Published : 10 Mar 2020 12:02 PM
Last Updated : 10 Mar 2020 12:02 PM

சொல்லிசை மன்னர்கள்!

ராப் என்றாலே பொழுதுபோக்குக்காக ஜாலியாகப் பாடுவது என்ற எண்ணமே பரவலாக உள்ளது. இல்லை, ராப் பாடல்கள் மூலம் சமூகக் கருத்துகள், மக்கள் பிரச்சினைகளையும் சொல்ல முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள் சென்னையைச் சேர்ந்த நிகவித்ரன், வி,ஜே. விஜய், ராஜேந்திர பிரசாத் ஆகிய இளைஞர்கள்.

பாடல் போராளி

யூடியூபில் இயக்குநர் ராஜூ முருகனின் ‘காம்ரேட் டாக்கீஸ்’ அலைவரிசையில் வெளியான சொல்லிசைப் பாடகர் நிகவித்ரனின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான பாடல் சமூக வலைத்தளங்களில் அண்மையில் வைரலானது. சமூகக் கருத்துகளைப் புதுமையான முறையில் சொல்லும் இந்தப் பாடல் நிகழ்கால அரசியல் நிலையை எடுத்துரைத்தது.

பள்ளி இறுதி ஆண்டிலிருந்தே 'ராப்' எனப்படும் சொல்லிசைப் பாடல்களை எழுதியும் பாடியும் வருகிறார் நிகவித்ரன். பொதிகைத் தொலைக்காட்சியில் கணினி வடிவமைப்பாளர். வேலை நேரம் போக மற்ற நேரத்தில் ராப் பாடல்களை எழுதுவது, இசையமைப்பது போன்ற பணிகளில் ஈடுபடுகிறார். ‘Nigavithran official’ என்ற யூடியூப் அலைவரிசையையும் நடத்திவருகிறார் இவர். இதுவரை ஏழு சொல்லிசைப் பாடல்களை வெளியிட்டுள்ள நிகவித்ரன், ‘82 D Block’ என்ற ஆல்பத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்.

“10-ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே ராப் பாடல்களைக் கேட்கப் பிடிக்கும். இங்கிலிஷ், இந்தி ராப் பாடல்கள் அதிகம் இருந்த காலத்தில் மலேசியத் தமிழர்கள்தான் தமிழ் ராப் ஆல்பங்களை வெளியிட்டார்கள். தமிழ் ராப் பாடல்கள் வித்தியாசமாக இருந்தன. ஒரு கட்டத்தில் சின்னசின்ன வரிகளில் ராப் பாடல்களைப் பாடத் தொடங்கினேன். கல்லூரிக் காலத்தில் காதலை மையப்படுத்தித்தான் என்னுடைய பாடல்கள் இருந்தன.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் என்னுடைய அண்ணன் கவிதரன் படித்துவந்தார். அங்குள்ள ‘முற்றம்’ குழுவினருடன் இணைந்து சமூகக் கருத்துகளை வலியுறுத்தும் ராப் பாடல்களை எழுதக் கற்றுக்கொண்டேன். இந்த மாற்றம் என்னை வேறொரு தளத்துக்குக் கொண்டுசென்றது” என்கிறார் நிகவித்ரன்.

அரசியல் நிகழ்வுகள், சமூகப் பிரச்சினை போன்றவற்றைப் பாடல் வரிகளாக மாற்றுகிறார் நிகவித்ரன். இவருடைய ராப் பாடலில் காதல், நட்பு குறித்து மட்டுமல்லாமல் ஜல்லிக்கட்டு, ஹைட்ரோகார்பன், மீனவர் பிரச்சினை, குடியுரிமைத் திருத்தச் சட்டம் போன்ற விஷயங்களும் வந்துள்ளன.

“இன்று மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்க நினைக்கிறார்கள். இதுபோன்ற விஷயங்கள் தனிப்பட்ட முறையில் என்னைப் பாதிக்கின்றன, அதைப் பாடலாக மாற்றுகிறேன். சிலர் போராட்டங்கள் மூலமாக எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள். நான் என்னுடைய கலையின் மூலமாக அதை வெளிப்படுத்துகிறேன்” என்கிறார் நிகவித்ரன். ராப் பாடல்களுக்கான போஸ்டர் வடிவமைப்பு, பாடல்களைக் காட்சிப்படுத்துவது, வாய் மூலம் இசை அமைக்கும் பீட் பாக்ஸ் ஒலி எழுப்புவது என பன்முகத் தன்மை கொண்டவராக வலம் வருகிறார் நிகவித்ரன்.

வலிகளிலிருந்து பாடம்

ஆரோக்கியமான அரசியல் சூழ்நிலையை வலியுறுத்தி வி.ஜே. விஜயின் ‘ஏன் பிரச்சினை எதுக்கு பிரச்சினை’ என்ற பாடல் மக்களுக்கான அரசியலைச் சொல்லிசைப் பாடல் வடிவில் வெளிப்படுத்துகிறது. லயோலா கல்லூரியில் படிப்பை முடித்த விஜயின் சொந்த ஊர் காஞ்சிபுரம். துப்புரவுத் தொழிலாளியான அம்மா விண்ணரசி தனியாக விஜயை வளர்த்துள்ளார். சிறுவயதிலேயே ஊடகத் துறையில் பணியாற்ற வேண்டும் என விஜய் விரும்பினார். கல்லூரி வாழ்க்கை விஜயைச் சொல்லிசைப் பாடகராக மாற்றியுள்ளது.

“என்னை ராப் பாடகராக மாற்றியது கல்லூரி வாழ்க்கைதான். முதல் பாடலுக்குக் கிடைத்த வெற்றி என்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது. இதனால், ராப் பாடல்கள் பற்றி நிறையப் படித்தேன். ஒரு ராப் பாடலை ஆயிரம் முறையாவது கேட்பேன். அப்போதுதான் கோவையாக எழுதவும் பாடவும் முடியும். ராப் பாடல்களை நான் எழுதிப் பாடினாலும் அதைக் காட்சிப்படுத்தவும் இசையமைக்கவும் நண்பர் விக்கியும் சில தன்னார்வலர்களும் உதவுகிறார்கள்” என்கிறார் விஜய்.

இதுவரை ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மேடைகளில் பாடியுள்ள விஜய் யூடியூபில் ‘VJ Vijay’ என்ற அலைவரிசையை நடத்திவருகிறார். சமூகம் சார்ந்து பாடல்கள் எழுதும் அதேநேரத்தில் இளைஞர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ‘தோல்வி என்பதே வாழ்க்கையின் படி’ என்ற பாடலையும் வெளியிட்டுள்ளார். இதுவரை 10 ராப் பாடல்களை விஜய் வெளியிட்டுள்ளார். “எனக்குப் பல நேரம் உதவியாக ‘காஸ்ட்லெஸ் கலெக்ட்டிவ்’ அறிவு அண்ணன் போன்றவர்கள் இருக்கிறார்கள். ராப் பாடலையே எவ்வாறு மக்களுக்கான பிரச்சினைகளைப் பேசலாம் என்பதைக் கற்றுக்கொடுக்கிறார்கள். தொடர்ந்து ராப் பாடகனாக அறியப்படவே விரும்புகிறேன். இந்த ஆண்டில் 8 ராப் ஆல்பத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளேன்” எனும் விஜய்யின் பேச்சில் நம்பிக்கை தெறிக்கிறது.

கானா கானம்!

சொல்லிசைப் பாடல்கள் கவனம்பெற்றும் வரும் அதேநேரத்தில் சென்னையின் அடையாளமான கானா பாடல்களும் மாற்றுக் களத்தை நோக்கி நகர்ந்துள்ளன. குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் முதல் பொதுவுடைமை, சிறுபான்மையினக் கட்சிகளின் அரசியல் மேடைகளில் மக்கள் பிரச்சினைகளைக் கானா பாடல்களின் வழியே கொண்டுசெல்கிறார் ராஜேந்திர பிரசாத். இவரின் சமீபத்திய ‘மதவெறி மாய்போம் மனிதநேயம் காப்போம்’ பாடல், யூடியூபில் கவனத்தைப் பெற்றது. 'மெட்ராஸ் டாக்ஸ்' என்ற யூடியூப் அலைவரிசையில் பணியாற்றிவரும் ராஜேந்திர பிரசாத் சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவர்.

“எனக்கு சோகமான பாடல்களைக் கேட்க பிடிக்காது. ஆனால்ம் கானா பாட்டை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்பேன். ஒரு கட்டத்தில் நானே சொந்தமாகக் கானா பாட்டை எழுதி, அதற்கு சினிமா இசையைப் பயன்படுத்தி பாடத் தொடங்கினேன். எங்க பகுதியில் சாதாரண கானா பாடல்களைப் பாடுவதிலிருந்து என் கானா இசைப் பயணம் தொடங்கியது. அப்போதுதான் கானா பாடல்களில் மக்கள் பிரச்சினைகளைச் சேர்த்துப் பாடலாம் எனத் தோன்றியது” என்கிறார் ராஜேந்திர பிரசாத்.

கடந்த ஆறு வருடங்களாக மக்கள் பிரச்சினைகளுக்காகக் குரல்கொடுத்துப் பாடிவருகிறார் இவர். “இன்றைய சூழ்நிலையில் பாடல் என்பது மக்களைச் சந்தோஷப்படுத்தும் கருவியாக மட்டுமில்லாமல் அவர்களைச் சிந்திக்கவும் வைக்கிறது. இசை மாற்று வடிவில் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை” என அழுத்தமாகக் கூறுகிறார் ராஜேந்திர பிரசாத்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x