Published : 12 May 2014 12:00 AM
Last Updated : 12 May 2014 12:00 AM
ஆழமற்ற கடல் பகுதிகளில் காணப்படும் பவழமும் (Coral), அவை இணைந்து உருவாக்கும் பவழத் திட்டுகளும் உண்மையில் எலும்புக்கூடு போன்ற சுண்ணாம்புக் கூட்டின் மீது கூட்டங்கூட்டமாக வாழும் உயிரினங்கள்தான். பவழப் பாறைகள் என்றால் உயிரற்ற ஜடம் என்று நம்புகிறோம். அது தவறு, உண்மையில் இவை கூட்டு உயிரினங்களால் உருவாக்கப்பட்டவை. நகைகளில் முன்பு பதிக்கப்பட்ட பவழங்கள் உயிரிழந்த பவழத் திட்டுகளில் இருந்துதான் எடுக்கப்பட்டன.
கடற்கரையோரப் பகுதிகளில் சூரிய வெளிச்சம் படும் தெளிவான நீரில், மிதமான வெப்பநிலையில்தான் பவழத் திட்டுகள் செழித்து வளரும்.
பவழ உயிரிகள் கடல் அனிமோன், இழுதுமீன் (Jelly fish) உயிரினங்களின் குடும்பத்தைச் சேர்ந்தவை. ஒவ்வொரு பவழப் பூச்சியும் பாலிப் (Polyp) என்று அழைக்கப்படுகிறது. இவை சுண்ணாம்புக் கூட்டின் மீது ஒட்டிக்கொண்டு வாழ்கின்றன. இந்தக் கூட்டையும் இவையே உருவாக்குகின்றன.
இவற்றுக்கு வாயும் உணர்கொம்புகளும் உண்டு. பிளாங்க்டன் போன்ற மிதவை நுண்தாவரங்களை இரையாகப் பிடித்து உண்ண இந்த உணர்கொம்புகள் பயன்படுகின்றன. ஆபத்து ஏற்படும்போது உள்ளே இழுத்துக்கொள்ளும் தன்மை கொண்டவை இவை.
சுண்ணாம்புக் கூட்டின் மீது ஒட்டிக்கொண்டே பவழப் பூச்சிகள் காலம் முழுவதும் வாழ்ந்தாக வேண்டும். ஏனென்றால், அவற்றால் தனியாக நகர முடியாது. பவழத் திட்டுகளில் (Coral reefs) பல வடிவங்கள், வகைகள் உண்டு.
மூளைப் பவழம்: மனித மூளையை ஒத்திருப்பதால் இது இந்தப் பெயரைப் பெற்றது. கூட்டின் முகடுகளில் பவழப் பூச்சிகள் வளர்வதால், இந்தத் தோற்றம் உருவாகிறது. மூளை வடிவப் பவழங்கள் மனிதர்களின் தலை அளவுக்கு வளர்வதற்கு 20 ஆண்டுகள் ஆகும்.
மான் கொம்புப் பவழம்: மான் கொம்பின் கிளையை ஒத்த வடிவம் கொண்டுள்ளதால் இது இந்தப் பெயரைப் பெற்றது. இந்தப் பவழங்களில் சில கிளைகள் ஒடிந்து விழுந்தாலும்கூட, அதிலிருந்து புதிய கிளை துளிர்த்து, வளரும் தன்மை கொண்டது.
தட்டுப் பவழம்: இந்த வகை பவழத் திட்டுகள் பல அடுக்குகளைக் கொண்ட தட்டை போலிருக்கும். தெளிந்த நீரில் மட்டுமே இந்த வகை பவழத் திட்டுகள் காணப்படும்.
தமிழகத்தில் ராமேஸ்வரம் அருகிலுள்ள மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகத்தில் பவழத் திட்டுகள் அதிக அளவில் காணப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT