Published : 01 Sep 2015 11:56 AM
Last Updated : 01 Sep 2015 11:56 AM
பெற்றோர்களுக்கு எப்போதும் தங்கள் குழந்தைகள் மீது அளவற்ற அன்பு. அதனால் விரைவில் “சுற்றியுள்ள உலகம் மோசமாகி வருகிறது. நம் காலம் போல எதுவும் இல்லை. இவர்கள் என்ன ஆவார்களோ?” என்ற எண்ணத்துக்குப் போய்விடுவார்கள்.
“இந்தக் காலத்துல குழந்தை வளத்தறது பெரிய வேலை!” என்பார்கள். என்ன பிரச்சினை என்று கேட்பதற்கு முன்னே பெரிய பட்டியல் வந்து விழும்.
மாற்றத்தின் தெளிவு
“ நேரத்துக்கு எழுந்துக்கறது கிடையாது. சதா செல்போன் நோண்டறது. பெரியவங்ககிட்ட பயமோ மரியாதையோ கிடையாது. சொந்தக்காரங்க பத்தின எண்ணமும் கிடையாது. எல்லாத்துலயும் ஆயிரம் சாய்ஸ் வேணும். எதுலயும் திருப்தி கிடையாது. சாப்பிடறது எல்லாம் ஜங்க் ஃபுட் தான். செலவு பத்தி கவலையே கிடையாது.
ஒரு அஞ்சு நிமிஷம் முகம் கொடுத்துப் பேச முடியாது. நினைச்ச மாதிரிதான் எல்லாம் நடக்கணும்னு நினைக்கிறாங்க. சின்ன விஷயத்துக்குக் கூட இடிஞ்சு போயிடறாங்க. இவங்கெல்லாம் நாளைக்கு எப்படி அட்ஜஸ்ட் பண்ணிக் குடும்பம் நடத்துவாங்களோ? நினைச்சாலே பயமா இருக்கு!”
இந்தக் கவலையில் நிறைய நிஜங்களும் நியாயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், காலத்தின் மாற்றம் பற்றிய தெளிவு முதலில் வேண்டும்.
எல்லாக் காலத்திலும் பிள்ளைகள் பொறுப்பற்றவர்களாகப் பக்குவமற்றவர்களாகத் தான் பெற்றோர்களுக்கும் பெரியவர்களுக்கும் தெரிவார்கள். அதே போல உலகில் வரும் மாற்றங்களைப் பயத்தோடும் சந்தேகத்தோடும் அணுகுவது வயதானவர்களின் இயல்பு. உலகில் ஏற்படும் மாற்றங்கள் எதுவும் நல்லதல்ல என்று வயதானவர்கள் நினைக்கக் காரணம் தங்கள் அறிவும் அதிகாரமும் ஆட்டம் கண்டு விடுமோ என்ற அச்சம்தான்.
மாற்றத்தின் பயம்
மாற்றம் வெளியிலிருந்து வருகையில் எதிர்ப்பதும், அவை நல்லதில்லை, நிலைக்காது என்று ஆருடம் சொல்வதும் என்றும் நடந்து வருபவை தான்.
“உலகில் கம்ப்யூட்டர்கள் கொஞ்சம்தான் பயன்படும் ” என்று 50-களில் பேசினார்கள். பேசுகிற முதல் திரைப்படம் வந்த போது, “இந்த நடிகர்களை யார் பேசச்சொன்னது, நடித்தால் போதாது?” என்றார்கள். ரயில் வண்டியைப் பார்த்துப் பயந்து ஏற மறுத்தவர்கள் நம் ஆட்கள்.
கிரஹாம் பெல் தொலைபேசிக்கான தனது காப்புரிமையை விற்க நினைத்த போது, “ஒலியைக் கடத்தும் இந்தக் கருவியால் எந்த வியாபாரப் பலனும் இல்லை” என்று மறுத்தன பிரபல நிறுவனங்கள். தாமஸ் ஆல்வா எடிசன் எதிர்ப்புகளையும், வழக்குகளையும், துரோகங்களையும், தோல்விகளையும் கண்டவர். அடிப்படைக் காரணம், எல்லா மாற்றங்களையும் உலகத்தினர் என்றும் பயத்தோடு எதிர்த்ததுதான்.
சாதகங்கள் பாதகங்கள் இரண்டையும் மாற்றங்கள் ஏற்படுத்தும். ஒன்றை அனுபவிக்கும்போது இலவச இணைப்பாய் மற்றதும் கூடவே வரும். கால்குலேட்டர் வந்தது. பெரிய கணக்குகள் சுலபமாய்த் தவறில்லாமல் கைக்குள் வந்தது. மனக் கணக்கு போய்விட்டது. என் பாட்டி காலத்தில் அனைவருக்கும் மனக் கணக்கு தெரியும். என் பெற்றோர் காலத்திலேயே அது வழக்கொழிந்துவிட்டது.
இந்தத் தொடர்ச்சியில் தான் இன்றைய தொழில்நுட்பத்தையும் அது ஏற்படுத்திய வாழ்வியல் மாற்றங்களைப் பார்க்க வேண்டும்.
கொடுத்தது நாம்தானே!
ரயில் டிக்கெட் வாங்க அரை நாள் லீவு போட்டுவிட்டுக் கியூவில் நின்ற பெற்றோருக்கு இன்று உட்கார்ந்த இடத்தில் செல்போனில் இருக்கைகள் பதிவு செய்யப்படுகின்றன. தொழில்நுட்பம் என்பது பூதம் போல. நீங்கள் சொல்வதையும் செய்யும். சொல்லாததையும் செய்யும். எல்லாப் பரிமாற்றங்களும் செல்போனில் நடக்க ஆரம்பித்தால், அப்புறம் நேரத்துக்கு வெளியில் போய்க் காத்திருப்பது குறையத்தானே செய்யும்?
எல்லாக் கியூவிலும் நின்று நின்று பொறுமையும் சகிப்புத்தன்மையும் வந்தது முன்பு. கேட்டது அனைத்தும் உடனே கிடைக்கையில் காத்திருத்தல் எப்படிச் சாத்தியமாகும்? பொறுமையும் மனப்பக்குவமும் எப்படிக் கிடைக்கும்? பிறரிடம் கை நீட்டி கடன் வாங்குவது கேவலம் என்று இருந்த சமூகம் கடன் அட்டையில் காலம் தள்ளுகையில் எப்படிப் பழைய நல்ல பண்புகளைத் தூக்கிப் பிடிக்க முடியும்?
இன்று நம் பிள்ளைகள் வாழும் வாழ்க்கை முறை அனைத்தும் நாம் அருளியவை. எல்லாவற்றையும் கொடுத்துவிட்டுப் பிள்ளைகளை நோவதால் என்ன பலன்?
ஒவ்வொரு அறைக்கும் ஒரு டி.வி. பீட்சா, மாத தவணையில் வண்டி, வீடியோ விளையாட்டுக்கள், விலை உயர்ந்த உடைகள், டி.வியில் பார்த்து, வீட்டுக்குப் பயன்படாப் பொருட்களையும் கூட தருவித்தது நாம். அவர்கள் அனுபவிக்கையில் ஏற்படும் எதிர்மறை விளைவுகளுக்கும் நாம் தானே பொறுப்பேற்க வேண்டும்!
நாம் அவர்களிடம் எதிர்பார்க்கும் ஒவ்வொரு விஷயத்திலும் ஒன்றுக்கு ஒன்று முரணான விஷயத்தை எதிர்பார்க்கிறோம். அதை நீங்களே புரிந்து கொள்ளாத போது எப்படி உங்கள் பிள்ளைகள் புரிந்து கொள்ள முடியும்?
ஒப்படைத்தலே வழி!
முன்பெல்லாம் மாமியார்- மருமகள் சண்டைகளின் காலம். அடுத்த தலைமுறையில் கணவன் மனைவி சண்டை தான் பிரதானம். இன்று பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் சண்டை. ஆக, உறவுச்சிக்கல்கள் என்றும் இல்லாமல் இல்லை.
என்ன செய்யலாம்? உங்களின் நேற்றைய கனவுகளை அவர்களின் நாளைய கற்பனைகள் மேல் திணிக்காதீர்கள். அவர்களுக்கான நேரத்தையும் இடைவெளியையும் கொடுத்து விட்டு, கண்ணியமாக விலகியிருங்கள். அவர்கள் வாழ்க்கையை அவர்கள் மட்டும் தான் தீர்மானிக்கப் போகிறார்கள். தடுமாறுகையில் பின்னாலிருந்து தாங்குவதற்கு நான் இருக்கிறேன் என்று மட்டும் உணர்த்துங்கள். உங்கள் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக வெளியேற்றுங்கள். இதனால் உங்களுக்கு ஏற்படும் மன நெருக்கடிகளை என்றாவது சாவகாசமாகப் பேசுங்கள். புரிய வையுங்கள். பணிய வைக்க நினைக்காதீர்கள்.
அவர்கள் மாறணும் என்றால் அதற்கு நீங்கள் முன் மாதிரியாக இருங்கள். கோபப்படாதே என்று அறிவுரை சொல்வதற்குப் பதில் நீங்கள் கோபப்படாமலிருங்கள். “யோகா செய்” என்று அறிவுரை செய்வதை விட நீங்கள் செய்து காட்டுங்கள்.
உங்கள் பிள்ளையை நீங்கள் மட்டும் தான் காக்க வேண்டும் என்ற மமதையிலிருந்து வெளியே வாருங்கள். உங்கள் பிள்ளையை உண்மையில் காக்கும் சக்தி ஒன்று உண்டு. அதனிடம் ஒப்படைப்பதுதான் சிறந்த வழி.
நம்புபவர்கள் அதை இறைமை என்பர். மற்றவர்கள் அதை இயற்கை என்பர்.
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT