Published : 09 Jan 2020 10:01 AM
Last Updated : 09 Jan 2020 10:01 AM
உஷாதேவி
மகாபாரதத்தில் சஞ்சயன் கவுரவர்களின் தேரோட்டி. திருதராஷ்டிரனும் சஞ்சயனும் ஒரே குருகுலத்தில் பயின்றவர்கள்.
மகாபாரதப் போரில் திருதராஷ்டிரர், என்னால் என் மக்களுக்காகப் போர்க்களம் புக முடியாதே என வருத்தமுற்றபோது வியாசர் ஒரு உதவிசெய்தார். குருக்ஷேத்திரத்தில் நடக்கும் யுத்தக் காட்சிகளை அரண்மனையில் இருந்தே காணும்படியான வரத்தைப் பெற்றார். கண் இல்லாத திருதராஷ்டிரர், தன் நண்பன் சஞ்சயனுக்கு அந்த வரத்தைக் கொடுத்து யுத்தகளக் காட்சியை நேரடியாகத் தெரிந்துகொண்டார்.
கவுரவர்களின் படையுடன் நின்று உதவிசெய்ய, கிருஷ்ணனிடம் சஞ்சயனை திருதராஷ்டிரர் தூது அனுப்பினார். சஞ்சயன் கிருஷ்ணனைத் தேடிச் சென்றபோது சத்யபாமா, திரௌபதி, அர்ச்சுனன் ஆகியோர் அந்தப்புர மஞ்சத்தில் சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். சஞ்சயன் வரவை அறிந்த கிருஷ்ணர் சஞ்சயனை வரவேற்றார். அந்தப்புரத்தில் அர்ச்சுனனைப் பார்த்த சஞ்சயன் கிருஷ்ணனின் உதவி பாண்டவர்களுக்கு மட்டுமே என உணர்ந்து கொண்டான்.
சஞ்சயன், இறைவனை அந்தப்புரத்தில் கண்டதும் மெய் மறந்து திகைத்துவிட்டான். உள்ளத்திலே இறைவனை உறைய வைத்த சஞ்சயன் இறைவனின் அந்தரங்கம் வரை செல்லும் வாய்ப்பை பெற்றான். அந்தக் கிடைத்தற்கரிய காட்சியை இறைவன் சஞ்சயனுக்குக் கொடுத்தார்.
சஞ்சயன் மிக நல்லவன், அதனாலே தன் அந்தரங்க இடத்திலும் வரவேற்றார் கிருஷ்ணர். சஞ்சயன் இல்லை என்றால் கிருஷ்ணன் குருக்ஷேத்திரப் போரில் காட்டிய விஸ்வரூப தரிசனம் திருதராஷ்டிரனுக்கு கிடைத்திருக்காது.
சஞ்சயனைப் போல் நான் இறைவனின் அந்தரங்கம் வரை செல்லும் பேறைப் பெறவில்லையே சுவாமி என்கிறாள் நம் திருக்கோளுர் பெண் பிள்ளை.
(ரகசியங்கள் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT