Published : 15 Feb 2020 10:36 AM
Last Updated : 15 Feb 2020 10:36 AM
கனி
வைட்டமின்கள், கனிமங்கள் அதிக அளவில் நிறைந்த பழங்களில் ஒன்று ஆரஞ்சு. இந்தப் பழம் உலகில் எல்லாப் பகுதிகளிலும் ஆண்டு முழுவதும் கிடைக்கிறது. ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி ஊட்டச்சத்து, செல்கள் பாதிப்படைவதிலிருந்து பாதுகாக்கிறது. ஆரஞ்சுப் பழத்தில் நார்ச்சத்து, பி வைட்டமின்கள், வைட்டமின் ஏ, கால்சியம், பொட்டாசியம் ஆகியவை நிரம்பியிருக்கின்றன.
ஆரஞ்சுப் பழம் தரும் நன்மைகள்
நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது ஆரஞ்சுப் பழங்களில் தயமின், ரிபோஃபிளேவின், நியாசின், வைட்டமின் பி6, பாஸ்பரஸ் உள்ளிட்டவை இருக்கின்றன. ஆரஞ்சுப் பழங்களில் அதிகமாக இருக்கும் வைட்டமின் சி ஊட்டச்சத்து உங்கள் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது.கண்களுக்குச் சிறந்தது
கண்களுக்குச் சிறந்தது
ஆரஞ்சுப் பழங்களில் இருக்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம் ஆகியவை கண்களுக்குச் சிறந்தவை. தோலைப் பாதுகாப்பது போல் ஆரஞ்சுப் பழங்கள் கண்களையும் பாதுகாக்கின்றன. அன்றாடம் ஓர் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால், உங்கள் பார்வையில் பிரச்சினை வராமல் பார்த்துக்கொள்ளும்.
தோலுக்கு நல்லது
வயதாக வயதாக உடலின் மற்ற பாகங்களைப் போல் தோலும் பாதிப்படையத் தொடங்கும். உலோகங்கள் காற்றுப் பட்டவுடன் துருப்பிடிப்பதைப் போன்றதுதான் இது. ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள், வைட்டமின் சி ஆகியவை தோல் சுருங்காமல் பாதுகாக்கின்றன.
மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது
ஆரஞ்சுப் பழத்தில் நிரம்பியிருக்கும் ‘ஃபோலேட்’, ‘ஃபோலிக்’ அமிலம் ஆகியவை மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றன. மூளையைச் சீரான நிலையில் வைத்திருக்க இவை உதவுகின்றன. இந்த ஊட்டச்சத்துகள் நிரம்பியிருப்பதால் கர்ப்பிணிப் பெண்களும் இந்தப் பழத்தை உட்கொள்ளலாம். வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு நரம்புக் குறைபாடுகள் ஏற்படாமல் இது தடுக்கும்.
புற்றுநோயைத் தடுக்கும்
ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் டி – லிமோனின், நுரையீரல், மார்பக, தோல் புற்றுநோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. அத்துடன், ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள், வைட்டமின் சி ஆகியவை உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட வைக்கிறது.
எடையைக் குறைக்க உதவும்
ஒரு கப் ஆரஞ்சு சாறில் வெறும் 85 கலோரிகள்தாம் இருக்கின்றன. ஊட்டச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருக்கும் சிறந்த பழங்களில் ஒன்று ஆரஞ்சு. அத்துடன், ஒரு கப் ஆரஞ்சில் 4.3 கிராம் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. அதனால், இது செரிமான மண்டலத்தைச் சீராக வைத்திருக்க உதவுகிறது. அத்துடன், இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் நீண்ட நேரம் உங்கள் வயிறு நிரம்பியிருக்கும்.
இதய நோய்களைத் தடுக்கும்
ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை, சக்கை உணவை அதிகமாக உட்கொள்வதால், இதயத்தின் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, இதய நோய்கள் உருவாகின்றன. ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் ‘ஃபிளேவனாய்ட்’, ‘ஹெஸ்பெரிடின்’ ஆகியவை கொழுப்புச் சத்தைக் குறைத்து, ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கின்றன. மாரடைப்பு, மற்ற இதய நோய்கள் வராமல் பாதுகாக்கவும் ஆரஞ்சுப் பழம் உதவுகிறது.
முடி உதிர்தலைத் தடுக்கிறது
ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி ஊட்டச்சத்து, ‘கொலஜன்’ புரத உற்பத்திக்கு உதவுகிறது. இந்தப் புரதம்தான் முடி வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது. உங்கள் கூந்தல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், அன்றாடம் ஒரு ஆரஞ்சு பழத்தை
உட்கொள்வது சிறந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT