Published : 10 Jul 2020 08:47 AM
Last Updated : 10 Jul 2020 08:47 AM
திரைத்துறையில் அசாத்திய ஆளுமையாகத் திகழ்ந்தவர் பிரபல இசையமைப்பாளர், இத்தாலி தேசத்தின் மேஸ்ட்ரோவான என்னியோ மாரிக்கோனி (இத்தாலிய உச்சரிப்பின் படி எனியோ மோரிகோனே). கடந்த திங்கள் அன்று 91 வயதில் இவ்வுலகை விட்டுப் பிரிந்து திரையுலகில் ஒரு நிரந்தர வெற்றிடத்தை உருவாக்கிச் சென்றுள்ளார். 1960-களில், தன்னுடைய இசைப் பயணத்தை அவர் தொடங்கும்வரை, பின்னணியிசைக் கோப்பு என்பது, நிசப்தங்களால் ஆன இடைவெளியை நிரப்பும் ஓர் ஓசை மட்டுமே.
நிசப்தங்களுக்குள் மறைந்திருக்கும் உணர்வுகளை மீட்டெடுத்து, பார்வையாளர் மனத்துக்குள் அந்த உணர்வுகளைக் கடத்தும் ஒன்றாக அதை மாற்றிய பெருமைக்குச் சொந்தக்காரர் மாரிக்கோனி மட்டுமே.
மாரிக்கோனியின் தனித்துவம்
இயக்குநரின் தேவைக்கு ஏற்ப, ஒரு மாயாஜாலத்தைப் போன்று திரைக்கதைக்குள் ஊடுருவி, கதைச் சூழலுக்குத் தேவையான ஒரு முழுமையான இசைக்குறிப்பை அசாத்திய வேகத்துடன் உருவாக்கவும், தேவைப்பட்டால் அதை வாசிக்கவும் கூடிய திறன் வாய்க்கப்பெற்ற இசையமைப்பாளர்கள் வெகு சிலரே. ஹான்ஸ்சிம்மெர், அலெக்ஸாண்டர் தெஸ்பலட், ஜான் வில்லியம்ஸ், மிக்கெலெவி, லெஸ்லி பார்பர் ஆகியோரை உள்ளடக்கிய இத்தகைய அசாத்திய திறன் பெற்றவர்களின் பட்டியலில், தனித்துவமிக்கவர், முதன்மை யானவர் மாரிக்கோனி.
சாகாவரம் பெற்ற இசை
நவீனத் திரையிசையின் பிதாமகன் எனக் கருதப்படும் மாரிக்கோனி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக மனித உணர்ச்சிகளால் ததும்பி வழிந்த தன்னுடைய இசை வாழ்வில், வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத 500-க்கும் மேலான இசைக்கோப்புகளை உருவாக்கியுள்ளார். திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்கள் எனக் கருதப்படும் கில்லோ பொன்டெகோர்வோ, டெரன்ஸ் மாலிக், ரோலண்ட் ஜோஃப், பிரையன் டி பால்மா, கியூசெப் டொர்னடோர், பாரி லெவின்சன், க்வென்டின் டாரன்டினோ போன்ற தலைசிறந்த இயக்குநர்களின் படங்களுக்கு மொழியாக இவருடைய இசையே இருந்தது. முக்கியமாக, செர்ஜியோ லியோனின் மேற்கத்தியக் காவிய புராணங்களுக்கு இவர் வழங்கியிருந்த பின்னணியிசை சாகாவரம் பெற்றது.
காலம் தாழ்த்தி வழங்கப்பட்ட ஆஸ்கர்
பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருது 2016-ல் வழங்கப்பட்டபோது, மாரிக்கோனியின் வயது 88. அதுவும் வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்ட 11 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் மீதான திரையுலக வெளிச்சம் மங்கிவிட்டதோ என்று கருதப்பட்ட நிலையில், டாரன்டினோவின் ‘ஹேட்ஃபுல் எய்ட்’ எனும் படத்துக்காக அவர் ஆஸ்கர் விருதை மீண்டும் பெற்றார். அந்தப் படத்துக்கு மாரிக்கோனி அமைத்திருந்த இசை வியக்கத்தக்க அளவுக்கு ஜீவனுடனும் புதுமையுடனும் இருந்தது. கண்ணை மூடிக்கொண்டாலும், பார்த்தாலும், காட்சிகளை நம்முள் கடத்தும் இயல்புடன் அந்த இசை படைக்கப்பட்டு இருந்தது.
பின்னணியிசையின் இலக்கணம்
சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களின் இசைக்கோப்பு மூன்று தளங்களில் இயங்குவது. அடித்தளம் போன்று அவர்கள் உருவாக்கும் இசை, ஒட்டுமொத்த திரைப்படத்துக்கானது. இசையால் பின்னப்படும் ஆழமான நயம் அது. பார்வையாளர்களால் அதை உணர மட்டுமே முடியும், கேட்க முடியாது. அடுத்து அவர்கள் அமைக்கும் இசை, குறிப்பிட்ட காட்சிகளுக்கானது. குறிப்பிட்ட திருப்பத்தை உருவாக்கும் காட்சிகளின் உணர்ச்சிகளை ஒத்திசைக்கும், சில நேரம் அந்தக் காட்சிகளில் வெளிப்படும் உணர்வுகளுக்கு நேர் எதிராகவும் அவை ஒலிக்கும். அடுத்தது பார்வையாளர்களைச் சட்டெனக் கவரக்கூடிய விதத்தில், அவர்கள் மீண்டும் மீண்டும் முணுமுணுக்கக்கூடிய விதத்தில், இனிமையான ராகத்தைக் கொண்டதாக இருக்கும்.
பின்னைய இரண்டுமே மேல்தளத்தில் இயங்கக் கூடியவை. இந்த மூன்றையும் மிகுந்த நேர்த்தியுடன் உருவாக்கிப் பிணைக்கும் திறன் என்னியோ மாரிக்கோனிக்கு இயற்கையாகவே உண்டு. ஊதுக்கின்னரம், விசில், மாடுகளில் கட்டப்படும் மணி போன்ற வழக்கத்துக்கு மாறான கருவிகளைக்கொண்டு அவரமைத்த இசையில் பிரபலமான படங்கள் காலந்தோறும் பேசப்பட்டன. ஆன்மாவைத் தட்டியெழுப்பும் மெல்லிசைக் குரலும் அந்த இசையுடன் இயைந்து ஒலிக்கும். அவரது பின்னணி இசையானது பெரும்பாலும் பாடல் இசையமைப்புக்கு நெருக்கமானதாக இருக்கும்.
பெயர் சொல்லும் படங்கள்
கிளிண்ட் ஈஸ்ட்வுட் என்ற நட்சத்திரத்தையும் படைப்பாளியையும் உருவாக்கியதே இவரது இசையென்றால், அது மிகையல்ல. கிளிண்ட் ஈஸ்ட்வுட் நடிப்பில் லியோனின் இயக்கத்தில் உருவான ‘ஏ ஃபிஸ்ட்ஃபுல் டாலர்ஸ்’ படத்துக்கு மாரிக்கோனி உருவாக்கியிருந்த இசையானது மிகுந்த திகிலை அளிக்கும் வகையில் ஒலித்தது. ஊதுகுழல்களைக் கொண்டு எழுப்பப்பட்ட பிளிறல்கள், உரக்க ஒலிக்கும் உணர்ச்சிகளின் இசைக் கதம்பமாக இருந்தது. அந்தப் படத்தின் பின்னணி இசையின் மையக்கரு பேய்ப் படத்துக்கான ஒன்றாக இருந்தது. கருவிகளின் இசையை மட்டும் கொண்டு அந்தப் படத்தின் மனநிலையையும் பாணியையும் உணர்வுகளையும் அற்புதமாக அவர் உருவாக்கியிருந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கில்லோ பொன்டெகோர்வோவின் ‘தி பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ்’ எனும் படத்தில் கிளர்ச்சியாளரான அலி கைது செய்யப்படும்போது ஒலிக்கும் புல்லாங்குழல் மாரிக்கோனியின் மேதைமைக்குச் சான்று. ‘அலி தீம்’ என அழைக்கப்படும் அந்த இசைக்கு, இணை இசையமைப்பாளர் அங்கீகாரத்தை இயக்குநரான பொன்டெகோர்வோவுக்கு அவர் வழங்கியது மாரிக்கோனியின் நேர்மைக்குச் சான்று.
1988-ம் ஆண்டில் வெளியான ‘சினிமா பாரடைஸோ’ படத்துக்கான அவரது இசையைத் தன்னுடைய மகன் ஆன்ட்ரியாவுடன் இணைந்து அமைத்தார். இத்தாலியக் களியாட்டத்தின் உணர்ச்சிப் பிரவாகமாக அந்த இசை இருந்தது. பியானோ, கிட்டார், சாக்ஸபோன் ஆகியவற்றைக்கொண்டு உருவாக்கப்பட்ட அந்த இசை, சோகத்தையும் ஏக்கத்தையும் உணரச் செய்தது. உணர்ச்சிகளின் தெளிவான வெளிப்பாடாக இருக்கும் மாரிக்கோனியின் இசை, உலகெங்கும் உள்ள இசைக்கலைஞர்களால் பிரதியெடுக்கப்பட்டது. தொலைக்காட்சிகளிலும் விளம்பரங்களிலும் பயன்படுத்தப்பட்டது. 1966-ல் வெளியான ‘தி குட், பேட் அண்டு அக்லி’ திரைப்படத்துக்கு மாரிக்கோனி அமைத்திருந்த தீம் இசை, ‘பாட்ஷா’ படத்தில் ரகுவரன் வரும்போதெல்லாம் ஒலித்தது.
இசைக்கு ஏது மறைவு?
இசையைத் தன்னுடைய உடலின் அங்கமாக, வாழ்க்கையின் மொழியாகக்கொண்ட ஒருவரால் மட்டுமே ஒரு தேர்ந்த, முழுமையான பின்னணி இசையை வழங்க முடியும். என்னியோ மாரிக்கோனிக்கு உடலின் அங்கமாக மட்டுமல்ல; ஆன்மாவின் முழு உருவாகவும் உயிரின் நீட்சியாகவும் வாழ்வின் சுவாசமாகவும் இசை மட்டுமே இருந்தது.
இதனால்தான், 60 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படங்களில் அவர் வடிவமைத்த இசை, நவீனத்துவத்துக்குச் சற்றும் குறைவில்லாமல், புதுமையான ஒலியுடன் இன்றும் இடைவிடாமல் நமக்கு மத்தியில், இரைச்சல்களுக்கு நடுவே ஒலித்தபடியிருக்கிறது. ஒரு நேர்காணலில், திரைப்படங்களுக்குத் தான் வழங்கியிருக்கும் இசை, தன்னுடைய திறனின் சிறுதுளியே என்று தெரிவித்தார் மாரிக்கோனி. மேம்போக்காகப் பார்ப்பவர்களுக்கு இது அகங்காரம் எனத் தோன்றலாம். அவருடன் பயணித்தவர்களுக்கும், அவருடன் பணிபுரிந்தவர்களுக்கும், அவருடைய இசையைப் பின்தொடர்பவர்களுக்கும் மட்டுமே அந்தக் கூற்றிலிருக்கும் உண்மையும் நேர்மையும் புரியும்.
தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment