம், சுய தொழில்கள், சில்லரை வியாபாரம் போன்றவையே இந்தியாவில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடியதாக இருந்துவருகிறது. கரோனா காலத்தில் இந்த முறைசாரா துறைகள் பலத்த அடி வாங்கியிருக்கின்றன. இந்தச் சூழலில் தற்போது முறைப்படுத்தப்பட்ட துறைகளிலும் வேலைவாய்ப்புக் கட்டமைப்பு மாறிவருகிறது.
வேலைவாய்ப்புகளின் புதிய பரிணாமம்
முறைப்படுத்தப்பட்ட துறைகளில், வேலை என்பது ஒரு நிறுவனம், அதன் கீழ் பணிபுரியும் ஊழியர்கள், இருதரப்புக் கிடையிலான பரஸ்பர ஒப்பந்தம் என்ற கட்டமைப்பைக்கொண்டதாக இருக்கிறது. ஊழியர்களுக்கான வேலை நேரம், ஊதியம், காப்பீடு, வருங்கால சேமிப்பு என நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்ட அந்த நிறுவனத்துக்கும் ஊழியர்களுக்குமான தொழில்சார் உறவு அமையும். நினைத்த நேரத்தில் ஒரு நிறுவனம் அதன் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடியாது. அதேபோல் ஊழியர்களும் தங்கள் இஷ்டம்போல் பணி விலக முடியாது. அனைத்து செயல்பாடுகளும் விதிகளுக்கு உட்பட்டே நிகழ வேண்டும். இது நாம் இதுவரையில் பார்த்து, பழகி வந்த வழக்கமான வேலைவாய்ப்பு சார்ந்த கட்டமைப்பு.
தற்போது இந்தக் கட்டமைப்பு மாறத்தொடங்கி,புதிய வேலைவாய்ப்புச் சூழல் உருவாகி வருகிறது. ஒரு நிறுவனத்தின் கீழ் முழு நேர ஊழியராக இல்லாமல், பகுதிநேர அடிப்படையில், குறுகியகால ஒப்பந்த அடிப்படையில், நிறுவனத்துக்கான வேலை செய்து தரும் போக்கு அதிகரித்து இருக்கிறது. இது Gig Economy என்று அடையாளப்படுத்தப்படுகிறது. தற்போது நிறுவனங்கள் முழு நேர பணியாளர்களைப் பணிக்கு அமர்த்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை. முழு நேரப் பணியாளர்களால் செய்யப்பட்டுவந்த வேலைகள் தற்போது தேவை அடிப்படையிலான பணியாளர்களிடம் (Freelancers) ஒப்படைக்கப்படுகிறது. இதனால் நிறுவனங்களுக்கு பலமடங்கு செலவு மிச்சமாகிறது. சோமேட்டோ, ஸ்விக்கி, ஓலா, ஊபர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
இந்நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட சேவையை வழங்குகிறது. இந்த நிறுவனங்களின் சேவைகளில் ஈடுபடுபவர்கள் அந்நிறுவனங்களின் ஊழியர்கள் அல்ல. அவர்கள் தனி நபர்கள். தங்கள் உழைப்பை அந்நிறுவனம் விரும்பும் வேலையை முடித்துத் தர பயன்படுத்துகிறார்கள். அதற்கு ஊதியம் பெற்றுக்கொள்கிறார்கள். அவ்வளவு தான் அவர்களுக்கும் நிறுவனத்துக்கு மிடையேயான உறவு. தங்களுக்கு எப்போது தேவையோ அப்போது அவர்கள் தங்கள் உழைப்பை வழங்கிக் கொள்ளலாம். நேர நெறிமுறைகள் கிடையாது.
உழைப்புச் சுரண்டலுக்கான சாத்தியங்கள்
இதுபோன்ற ஒப்பந்த மற்றும் தேவை அடிப்படையிலான வேலைவாய்ப்புகள் குறைந்தபட்சமாகவேனும் வருமானம் ஈட்டுவதற்கான சாத்தியத்தை வழங்குகின்றன. முழு நேர வேலை கிடைக்கமால் திணறி வருபவர்கள், கூடுதல் வருமானம் ஈட்ட விரும்புபவர்கள், அன்றாட பணிச் சூழல் பிடிக்காமல் தங்கள் விருப்பம்போல் வேலை செய்ய விரும்புபவர்கள் இந்த
வேலைவாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்கின்றனர். படித்த படிப்புக்கு வேலை கிடைக்காமல் திணறும் இளைஞர்கள், தங்கள் அன்றாடத்தை சமாளிக்க இது போன்ற வேலைவாய்ப்புகளில் ஒண்டிக் கொள்கிறார்கள். பெண்களுக்கும் இது போன்ற பணிகள் சாதகமாக இருக்கின்றன. இந்திய குடும்பக் கட்டமைப்புக் காரணமாக பல பெண்கள் திருமணத்துக்குப் பிறகு, குழந்தை பெற்ற பிறகு அலுவலகம் செல்வதை நிறுத்தி விடுகிறார்கள்.
ப்ரீலான்ஸ் வேலைவாய்ப்பு அவர்களுக்கு தங்கள் விருப்ப நேரத்தில் வேலை செய்துகொள்ளும் வாய்ப்பை அளிக்கிறது. அதன் வழியே அவர்களது பொருளாதாரச் சுதந்திரம் உறுதி செய்யப்படுகிறது. நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குபவர்கள் முதல் அழகு நிபுணர், வரைகலைஞர், எலக்ட்ரீசியன், பிளம்பர் என அந்தந்த தொழில்சார் திறன்பெற்றவர்கள் எந்த நிறுவனத்தையும் சாராமல் சுயாதீனமாக தங்களுக்கான வருமானத்தை ஈட்டத் தொடங்கியுள்ளனர். அதேசமயம் இத்தகைய ப்ரீலான்ஸ் வேலைவாய்ப்புகளில் வேலை உத்தரவாதம் கிடையாது. மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்பு நிதி என முறை சார் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் எந்தச் சலுகையும் கிடையாது. ஏற்கெனவே
தொழிலாளர் விதிகள் பல நிறுவனங்களில் முறைகள் கடைபிடிக்கப்படு வதில்லை. இந்நிலையில் ப்ரீலான்ஸ் வேலைவாய்ப்புகள் அதிகரிக்க அதிகரிக்க உழைப்புச் சுரண்டலும் அதிகரிக்கும்.
சேவைத் துறைகளின் வளர்ச்சி
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் நிகழ்ந்த சேவைத் துறைகளின் வளர்ச்சி ப்ரீலான்ஸ் வேலைவாய்ப்புகள் பெருமளவில் உருவாகி வந்ததற்கு முக்கிய காரணமாக உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் தொழில்நுட்பம் சார்ந்தஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கையினால், இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவில் உருவாகும் வேலைவாய்ப்பு
களில் பெருவாரியானவை ப்ரீலான்ஸ் வேலைவாய்ப்புகளாகவே இருக்கும் என்ற சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள வேலை வாய்ப்புகளில் 40 சதவீதம் ப்ரீலான்ஸ்
வேலைவாய்ப்புகளே இடம்பிடிக்கின்றன. உலக அளவில் ப்ரீலான்ஸ் வேலை வாய்ப்புகளை அதிகம் கொண்டிருக்கும் நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது.
கிட்டத்தட்ட 1.5 கோடி பேர் சுயாதீன பணியாளர்களாக உள்ளனர். அதன் வழியிலான பொருளாதாரம் 2023-ம் ஆண்டில் 450 பில்லியன் டாலராக விரிவடையும் என்று கூறப்படுகிறது.
வளர்ந்த நாடுகளில், தங்கள் நேரத்தை முழுவதுமாக வேலைக்குச் செலவிட விரும்பாமல், ஏதுவான நேரத்தில் வேலை செய்வதற்கென்று ப்ரீலான்ஸ் வேலை வாய்ப்புகளை தேர்வு செய்பவர்கள் அதிகம். இந்தியாவிலோ, முழு நேர வேலைவாய்ப்பு கிடைக்க வழியின்றி அன்றாடப் பிழைப்புக்காக ப்ரீலான்ஸ் வேலைவாய்ப்புகளைத் தேர்வு செய்பவர்கள் அதிகம்.
மாற்றமடையும் வேலைச் சூழல்
இது ஒருபுறம் இருக்க தற்போது கரோனாவின் தாக்கத்தால் வழமையான வேலைச் சூழலும் புதிய பரிணாமம் எடுத்து வருகிறது. கூகுள், மைக்ரோசாஃப்ட், பேஸ்புக், டிவிட்டர் எனப் பல பெரிய நிறுவனங்கள் அதன் ஊழியர்களை சில காலங்களுக்கு வீட்டிலிருந்து பணி புரியவே வலியுறுத்தியுள்ளன. தற்போது கரோனா தொற்று மீதான அச்சம் காரணமாக வீட்டிலிருந்து பணிபுரிய வலியுறுத்தப் பட்டிருந்தாலும், இன்னும் சில வருடங்களில் வீட்டிலிருந்து பணிபுரிதல் இயல்பான நடைமுறையாக மாறவிடுவதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளன. தற்போது பல நிறுவனங்கள் வாரத்துக்கு சில நாட்கள் மட்டும் அலுவலகம் வந்து வேலை பார்க்கும் முறையை பரிசீலித்து வருகின்றன.
மனித வாழ்க்கை பொருள் ஈட்டுவதைமையமாக வைத்தே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய நிச்சயமற்ற வேலைவாய்ப்பு சூழலில் ஒரு சராசரி நபர் தன் வாழ்க்கையை நிதானமாக அனுபவித்து வாழ்வது என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டதாக மாறியுள்ளது. வேலையின் தன்மையும், வேலைச் சூழலும் மனிதனின் அன்றாட வாழ்க்கையைத் தீர் மானிக்கும் காரணிகளில் முக்கியமானவை. உலகம் மாறிவிட்டது என்பதை நாம் மனிதனின் வேலையின் தன்மை மாறிவிட்டது என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ள முடியும். அந்த வகையில்மாற்றத்துக்கான துவக்கத்தில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம்.
- riyas.ma@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT