Last Updated : 15 Sep, 2020 09:38 AM

 

Published : 15 Sep 2020 09:38 AM
Last Updated : 15 Sep 2020 09:38 AM

கரோனாவில் கொடிகட்டும் யூடியூபர்கள்!

கரோனா காலம் குறித்த பயம் புலியைப் போல் பெரிதாக உருவாகி, இன்று பூனையைப் போல் ஆக்ரோஷம் குறைந்துவிட்டாலும் சீறிக்கொண்டுதான் இருக்கிறது. இந்தக் காலகட்ட அச்சுறுத்தல்களைக் கடக்கப் பெரிதும் துணைநின்றவை யூடியூப் அலைவரிசைகளே. படங்கள், பாட்டுகள் ஆகியவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டுத் தொடங்கப்பட்ட தமிழ் யூடியூப் அலைவரிசைகளே இந்தக் காலகட்டத்தில் அதிகம் விரும்பிப் பார்க்கப்படுபவையாக இருக்கின்றன. இதைப் பயன்படுத்திக்கொண்ட யூடியூப் அலைவரிசைகளும் புதிய புதிய வீடியோக்களை இந்த கரோனா காலத்தில் பதிவேற்றி லட்சக்கணக்கான பார்வையாளர்களையும் பெற்றுள்ளன. இந்த அலைவரிசைகளைப் பின்னின்று இயக்குபவர்கள் அனைவரும் இளைஞர்கள்.

கரோனா காலத்துக்கு முன்பு இருந்ததைவிட யூடியூப் பயன்பாடு தற்போது இரு மடங்குக்கும் அதிகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டு ஒருநாளில் ஒருவரின் யூடியூப் பயன்பாடு சராசரியாக ஒன்றரை மணி நேரமாக இருந்தது. இப்போது அது நான்கு மணி நேரமாக உயர்ந்துள்ளது. யூடியூப் பார்வையாளர்களுள் 81 சதவீதத்தினர் 15-25 வயதுக்கு உட்பட்டவர்களே.

தமிழில் முன்னணி யூடியூப் அலைவரிசைகளில் ஒன்றான ‘நக்கலைட்ஸ்’ இந்த கரோனா காலத்தில்தான் 30 லட்சம் சந்தாதாரர்களைப் பெற்றுள்ளது. அவர்களுடைய சமீபத்திய வீடியோக்கள் பதிவேற்றப்பட்ட சில மணி நேரத்தில் லட்சம் பார்வையாளர்களைக் கடந்திருக்கின்றன. கடைசியாக அவர்கள் பதிவேற்றிய ‘ரிலேட்டிவ்ஸ் அலப்பறைகள்’ வீடியோ சில நாள்களில் 20 லட்சங்களைக் கடந்தது. அவர்களது துணை அலைவரிசையான ‘நக்கலைட்ஸ் எஃப் சோனில்’ கடந்த வாரம் பதிவேற்றப்பட்ட வீடியோ 12 லட்சம் பார்வையாளர்களைக் கடந்திருக்கிறது.

இந்தத் துணை அலைவரிசை இந்த ஆண்டு ஜனவரியில்தான் தொடங்கப்பட்டது. மூன்று லட்சத்துக்கும் குறைவான சந்தாதாரர்களைக் கொண்ட இந்த அலைவரிசையைப் பார்க்கிறவர்களின் எண்ணிக்கை இந்த ஊரடங்குக் காலத்தில் மிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ளது. ஓராண்டுக்கு முன்பு ‘நக்கலைட்’ஸில் பதிவேற்றப்பட்ட ‘பேக் டூ ஸ்கூல்’ வலைத்தொடரில் ‘எக்ஸாம் ஹால்’ பகுதி சமீபத்தில் ஒரு கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது. தமிழ் வலைத்தொடர் ஒரு கோடி பார்வையாளர்களைக் கடப்பது இதுவே முதல் முறை.

அடுத்ததாக ‘மைக்செட்’ அலைவரிசையும் இந்த கரோனா காலத்தில் அதிவேக வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. இந்த அலைவரிசையின் ‘கரோனா சோதனைகள்’ வீடியோவை ஊரடங்குக் காலத்தில் 1.10 கோடிப் பேருக்கும் மேல் பார்த்திருக்கிறார்கள். ஆறு மாதத்துக்கு முன்பு பதிவேற்றப்பட்ட ‘எக்ஸாம் சோதனைகள்’ வீடியோ, ஒரு கோடிப் பார்வையாளர்களைத் தாண்டியிருக்கிறது. 2017இல் தொடங்கப்பட்ட இந்த அலைவரிசை தொழில்நுட்பப் பிரச்சினையால் முடங்கிப்போய், இந்த கரோனா காலத்தில்தான் பழைய நிலையைத் திரும்ப அடைந்துள்ளது.

தமிழின் மற்றுமோர் யூடியூப் அலைவரிசையான ‘எருமைசாணி’யில் தொடங்கப்பட்டுள்ள ‘லாக்டவுன் காதல்’ வலைத்தொடரின் மூன்றாம் பாகம் பதிவேற்றப்பட்ட ஒரு நாளுக்குள் 16 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. ‘பரிதாபங்கள்’ அலைவரிசையில் தொடங்கப்பட்டுள்ள ‘எச்ச கச்ச’ வலைத்தொடர் டிரெண்ட் ஆனது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ‘அராத்தி’ அலைவரிசை, இந்தக் காலகட்டத்தில் பத்து லட்சம் சந்தாதாரர்களைக் கடந்திருக்கிறது. மதன் கெளரியின் அலைவரிசையும் 40 லட்சம் சந்தாதாரர்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது.

இவற்றுடன் ப்ளாக்‌ஷீப், சோதனைகள், ரிஷிபீடியா, ஜம்ப் கட் என இன்னும் பல அலைவரிசைகள் இந்த கரோனா காலத்தில் வேகம் எடுத்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x