Last Updated : 11 Aug, 2015 11:55 AM

 

Published : 11 Aug 2015 11:55 AM
Last Updated : 11 Aug 2015 11:55 AM

தோல்வியும் வெற்றியே

நீங்கள் எதற்கு அதிகம் பயப்படுவீர்கள்? வறுமைக்கா? இறப்புக்கா? தனிமைக்கா? இல்லை, கவலைக்கா?

பலருக்கு மிகப் பெரிய பயம், தோல்வியைப் பார்த்து தான். தோல்வியாலேயே மனிதர் துவண்டு போகிறார்கள். தொழிலிலும், காதலிலும், படிப்பிலும் தோல்வியடைவோர், தற்கொலை முடிவு வரைகூட செல்கிறார்கள்.

நாம் அனைவரும் தோல்விக்குப் பயந்தே எதையும் செய்கிறோம், ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் தோல்வி மிக முக்கியமான அம்சம். தோல்வியே வெற்றியின் முதல் மைல்கல் அல்லவா? உண்மையில் தோல்வியால் நமக்கு நன்மைகளே அதிகம்.

தோல்வியால் என்ன நன்மைகளும் சிறப்பும் இருக்க முடியும் என்கிறீர்களா?

ஹாரி பாட்டர் புத்தகங்களை எழுதியவர், ஜே.கே. ரவுலிங் (JK Rowling) என்னும் ஒரு பெண்மணி. அவர், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், “The Fringe Benefits of Failure” என்ற தலைப்பில் பேசிய உரை மிகவும் பிரபலமானது. அது புத்தகமாகவும் வெளியானது. தோல்வியால் என்ன பயன்கள் கிடைக்கும் என்பதைப் பற்றி மாணவர்களிடம் அவர் பேசினார்.

தோல்வி எது, வெற்றி எது?

தோல்வியை நாம் அனைவரும் மோசமான விஷயமாகவே நினைக்கி றோம். தோல்வியடைந்தவரை ஏதோ கொலைக் குற்றம் செய்தவரைப் போல் பார்க்கிறோம். ஜே.கே. ரவுலிங், மிகவும் வறுமையில் இருந்தபோதும், அவரின் மிகப் பெரிய பயம் தோல்வியாக இருந்தது என ஒப்புக்கொள்கிறார். அவர், “தோல்வி எது வெற்றி எது என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும், நீங்கள் அதைச் செய்யாவிட்டால், இந்த உலகம் ஒரு விதிகளின் தொகுப்பை உங்களிடம் கொடுத்து அதன்படி உங்கள் வாழ்க்கையை அமைத்து விடும்” என்கிறார்.

தோல்வியைப் பற்றிய உங்களுடைய கருத்தும், ஒரு சராசரியான மனிதரின் வெற்றிக்கான கருத்தும், ஒன்றாகவே இருக்கலாம். அதன்படி பார்த்தால் நீங்கள் எப்போதோ வெற்றி பெற்றுவிட்டீர்கள். அதற்காகத் தோல்வியடைவது நல்லது என்றோ வேடிக்கையானது என்றோ சொல்லவில்லை. நீங்கள் முதலில் உங்கள் பலத்தை அறிந்து அதில் வெற்றி பெற முயல வேண்டும். மற்ற விஷயங்களில் நீங்கள் தோல்வியடைந்தால், அது தவறல்ல.

தோல்வின் நன்மை

வெற்றியடையும்போது கற்றுக்கொள்வதைவிட, தோல்வியடையும்போது தான் நாம் பல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறோம். தோல்வியின்போதுதான், மதிப்புடைய நண்பர்களையும், உறவினர்களையும் கண்டறி கிறோம். வெற்றியடையும்போது, அதை நம்முடன் சேர்ந்து கொண்டாடப் பலர் இருப்பர், ஆனால் தோல்வியின் போது நமக்கு ஆதரவாய் ஒரு சிலரே இருப்பர். அப்படிப்பட்டவர்களே எந்தச் சுயநலமுமின்றி நம் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள்.

நீங்கள் உங்களது மனவலிமை பற்றியும் மனவுறுதி பற்றியும் அறியத் தோல்வியை சரியான சோதனை வேறென்ன இருக்க முடியும்? நீங்கள் எப்போது பின்னடைவுகளிலிருந்து மேலும் வலிமையுடனும், திறமையுடனும் எழுகிறீர்களோ, அப்போது உங்களின் வாழ்க்கை தானாக வெற்றியடையும். பல தோல்விகளுக்குப் பிறகு கிடைக்கும் வலி மிகுந்த வெற்றியே உண்மையான வெற்றி.

எது சந்தோஷம்?

மேலும், ஜே.கே. ரவுலிங் கூறுகையில் “உங்களது மதிப்பெண்களும் தகுதிகளும் உங்கள் வாழ்க்கையல்ல. ஆனால், இவைதான் உங்கள் வாழ்க்கை என்று கூறும் பலரை நீங்கள் சந்திக்க நேரும், அவர்களிடமிருந்து ஒதுங்கியிருப்பதே நல்லது” என்று கூறுகிறார். வாழ்க்கையின் உண்மையான சந்தோஷம் உங்கள் சாதனைப் பட்டியலில் இல்லை. தோல்வியின் அர்த்தம் நாம் ஒரு விஷயத்தில் மோசமாக உள்ளோம் என்பதல்ல, நாம் வெற்றிபெற இன்னும் பல வழிகளை முயற்சி செய்ய வேண்டும் என்பதே” என்கிறார்.

தோல்வியை வெல்ல…

பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தோல்வியே இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்று விரும்புகிறார்கள், ஆனால், உண்மையில் அது சாத்தியமில்லை. நம் அனைவரின் கட்டுப்பாட்டையும் தாண்டிக் கடினமானது வாழ்க்கை. வாழ்க்கையில் சில தோல்விகள் தவிர்க்க முடியாதவை, நீங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் வாழ்ந்தால் மட்டுமே தோல்வியைத் தவிர்க்கலாம், ஆனால் அப்படித் தோல்விக்குப் பயந்து வாழும் வாழ்க்கையே தோல்விதானே? ஆகையால், தோல்வியே கூடாது என்பதற்குப் பதில் தோல்வியை எப்படிச் சமாளிப்பது என்பதை பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

உண்மையில், நாம் மாணவர்களைத் தோல்விக்குத் தயார்படுத்தாதபோது, நாம் அவர்களுக்குக் கெடுதலையே செய்கிறோம். அவர்கள் எப்படித் தோல்வியை எதிர்த்து முன்னோக்கிச் செல்வது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். மாணவர்களும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும், தோல்வியை நாம் சாதகமாகப் பார்த்தால், அது மேலும் வெற்றி பெறுவதற்கான கடின முயற்சியை மேற்கொள்ள உதவும்.

தோல்வியை கையாளத் தெரியாத மாணவர்கள், தோல்வியடைவோம் என்ற பயத்தில் முயற்சி செய்வதையே தவிர்க்கிறார்கள். தப்பு எங்கே என்பதை அறியும் முன்பே முயற்சியைக் கைவிடுகிறார்கள். நாம் எங்கும் கற்க முடியாததை தோல்வியே நமக்குக் கற்றுத் தரும். நம்முடைய வலிமையும் மன உறுதியும் தோல்வியின் போது, நமக்கு முழுமையாய் தெரியும்.

வெற்றி என்பது பெற்றுக்கொள்வது, தோல்வி என்பது கற்றுக்கொள்வது. முதலில் கற்றுக் கொள்வோம் பின்பு பெற்றுக்கொள்வோம். ஆகவே தோல்வியை பலவீனமாக கருதாமல், பலமாய் கருதினால், நமக்கு நன்மைகளே கிட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x