Published : 06 Oct 2019 02:54 PM
Last Updated : 06 Oct 2019 02:54 PM

முகம் நூறு: அடுக்களையில் தொடங்கும் அழகுக்கலை

அன்பு

உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை அனைத்துப் பாகங்களுக்கும் ஏராளமான அழகுசாதனப் பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. உடலுக்கு ஊறுவிளைவிக்கும் வேதிப்பொருட்கள் கலக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் எனத் தெரிந்தும் பலர் வேறு மாற்று இல்லை என்பதற்காக அவற்றையே பயன்படுத்திவருகிறார்கள். ஆனால், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றைக்கொண்டே ஆரோக்கிய அழகைப் பெறும் வழியை உருவாக்கியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த நந்தினி கோபிநாத்.

நுங்கம்பாக்கத்தில் வசித்துவரும் நந்தினி, இயற்கைப் பொருட்களைக் கொண்டு அழகுசாதனப் பொருட்களைத் தயாரிப்பதற்கான குறுகிய காலப் படிப்பை மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் முடித்துள்ளார். இயற்கைப் பொருட்களைக் கொண்டு சோப்பு, ஷாம்பு, அழகுசாதனப் பொருட்களைத் தயாரிப்பதற்காக கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட், தமிழக அரசின் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கான அங்கீகாரம் பெற்று 2017 முதல் இந்தத் தொழிலில் ஈடுபட்டுவருகிறார்.

தொழில்முனைவோராக மாறிய ஆசிரியர்

ஐந்தாண்டுகளுக்கு முன்பு பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர் நந்தினி. தன்னுடைய பெற்றோர், மாமனார், மாமியார் ஆகியோரின் மறைவுக்குப் பிறகு குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அந்த வேலையை ராஜினாமா செய்துள்ளார். இவருடைய கணவர் கோபிநாத், மனநல மருத்துவர். அவரிடம் வரும் நோயாளிகள் பலரும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் அதிக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள். இதைக் கவனித்த நந்தினி, வேதிப்பொருள் அதிகமுள்ள சோப்பு, ஷாம்புவைப் பயன்படுத்துவதால்தான் இந்தப் பிரச்சினை என்பதைக் கணவர் மூலமாக அறிந்துகொண்டார்.

எனவே, அவற்றுக்கு மாற்றாக இயற்கை முறையில் சோப்பு, ஷாம்பு போன்றவற்றைத் தயாரிக்க முடிவெடுத்தார். “என் பெற்றோருக்கு நான் ஒரே மகள் என்பதால் என் அம்மா ஜமுனா தலைக்குச் சீயக்காய்ப்பொடியையும் உடம்புக்குக் கோரைக்கிழங்கு, வெட்டிவேர், கடலைப் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்த பொடியையும் பயன்படுத்தச் சொல்வார். இல்லையென்றால் வேதிப்பொருள் குறைவான குழந்தைகள் சோப்பைத் தருவார்கள். இதனால், எனக்குச் சிறுவயதிலிருந்தே இயற்கை சார்ந்த பொருட்கள் மீது ஆர்வம் அதிகம். இந்நிலையில் தோல் சம்பந்தமான பாதிப்புகளால் கணவரிடம் வரும் நோயாளிகளைப் பார்க்கக் கவலையாக இருந்தது.

மூலிகைப் பொருட்களைக் கொண்டு சோப்பு தயாரிக்க நினைத்தேன். ஆனால், இதை பிரத்யேகமாகக் கற்றுதர இங்கே கல்வி நிலையங்கள் இல்லை. இந்த நேரத்தில்தான் கணவருடன் சிங்கப்பூர் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே இயற்கை முறையில் அழகுசாதனப் பொருட்களைத் தயாரிக்கும் பள்ளிகள் இருப்பது தெரியவந்தது. உடனே அங்கிருந்த தனியார் பள்ளியில் ஆறு மாதப் பயிற்சி எடுத்துக்கொண்டேன். பின்னர் ஆன்லைன் மூலம் சென்னையிலிருந்தபடி படித்தேன்” என்கிறார் நந்தினி.

வெயில் நல்லது

பொதுவாக, சோப்பு தயாரிக்க காஸ்டிக் சோடா முக்கியப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை ஒரு பங்கு எடுத்துக்கொள்ளும் நந்தினி அதனுடன் தேங்காய் எண்ணெய், வேப்ப எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றைச் சேர்க்கிறார். அதனுடன் கற்றாழை ஜெல், செம்பருத்தி, கோரைக்கிழங்கு, பூந்திக்கொட்டை, அதிமதுரம், கரிசலாங்கண்ணி, உருளைக்கிழங்கின் தோல், குப்பைமேனி இலை, பப்பாளி, அதிமதுரம், தேவதாரு இலை போன்றவற்றிலிருந்து சோப்புக்கு ஏற்றவற்றைச் சேர்த்துக்கொள்கிறார்.

இவற்றுடன் பசும்பால் அல்லது ஆட்டுப் பாலைச் சேர்த்து குறைந்த ரசாயன அளவு (PH VALUE 4.5 - 5.5) கொண்ட சோப்பு வகைகளைத் தயாரிக்கிறார். பி.எச். அளவு குறைவாக உள்ள சோப்பால் சருமத்துக்குப் பாதிப்பு குறைவு. ஆனால், சந்தைகளில் கிடைக்கும் பெரும்பாலான சோப்புகளில் பிஎச் அளவு ஒன்பதுக்கும் மேல் உள்ளது. இதனால் சரும வறட்சி, ஒவ்வாமை போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

இதுவரை 70-க்கும் மேற்பட்ட சோப்பு வகைகளையும் 23 வகையான ஷாம்புகளையும் நந்தினி தயாரித்துள்ளார். “வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை அதிக நறுமணத்துடன் நுரை அதிகமாக வரும் சோப்பையும் கிரீமையும்தான் விரும்பி வாங்குவார்கள். இவற்றைப் பயன்படுத்திய உடனேயே பளிச்சென்று ஆகிவிட வேண்டும் என ஆசைப்படுவார்கள். அதேபோல் பொடுகுத் தொல்லை போக சல்பர் என்னும் வேதிப்பொருள் அதிகமுள்ள ஷாம்புகளைப் பயன்படுத்துவார்கள்.

இதனால் பொடுகு நீங்கிவிடும். கூடவே தலைமுடியும் கொட்டத் தொடங்கும்.
சூரிய வெளிச்சத்தில் செல்வதால்தான் சருமத்தின் நிறம் மாறுகிறது என்ற கருத்து உள்ளது. ஆனால், அது உண்மையல்ல. நாம் குளிக்கவும் அழகுபடுத்திக்கொள்ளவும் பயன்படுத்தும் ரசாயனப் பொருட்கள்தாம் நாம் வெயிலில் போகும்போது வியர்வையுடன் கலந்து சருமத்தைப் பாதிக்கிறது” என்கிறார் நந்தினி.

மகள்தான் முதல் வாடிக்கையாளர்

அழகுசாதனப் பொருட்களில் லிப்ஸ்டிக் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. அதிலும் நீண்டநேரம் அழியாமல் இருக்க லிப்ஸ்டிக்கில் லெட் எனப்படும் காரீயம் சேர்க்கப்படுகிறது. இந்தக் காரீயம்தான் நீண்ட நேரம் லிப்ஸ்டிக் அழியாமல் பார்த்துக்கொள்கிறது. தொடர்ந்து இந்த ரசாயனம் கலந்த லிப்ஸ்டிக்கைப் பயன்படுத்தினால் உதட்டில் வெடிப்பு, விரிசல் போன்றவை ஏற்படும். இதற்கு மாற்றாக வெண்ணெய், தேன் மெழுகு கொண்டு லிப்ஸ்டிக் தயாரிக்கிறார் நந்தினி. அதேபோல் கோரைக்கிழங்கு, சந்தனம், தேவதாரு இலை என 25 மூலிகைப் பொருட்களைக் கொண்டு குங்குமாதி தைலத்தைத் தயாரிக்கிறார்.

இதை முகம் கழுவப் பயன்படுத்தலாம். “எந்தப் பொருளைத் தயாரித்தாலும் அதை முதலில் நானும் என் மகளும்தான் பயன்படுத்துவோம். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனத் தெரிந்த பிறகுதான் மற்றவர்களுக்குப் பரிந்துரைப்பேன். சமீபத்தில்கூடக் கறுப்புத் திராட்சையில் தயாரித்த ஃபேஸ் வாஷ் கிரீமை மகள் பயன்படுத்தி நன்றாக இருக்கிறது என்றார். எனக்குத் தெரிந்தவர்கள் மட்டும்தாம் என் வாடிக்கையாளர்களாக உள்ளனர்” என்கிறார் நந்தினி.

வயது தடையல்ல

அழகாக இருக்க வேண்டும் என்பதுதான் இன்றைக்குப் பலரின் விருப்பமாக உள்ளது. ஆனால், இதற்காக உடலுக்குக் கேடு விளைவிக்கும் வேதிப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்களுக்குப் பணத்தையும் ஆரோக்கியத்தையும் பலிகொடுக்கக் கூடாது என வலியுறுத்துகிறார் நந்தினி. இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கு முன் தனக்குத் தெரிந்தவர்களிடம் அவை குறித்த விழிப்புணர்வை மேற்கொண்டுள்ளார் நந்தினி. தோழிகள், உறவினர்களுடன் தொடங்கிய நந்தினியின் பயிற்சி வகுப்பு தற்போது ஏராளமான பெண்களால் விரிவடைந்திருக்கிறது. தயாரிப்புப் பொருளுக்கு ஏற்பக் கட்டணம் வசூலிக்கிறார்.

“பெண்களுக்கு மட்டும்தான் பயிற்சியளிக்கிறேன். பெண் தொழில்முனைவோர் பலரை உருவாக்க வேண்டும் என்பதுதான் என் நோக்கம். எல்லா வயதினரும் இதைக் கற்றுக்கொள்ள முடியும். ஐந்தாயிரம் ரூபாய் முதலீடு செய்து பத்தாயிரம் வரை ஒருவரால் சம்பாதிக்க முடியும்” என உறுதியாகச் சொல்கிறார் நந்தினி. இந்த மூலிகை சோப்பு, ஷாம்பு, அழகுசாதனப் பொருட்கள் ஆகியவற்றைத் தயாரிக்கத் தேவையான பொருட்கள் அனைத்தும் காய்கறிக் கடைகளிலும் நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். மேலும், தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு மும்பையிலிருந்து உபகரணங்களைப் பெறவும் அரசின் அனுமதி பெறவும் உதவுகிறார் நந்தினி.

படங்கள்: பு.க.பிரவீன்

இந்த ஆண்டுக்கான நோபல் விருதுகள் அக்டோபர் 7-14 தேதிகளில் அறிவிக்கப்பட விருக்கின்றன. 1901 முதல் 2018 வரை நோபல் விருதுபெற்ற பெண்களின் எண்ணிக்கை 51.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x