Published : 17 Sep 2019 12:05 PM
Last Updated : 17 Sep 2019 12:05 PM
இன்று உலகமே சின்ன மொபைலுக்குள் வந்து விட்டது. யூடியூப், டிக்டாக், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என இணையப் பயன்பாடுகளும் எல்லை கடந்து விரிவடைந்துவிட்டன. இத்தனை பெரிய வரப்பிரசாதத்தை வெறுமனே அரட்டை அடிக்கவும் பொழுதுபோக்கவும் மட்டுமே பயன்படுத்தினால் போதுமா? இணையத்தை ஆரோக்கிய மாகப் பயன்படுத்தி இன்று ஏராளமானோர் நிறைய வருமானம் பார்த்துவருகிறார்கள். அவர்களில் மும்பையைச் சேர்ந்த பிரஜக்தா கோலியும் ஒருவர். யூடியூப் இணையத்தில் இந்தியாவின் இணைய ராணியாக வலம் வந்துகொண்டிருக்கிறார் இவர்.
மும்பை பல்கலைக்கழகத்தில் ஊடகத் துறையில் பட்டம் பெற்ற பிரஜக்தா, எஃப்.எம். ரேடியோவில் தொகுப்பாளினியாக இரு ஆண்டுகள் பணியாற்றினார். இவருடைய நகைச்சுவைப் பேச்சைக் கேட்கவே நேயர் கூட்டம் உருவானது. ஒரே பணி இவருக்கு அலுத்துப்போகவே, மாற்றத்துக்காகக் காத்திருந்தார். அப்போதுதான் நடிகர் ஹிர்த்திக் ரோஷனை எதிர்பாராதவிதமாகச் சந்தித்தார் பிரஜக்தா. இந்தச் சந்திப்பை வீடியோவாகத் தனது முகநூலில் பகிர்ந்தார். அந்த வீடியோ வுக்கு நிறைய லைக்குகள் குவிந்தன.
நால்வரும் ஒருவரே
அந்த வீடியோவுக்குக் கிடைத்த வரவேற்பு பின்னாளில் பிரஜக்தாவைச் சொந்தமாக யூடியூப் சேனல் தொடங்கவைத்தது. 2015-ல் ‘Mostlysane’ என்ற பெயரில் யூடியூப் சேனலைத் தொடங்கினார். கடந்த 4 ஆண்டுகளில் 500-க்கும் மேற்பட்ட வீடியோக்களைப் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோக்களை இந்தியில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் பார்க்கலாம். இந்தியக் குடும்பங்களில் நடைபெறும் விஷயங்களை நகைச்சுவையாகக் காட்சிப்படுத்தி சொல்வதுதான் பிரஜக்தாவின் பாணி. இதில் குடும்ப உறுப்பினர்களாக அம்மா, அப்பா, தம்பி, அக்கா என நான்கு கதாபாத்திரங்களிலும் பிரஜக்தா ஒருவரே நடிக்கிறார். ஆனால், அந்தந்தக் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கி பிரஜக்தா கலக்குகிறார்.
அவருடைய நடிப்பு கலகலப்பான நகைச்சுவைக்காகவே நடிகைகளுக்கு இருப்பதுபோல், பிரஜக்தாவுக்கும் 300 இணையதளப் பக்கங்களை ரசிகர்கள் தொடங்கியுள்ளனர். இவருடைய இண்ஸ்டாகிராமை 15 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். இவருடைய யூடியூப் சேனலில் 40 லட்சம் பேர் சந்தாதாரர்களாக உள்ளனர். பொதுவாக, பெண்கள் எதைப் பதிவேற்றினாலும் ‘பெண்’ என்ற காரணத்திற்காகவே அதிக லைக்குகள் குவிகின்றன என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், பிரஜக்தாவின் வீடியோக்களில் குடும்பத்தில் நிலவும் பெண்கள் மீதான கட்டுப்பாடுகள், ஆண் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என அதிகம் பேசாமல் நகைச்சுவை வார்த்தைகளால் பார்வையாளர்களின் மனத்தில் ஊடுருவியிருக்கிறார்.
ஐ.நா. சபையின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் பெண்கள் மீது தொடுக்கப்படும் வெறுப்புணர்வு பேச்சுக்கு எதிராக ‘No Offence’ என்ற தலைப்பில் பாடலை எழுதியும் பாடியும் நடித்துள்ளார். உருவ கேலியை எதிர்த்து ‘Shameless’ என்ற பாடலையும் எழுதியுள்ளார். ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்ட செல்வாக்குமிக்க 30 வயதுக்குக் குறைவான நபர்களில் பிரஜக்தாவும் ஒருவர். தன்னுடைய பளிச் கருத்துகளாலும் நகைச்சுவையாலும் பிரஜக்தா கோலி ‘இணைய ராணியாக’ வலம் வருகிறார்.
- ரேணுகா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT