Published : 22 Sep 2015 01:58 PM
Last Updated : 22 Sep 2015 01:58 PM

என்னைச் செதுக்கிய மாணவர்கள்: ஆய்வுக்கூடக் கோமாளிகள்

சரியா, தவறா என உலகம் இதுவரை வைத்துள்ள அறிவைப் பரிசோதிக்கும் வகுப்பறையாக அறிவியல் கல்வி இல்லாமல் அறிவியல் பாடங்களை கட்டளைகள் போல மாணவர்கள் முன்வைக்கிறது. அவற்றைக் குருட்டு மனப்பாடம் செய்து பள்ளித்தேர்வில் நகல் செய்வதுபோல மாறிவிட்டது. இது துரதிர்ஷ்டவசமான சூழல்

-இந்தியக் கல்விமுறையை ஆராய்வதற்கு மத்திய அரசு 1964-ல் நியமித்த கோத்தாரி குழுவின் அறிக்கை.

தமிழகத்தில் ஒவ்வொரு உயர்நிலைப்பள்ளியிலும் குறைந்தபட்சம் இரு ஆய்வகங்கள். மேல்நிலைப்பள்ளியில் இயற்பியல், வேதியியல், உயிரியல் என மூன்றுக்கும் தனித்தனியாக ஆய்வகங்கள் வேண்டும். அதுதான் அரசாங்க விதிமுறை. அப்படிப் பார்த்தால் நம்மிடம் லட்சக்கணக்கான ஆய்வுக்கூடங்கள் இருக்கின்றன.

அப்படியிருந்தும் நம் குழந்தைகள் படைப்பாற்றலைப் பயன்படுத்தி புதிதாக எதையுமே கண்டுபிடிக்க முடியாதது ஏன்?

அறிவியல் நாடகம்

யாரோ, எங்கோ, செய்து பார்த்த ஆய்வுகளை அப்படியே திரும்பச் செய்து பார்த்து மனப்பாடம் செய்து அவர்கள் வந்தடைந்த அதே முடிவுகளை மாணவர்கள் எட்டுகிற தற்போதைய செய்முறை அறிவியல் ஒரு நாடகம் போல இருக்கிறது.

நம் அறிவியல் வகுப்பறைகள் பாடப்பொருள் எனும் வரையறையை கடப்பதே கிடையாது. அந்த ஆய்வுக்கூடங்களுக்குள் நுழையும் குழந்தைகள் தங்களை விஞ்ஞானிகளாக எப்படி உணர்வார்கள்? இதற்கு மாற்றுவழியைத் தேட என்னைத் தூண்டியவர்கள்தான் ஆய்வுக்கூடக் கோமாளிகளான மகேந்திரனும் இஸ்மாயிலும்.

ஆய்வுக்கூடங்கள் மதிப்பெண்களைத் துரத்தும் கல்வியின் அங்கமாகி விட்டன. வீட்டு மின்சாரத்தில் பியூஸ் போனால் போடத்தெரியாத மின் பொறியாளர். தனது இருசக்கர வாகனம் பழுதடைந்தால் ஆட்டோ மொபைல் பொறியியல் படித்தவர் ஒரு படிக்காத மெக்கானிக்கை நாடுகிறார். இத்தகையோரை உற்பத்திசெய்கிறது அறிவியல் கல்வி. பள்ளிப் பருவத்தின் இயல்பான அறிவியல் தேடலை பாதுகாத்து வளர்க்கும் இடங்களாக ஆய்வுக்கூடங்களை பயன்படுத்த முடியும். அப்படி பயன்படுத்தினால் உண்மையான அறிவியல் கல்வி மூடநம்பிக்கைகளுக்கு எளிதில் பலியாகும் (படித்த) ஏமாளிகளை உருவாக்காது.

சுனாமியும் அறிவியலும்

நம் அன்றாட வாழ்வில் கலந்துபோன மேட் இன் சைனா பொருட்களை மேட் இன் இந்தியாவாக மாற்றிடும் சக்தி உண்மையான அறிவியல் கல்விக்கு உண்டு. இதை எனக்குப் போதித்தவர்கள்ஆய்வுக்கூடக் கோமாளிகள் என்று நாங்கள் அழைத்த மகேந்திரனும், இஸ்மாயிலும்.

சுனாமி எனும் பேரழிவு எங்கள் ஊரைத் தாக்கிய வருடம். தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்காக, ஆய்வுகள் சமர்ப்பிக்க பள்ளி சார்பில் பலரைத் தேர்வுசெய்தோம். அதில் 11-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மகேந்திரனும், இஸ்மாயிலும் ஒரு தனி அணியாகச் செயல்பட அனுமதி கேட்டனர். அவர்கள் மீனவக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் சுனாமியில் பல உறவினர்களைப் பலிகொடுத்தவர்கள் என்பதும் எனக்குத் தெரியாது.

இது மாதிரி நேரங்களில் ஆசிரியர்கள்தான் ஏதாவது ஒரு தலைப்பைக் கொடுப்பார்கள். ஒரு கட்டுரையையே ஆய்வுக்கட்டுரை மாதிரி எழுதி ஏழெட்டு அட்டைகளில் படங்கள் வரைந்து அனுப்புவார்கள். அறிவியல் மாநாட்டு பங்கேற்பும் ஒரு சடங்கு போலவே நடக்கும்.

ஆனால், மகேந்திரனும், இஸ்மாயிலும் ‘சுனாமிக்குப் பின் கடல்’ என்று புதிய தலைப்பு சொல்லி அதற்கு அனுமதி கேட்டனர். நடக்கப்போவதை அறியாமலேயே ஒரு தலைமை ஆசிரியனாக, நான் யந்திரத்தனமாகத் தலையசைத்தேன்.

பாத்திரக்கடை யானைகள்

ஒரு வாரம் அவர்கள் பள்ளிக்கே வரவில்லை. வீட்டிலும் காணவில்லை எனப் பெற்றோர்கள் பதறினார்கள். ஆசிரியர்கள் அதிர்ந்தார்கள். எங்கிருந்தோ ஒருநாள் மதியம் இருவரும் சீருடை இல்லாமல் பல நாள் உறங்காத கண்களோடு பள்ளி வந்தனர். விதவிதமான மீன்களைக் கொண்டுவந்தனர். கடலில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் பலவிதச் சூழல்களில் எடுக்கப்பட்ட கடல்நீர் மாதிரிகள் பாட்டில்களில் வந்தன. , கப்பி, மண், ஷெல், சங்குகளை அவர்கள் வேதியியல் ஆய்வுக்கூடத்தில் கொட்டினார்கள்.

தண்ணீரில் பலவித உப்புகளின் அளவு, மண்ணின் கருப்புநிற மாற்றத்துக்கான காரணம் என நிஜமான சோதனைகளை அவர்கள் நடத்தினார்கள். உயிரியல் ஆய்வுக்கூடத்தில் புதிய வகை மீன்களை ஃபார்மலின் கரைசலில் இட்டு ஆராய்ந்தனர். இயற்பியல் ஆய்வுக்கூடத்தில் கடல்நீரின் மின்கடத்தும் திறன் மாறியதை ஆய்ந்தறிந்து அறிவித்தனர்.

ஆய்வகத்தின் ‘புனிதத்தை’ கெடுத்துப் பாத்திரக்கடையில் புகுந்த யானைகள்போல பொருட்களைச் சிதறடித்து ஆய்வுக்கூடக் கோமாளிகள் என்ற அவர்களின் பெயரை நிரூபித்தனர். நூற்றுக்கணக்கான மீனவர்களோடு நேர்காணல்கள் செய்து முடிவுகளை ஆட்சித்தலைவரிடம் அவர்கள் சமர்ப்பித்தனர். அந்த நாட்கள்தான் எங்கள் பள்ளி ஆய்வுக்கூடங்களின் பொற்காலம். அவர்களது ஆய்வுதான் தேசிய விருதும் பெற்றது.

ரப்பர் ஸ்டாம்புகள்

இந்தியாவின் முதல் பொறியியல் கல்லூரியைக் கோவையில் தொடங்கிய ஜி.டி நாயுடு. ஒரே ஒரு வருடம் கோட்பாடியல் (Theory) போதும். அடுத்த மூன்றாண்டுகள் ஆய்வுக் கூடங்களை உற்பத்தி நிலையங்களாக்கி, அந்த மாணவர்களை நேரடி மின்சாதன உற்பத்தியில் ஈடுபடுத்தி, உழைப்பூதியம் தரும் கல்வியாகவே பொறியியல் கல்வியை அவர் அறிமுகம் செய்தார். நாம் அதைச் சட்டமாக்கிப் பின்பற்றத் தவறினோம்.

அதைத்தான் சீனா இப்போது செய்கிறது. அங்கே பள்ளி, ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சக்தியை உற்பத்தி சக்தியாகப் பயன்படுத்தி ‘மேட் இன் சீனா’ பொருட்கள் செய்யப்படுகின்றன. நமது ஆய்வுக்கூடங்களோ வெறும் மதிப்பெண்களை வழங்கும் ரப்பர் ஸ்டாம்புகளாகிவிட்டன.

நமது பள்ளி ஆய்வகங்களை முறைப்படி நாம் பயன்படுத்தமுடியும் என எனக்குக் காட்டிய, வாய்ப்பு கிடைத்திருந்தால் நோபல் பரிசு வரை போயிருக்க வேண்டிய அந்த ஆய்வுக்கூடக் கோமாளிகளில் இன்று மகேந்திரன் பி.எஸ்.ஸி வேளாண்மை கல்வி முடித்து விவசாயத்துறை வித்தகராகவும், இஸ்மாயில் கடல் பொறியாளராகிக் கப்பல் ராஜாவாகவும் இருக்கிறார்கள்.

தொடர்புக்கு: eranatarasan@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x