Published : 28 Feb 2020 11:27 AM
Last Updated : 28 Feb 2020 11:27 AM

சுயாதீன இசை: இசையுலகின் முக்கிய நகர்வு!

மனித நாகரிகத்தின் வரலாற்றில் இசையமைக்கப்பட்ட பாடல்களிலேயே தொன்மையானது என ஆய்வாளர்கள் கருதுவது ஏறத்தாழ 1400 பொ.ஆ.மு.(கி.மு) (B.C.E -Before Common Era) ஆண்டுகளுக்கு முந்தையது. அந்தப் பாடல், சுமேரியாவில் களிமண் பலகையில் எழுதப்பட்ட ‘ஹூரியனின் ஆறாவது பாசுரம்’ என்ற பாடல். கவிதைகளிலேயே பழமையானது என 2100 பொ.ஆ.மு. ஆண்டுகளில் பாபிலோனில் எழுதப்பட்ட ‘கில்காமேசின் வீரபுராணம்’, 100 பொ.ஆ.மு. ஆண்டுகளில் கிரேக்கத்தில் இயற்றப்பட்ட ‘செக்கிலியோஸின் கல்லறை வாசகம்’ ஆகியவற்றைச் சொல்லலாம். இவை அனைத்தும் இசையமைக்கப்பட்டு இசைப்பாடல்களாக இன்று கேட்கக் கிடைக்கின்றன.

ஏறக்குறைய மேற்சொன்ன பாடல்களைப் போலவே பழமையானவை தமிழின் சங்கப் பாடல்கள். சங்கப் பாடல்களுக்கு இதுவரை ஏன் எவரும் இசையமைக்கவில்லை என்ற கேள்வி வியப்புக்கும் விவாதத்துக்கும் உரியது. ஆனால், தனது இசைத் திறமையால் அந்தக் கேள்வியை இனி யாரும் எழுப்ப வேண்டிய தேவை எழாமல் செய்துவிட்டார் ராஜன் சோமசுந்தரம்.

இரண்டாயிரம் வருடங்களின் புகழ் உடைய சங்கக் கவிதைகள் இசை வடிவம் அடையாத நிலையில் முதல் முறையாக 6 சங்கப்பாடல்கள் ராஜன் சோமசுந்தரம் இசையில் ‘சந்தம்: சிம்பொனி மீட்ஸ் கிளாசிகல் தமிழ்’ (Sandham: Symphony Meets Classical Tamil) என்ற தலைப்பில் ஆறு பாடல்கள் தொகுப்பாக வெளிவந்திருப்பது சுயாதீன இசையுலகில் ஒரு குறிப்பிடத்தக்க நகர்வு என்பதுடன் ஒரு வரலாற்று நிகழ்வாகவும் இதைக் கருதலாம். ஒரு கனவு முயற்சியாக இல்லாமல் இதை ஒரு இசைக்கலைஞர் முயன்றிருக்கவே முடியாது என்பது என் எண்ணம்.

மேஸ்ட்ரோ வில்லியம் கர்ரி

ரசனையும் தேர்வும்

முழுமையை நாடும் ஓர் இசைக்கலைஞனுக்குச் செவ்வியல், நவீன இசையின் பரிச்சயம் இருக்க வேண்டியது அவசியம். அதே அளவுக்கு அவன் பிறந்து, வளர்ந்த நிலப்பரப்பின் செவ்வியல், நவீன இலக்கியத் தேடலும் பரிச்சயமும் இருந்தால் அது அவனது இசைக் கற்பனையின் எல்லைகளை விரித்துச் செல்லும். ராஜன் சோமசுந்தரத்தின் வாசிப்பும், அதன் வழியாக அவர் தேடி அடைந்த அ.முத்துலிங்கம், ஜெயமோகன், நாஞ்சில் நாடன் போன்ற எழுத்தாளர்களின் வழிகாட்டலுடன் இசையமைப்புக்கான சங்கப் பாடல்களின் தேர்வில் அவரது இலக்கிய ரசனையின் தரம் வெளிப்பட்டிருக்கிறது. அவ்வகையில் ‘சந்தம்’ தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ஆறு பாடல்களுமே சங்கப் பாடல்களின் மிகச் சிறந்த மாதிரிகள் எனச் சொல்லத்தக்கவை. கனியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே’ (புறநானூறு, 192), கபிலரின் ’வேரல் வேலி வேர்கோட் பலவின்’ (குறுந்தொகை, 18), செம்புலப்பெயல் நீராரின் ’யாயும் ஞாயும்’ (குறுந்தொகை, 40), ஒக்கூர் மாசாத்தியாரின் ‘முல்லை ஊர்ந்த (குறுந்தொகை, 275), பெயரறியாத புலவர் ஒருவர் இயற்றிய ‘கலம் செய் கோவே’ (புறநானூறு, 258), கயமனாரின் ‘ஞாயிறு காயாது மரநிழற்பட்டு’ (குறுந்தொகை, 378) ஆகிய இந்த ஆறு பாடல்கள், சங்ககாலத் தமிழரின் வாழ்க்கையை, கலாச்சாரத்தைக் காட்சிப்படுத்தும் உயிருள்ள கவிதை ஆவணங்கள்.

சங்கப் பாடல்கள் கருங்கல் சிலைகளைப் போல என்றென்றைக்குமாகக் காலத்தில் உறைந்து நின்று விட்ட மனித உள நிலைகளின் மாதிரிகள்; காலம் உள்ளவரையும் நீடித்து நிற்கும் வல்லமை பெற்றவை. அதேநேரம், உலகின் தொன்மையான கவிதைகளுக்கு இசை வடிவம் அளிக்க முற்படும் ஒரு நவீன யுக இசைஞனுக்கு அது பெரும் சவாலாகவே இருக்கும். ஏனெனில், இசைக்குள் பாடலை வலிந்து சுருட்டி திணித்து வைக்காமல், கவிதையை முன்னிறுத்தி, சிற்பத்துக்கு ஆடை அணிவிப்பதுபோல் கவிதையின் வரிகளைச் சுற்றி இசையை வனைவது முக்கியமானது. அடுத்து கவிதையின் மையமாகி நிற்கும் கூறுபொருளுக்கும் உணர்ச்சிநிலைக்கும் பொருத்தமான ராகங்களில் மெட்டுகளை அமைப்பது. இவ்விரண்டையும்விட முக்கியமானது, நவீன பாணியில் இசை அமைத்தாலும், இப்பாடல்களின் தொன்மை, இவற்றுள் உறைந்து நிற்கும் மானுட மனத்தின் நுண்மை, கவித்துவம், ஆகியவற்றால் இப்பாடல்கள் ஆணையிட்டு நிற்கும் செவ்வியல் தன்மைக்கு உரிய மரியாதையுடனும் கவனத்துடனும் இப்பாடல்களைக் கையாள்வது. இம்மூன்று தளங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நம் மூதாதைகளின் கவிதைகள், அவற்றின் உணர்வு நிலைகளைச் சிதைக்காமல் அவற்றின் உன்னதத்தை மேலேற்றும்படி இசையமைக்கப்பட்டிருப்பதால் ‘சந்தம்’ சமகாலத்தின் ஒரு குறிப்பிடத்தக்க, சர்வதேச சுயாதீன இசைத்தொகுப்பாக ஆகியிருக்கிறது.

சவால்களைக் கடந்த முயற்சி

கானல்வரி, ஆய்ச்சியர் குரவை, தேவாரம், திருப்புகழ், குற்றாலக் குறவஞ்சி ஆகியவை போல அல்லாமல் வலுவான எதுகை மோனையின்றி இசைத்தன்மை இல்லாதவை எட்டுத்தொகையின் சங்கப் பாடல்கள். புறநானூறு மற்றும் குறுந்தொகையின் பாடல்களை பயிலும் எவரும் இவை இசைப்பதற்காக இயற்றப்பட்ட ’இசைப்பாடல்கள்’ (lyric) அல்ல, என்பதை உணர முடியும்.

ராஜன் சோமசுந்தரம்

இசைக்கு என உத்தேசித்து இயற்றப்படாத பாடல்களுக்கு இசையமைப்பது கடினமானது. இருந்தும் இந்தத் தொகுப்பின் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் அவற்றின் இயல்பான மனோபாவத்தில் அசலாக ஒலிக்கின்றன. மேலும், சொற்களின் நீட்டல்கள், குறுக்கல்கள், விளிகள் அனைத்துமே தங்களின் இயல்புக்கு உரிய பாந்தமான இடத்தை சமகால இசைக்கோவையிலும், பாடுபொருளுக்கு ஏற்ற வகையில், பாம்பே ஜெய, பிரியங்கா, ராஜலட்சுமி சஞ்சய், சைந்தவி - ராஜன், பிரகதி, கார்த்திக் ஆகிய ஆறு பாடகர்களின் கச்சிதமான குரல் தேர்விலும் இணைந்து கொண்டதில், எக்காலத்துக்குமான அவற்றின் உலகப் பொதுமையோடு ஒலிக்கின்றன. மிக முக்கியமாக, கனியன் பூங்குன்றனின் ‘யாதும் ஊரே’ பாடலில் கம்பீரமாய் இணைந்திருக்கும் சிம்பொனி இசைக்கோப்பும் அதற்கான இசை நிகழ்த்துதலைச் செய்திருக்கும் டர்ஹாம் சிம்பொனியின் மேஸ்ட்ரோ வில்லியம் கர்ரியுடைய பங்கேற்பும் மொழி தெரியாத எந்நாட்டவரின் உள்ளத்தையும் கொள்ளையடிக்கும் வண்ணம் ஒலிக்கிறது.

பழமையான வரிகள், சொற்கள் இசையால் எவ்விதமான சிதைவையும் அடையாமல், ஒவ்வொரு வரியும் சொல்லும் அவை உத்தேசிக்கப்பட்ட காட்சியையும் உணர்வெழுச்சியையும் வெளிப்படுத்துகின்றன என்பதை இசையமைப்பின் முதன்மையான வெற்றி என்று சொல்ல வேண்டும். குறிப்பாக, கர்னாடக இசையில் எந்தவிதமான பாடலாக இருந்தாலும் பக்திப் பாடலின் மோஸ்தரில் பாடுவதே இசைமேடைகளில் பொதுவாகக் காணக்கிடைக்கிறது. அதைப் போன்ற வழக்கமான மோஸ்தரைச் சங்கப் பாடல்களின் மேல் போர்த்தவில்லை என்பதுடன், துல்லியமான உலகத்தரமான ஒலித்தரம் பரவசமான கேட்கும் அனுபவத்தை அளிக்கிறது.

முக்கியமானது ஏன்?

சங்கப் பாடல்களைப் பொறுத்தவரை அவற்றின் உவமைகள், உருவகங்கள், கவிநயம், சொல்லழகு, பொருளழகு ஆகியவற்றை வியந்து போற்றுவதுடன் நின்று விட்டது தமிழ் உலகு. நம் செவ்வியல் இசையிலோ, எல்லாப் பாடல்களையும் பக்தி பாவத்துடன் மட்டுமே பாடும் நிலையே இருக்கிறது. இந்நிலையில் சமகாலத்தின் நவீன இசையில் சங்கப் பாடல்களை அவை கோரி நிற்கும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்படி, அசலான சமகால இசையில் முன்வைக்கிறது என்பதால் ராஜன் சோமசுந்தரத்தின் ‘சந்தம்’ தொகுதி மிகவும் அவசியமான, முக்கியமான ஆக்கமாக ஆகிறது. சங்க இலக்கியங்களின் வீரகதைப் பாடல்கள், காதல் பாடல்கள், கதைப்பாடல்கள் ஆகியவை நம் செவ்வியல் இசைப்பாணியில் வடிவெடுத்து நாம் மறந்துபோன நமது வாழ்க்கை முறை பெருமைகளை நமக்கு நினைவூட்டி புத்துயிர் கொள்ளச் செய்யும் வல்லமை ‘சந்தம்’ தொகுப்புக்கு இருக்கிறது. ஒரு முன்மாதிரியாகவும் இனிய தொடக்கமாகவும் அமைந்திருக்கும் இந்த முயற்சி, நமது சங்கத் தமிழை இசைத் தளத்தில் காற்றில் கலக்கச் செய்யும் அரிய முயற்சி. இதை ஒவ்வொரு தமிழரும் அறியச் செய்வதன் மூலம் ராஜன் சோமசுந்தரத்தைத் தமிழ்கூறும் நல்லுலகம் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.

கட்டுரையாளர் அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் உயிரியல் விஞ்ஞானியாகப் பணியாற்றுபவர், எழுத்தாளர், விமர்சகர்.
தொடர்புக்கு: venu.biology@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x