Published : 31 Mar 2020 08:56 AM
Last Updated : 31 Mar 2020 08:56 AM
கோபால்
பற்றாக்குறை நேரத்தில் தள்ளுபடி
முகக்கவசம் அணிவதன் மூலம் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என்ற தகவல் பரவியதிலிருந்து முகக்கவசங்களை வாங்க பலரும் முண்டியடித்ததால் பற்றாக்குறை ஏற்பட்டது. அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டியதில்லை. வைரஸ் தொற்றின் அறிகுறி உள்ளவர்கள், அன்றாடம் அதிகம் பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பவர்கள் உள்ளிட்ட சிலர் மட்டும் அணிந்தால் போதும் என்று பல மருத்துவர்கள் கூறிவிட்ட பிறகும், இந்தியாவில் முகக்கவசங்கள் காலியாகிக்கொண்டிருக்கின்றன.
இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, முகக்கவசங்களை அதிக விலைக்கு விற்கும் போக்கும் வியாபாரிகளிடையே ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க முகக்கவசத்தையும் கிருமிநாசினியையும் அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் சேர்த்துள்ளது மத்திய அரசு. இவற்றை அதிக விலைக்கு விற்பது தண்டனைக்குரிய குற்றம் என்ற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், கொச்சியில் உள்ள மருத்துவக் கருவிகள் விற்பனையில் ஈடுபட்டிருக்கும் ‘கொச்சின் சர்ஜிகல்ஸ்' என்ற நிறுவனம் தலா ரூ.2 விலையில் 5,000 முகக்கவசங்களை இரண்டு நாட்களில் விற்றுள்ளது.
ரூ.8 அல்லது ரூ.10க்கு ஒரு முகக்கவசத்தை உற்பத்தியாளரிடமிருந்து வாங்கி அதை ரூ.2-க்கு விற்பதால் இரண்டு நாட்களில் மட்டும் அந்த நிறுவனம் ரூ.40,000 நஷ்டமடைந்திருக்கிறது. இந்தச் அசாதாரண சூழ்நிலையில் சக மனிதர்களுக்காக இந்த நஷ்டத்தை சுமக்கத் தயாராக இருப்பதாக ‘கொச்சின் சர்ஜிகல்ஸ்' நிறுவன உரிமையாளர் கூறியிருக்கிறார்.
இதேபோல் அமெக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் லா கொலம்பே என்ற முட்டை விற்பனை நிறுவனம் ஒரு பெரிய குளிர்சாதனப் பெட்டியில் நூற்றுக்கணக்கான முட்டைகளைச் சேமித்து வைத்துள்ளது. யார் வேண்டுமானாலும் தமக்குத் தேவைப்படும் அளவு முட்டைகளை எடுத்துக்கொண்டு இயன்ற கட்டணத்தை அளிக்கலாம். நோய் எதிர்ப்பு ஆற்றல் உள்ளவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் பாதிப்பு குறைவாக இருக்கும் என்பதால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
நல்லோரின் நிதியுதவி
கரோனா வைரஸ் பரவலால் உலக நாடுகள் ஸ்தம்பித்துவிட்ட நிலையில் பலருக்கு அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வருமானத்துக்குக்கூட வழியில்லாமல் போய்விட்டது. இவர்களுக்கு பல்வேறு வகைகளில் உதவும் கைகள் நீண்டுள்ளன. உலக நாடுகள் பலவற்றில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், இதுபோன்ற உதவிகளைச் செய்துவருகின்றனர்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் அமைப்புசாரா தொழிலாளிகளுக்கு உதவ சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தன் ஒரு மாத ஊதியமான ரூ.2.25 லட்சத்தை தமிழக அரசிடம் அளித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து தி.மு.க. எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும் தங்களுடைய ஒரு மாத ஊதியத்தை அரசுக்கு அளிக்க முன்வந்துள்ளார்கள்.
போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கோவிட்-19 நோயாளிகளைத் தங்கவைத்து சிகிச்சை அளிக்க தனக்குச் சொந்தமான பெஸ்டனா சிஆர்.7 நட்சத்திர உணவு விடுதியை அளித்துள்ளார். அத்துடன் நோயாளிகளின் மருத்துவச் செலவுகள், அன்றாடத் தேவைகள், மருத்துவர்களுக்கான ஊதியம் ஆகியவற்றுக்கும் தானே பொறுப்பேற்க முன்வந்திருகிறார்.
வழிகாட்டும் குழந்தைகள்
உலகம் முழுவதும் கரோனா தொற்றுக்கான அறிகுறி தென்படுபவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இப்படி தனிமைப்படுத்தப்படுபவர்கள் பொழுதைக் கழிப்பது மிகக் கடினம். அவர்களால் ஸ்மார்ட் போன்களைக்கூட நீண்ட நேரம் பயன்படுத்த முடியாது. மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களைத் தவிர வேறு யாரும் அவர்களிடம் நெருங்கவும் முடியாது.
தனிமைப்படுத்தப்பட்டவர்கள்கூட ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள முடியாது. இப்படித் தனிமையில் துவண்டு வருபவர்களுக்கு மற்றவர்களுடைய அன்பையும் நெருக்கத்தையும் வெளிப்படுத்தும் சின்னச் சின்ன செய்கைகள்கூட பெரும் நம்பிக்கையையும் மன அமைதியையும் அளிக்கக்கூடும். அப்படிச் செய்ய விரும்புபவர்களுக்கு அமெரிக்கப் பள்ளிக் குழந்தைகள் வழிகாட்டியிருக்கிறார்கள்.
அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் உள்ள செயின்ட் ஆண்டனீஸ் பள்ளி மாணவர்கள் ‘விரைவில் குணமடையுங்கள்’ என்று வாழ்த்து அட்டைகளைத் தயாரித்து, தமது ஆசிரியர் மூலம் நெப்ராஸ்கா பொது மருத்துவ மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு அஞ்சல் வழியாக அனுப்பியிருக்கிறார்கள்.
துன்பம் வரும்போது சிரிங்க
என்ன நடக்கிறது என்று சுதாரித்துக்கொள்வதற்குள் உலக நாடுகள் பலவற்றில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவத் தொடங்கிவிட்டது. வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை அனுமதிப்பதில் பல நாட்டு அரசுகளுக்குச் சிக்கல் நிலவியதால், உலகின் பல பகுதிகளில் கப்பல்களில் விமான நிலையங்களிலும் நூற்றுக்கணக்கான பயணிகள் சிக்கித் தவித்தனர்.
இத்தாலியில் 700 பயணிகளுடன் நடுக்கடலில் நிறுத்தப்பட்டுவிட்ட கப்பலும் ஒன்றின் கேப்டன் கென்னாரோ ஆர்மா, தனது பணிசார்ந்த கடமைகளைக் கடந்து பயணிகள் மீது அக்கறை செலுத்தினார். அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேறியபின், கடைசி ஆளாகவே கப்பலைவிட்டு அவர் வெளியேறினார். அத்துடன் கப்பலில் இருந்தபோது புதுமையான வாசகங்களுடன் அறிவிப்புகளைச் செய்வது, நகைச்சுவைத் துணுக்குகளைப் பகிர்ந்துகொள்வது என்று மன உளைச்சலில் இருந்த பயணிகளை கூடுமானவரை மகிழ்ச்சியில் வைத்திருக்க முயன்றார்.
உள்ளூர் மொழியில் விழிப்புணர்வு
அமெரிக்காவில் சியாட்டில் நகரத்தில்தான் கோவிட்19 நோயாளி முதலில் கண்டறியப்பட்டார். அந்தப் பகுதியில் வாழ்ந்த எத்தியோப்பிய-அமெரிக்க மக்கள் பலருக்கு கரோனா வைரஸ் குறித்த உண்மைத் தகவல்கள் சென்று சேரவில்லை. அவர்களில் பலருக்கு அம்ஹாரிக் என்ற மொழி மட்டுமே தெரியும் என்பதே இதன் காரணம். இதனால் குறிப்பிட்ட சில மூலிகைகளை எடுத்துக்கொண்டால் கரோனா பாதிப்பிலிருந்து தப்பிவிடலாம் என்பது உள்ளிட்ட பல கற்பிதங்கள் அம்மக்களிடையே நிலவிவந்தன.
இந்நிலையில் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் கிராஃபிக் டிசைனராகப் பணியாற்றுபவரும் எத்தியோப்பிய வம்சாவளியைச் சேர்ந்தவருமான யெடேசா போஜியா, கரோனா வைரஸ் குறித்த அறிவியல்பூர்வமான தகவல்களை அம்ஹாரிக் மொழியில் விளக்கும் காணொலியை முகநூலில் பதிவேற்றினார். இதனால் அமெரிக்காவில் வாழும் எத்தியோப்பிய வம்சாவழிச் சமூகத்தினர் கரோனா குறித்த விழிப்புணர்வைப் பெற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT