Published : 28 Jul 2015 01:11 PM
Last Updated : 28 Jul 2015 01:11 PM

என்னைச் செதுக்கிய மாணவர்கள்: இட்லியால் இதிகாசம் படைத்த ஆறுமுகம்

கற்றல் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கையாக இருப்பதால், குழந்தைகள் தங்கள் வாழ்க்கையை, பெற்ற அறிவோடு தொடர்புபடுத்திப் பார்க்க ஊக்கப்படுத்தப்படவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.

- கல்வி சீர்திருத்தத்துக்கான யஷ்பால் கமிட்டி அறிக்கையிலிருந்து

வாசிப்பதிலும் எழுதுவதிலும் கணக்கு போடுவதிலும் ஐந்தாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு மாணவர்கள்கூடத் தடுமாறுவதை ஆய்வுகள் காட்டுகின்றன. பெரும்பான்மையான பள்ளிகளில் அடிப்படைத் தேவையான குடிநீர் இல்லை. கழிப்பறைகள் இல்லை. ஒன்றாம் வகுப்பில் சேரும் 100 குழந்தைகளில் எட்டாம் வகுப்பு வரை நிலைப்பவர்கள் 47பேர்தான் என்றும் புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. பள்ளியிலிருந்து பாதியிலேயே மாணவர்கள் நின்றுபோவதுதான் இன்றைய மிகப்பெரிய பிரச்சினை என்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இன்றைய கல்வியின் மிகப் பெரிய அவலம் மாணவர்களின் மவுனம்தான்.

பொம்மைகளா குழந்தைகள்?

ஒரு பள்ளியில் நாள் முழுவதுமே ஒரு வார்த்தைகூடப் பேசாமல் வீடு திரும்பும் ஒரு குழந்தை நம் கல்வி அமைப்பின் தோல்விக்கு எடுத்துக்காட்டு. பாவ்லோ பிரையரே என்னும் போர்ச்சுகல் நாட்டுக் கல்வியாளர் “குழந்தைகள் தாங்கள் காண்கிற, ரசிக்கிற, அனுபவிக்கிற, துன்பப்படுகிற ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் தங்களுக்கான சொந்தக் கருத்தை உருவாக்கிக்கொள்ளும் திறன் படைத்தவர்கள். குழந்தைகள் தாம் வளர்ந்த சூழலிலிருந்து கற்றுக்கொண்ட புதிய சொற்களைப் பயன்படுத்திப் பார்க்கும் வாய்ப்பைப் பள்ளிகள் தர வேண்டும்” என்கிறார்.

“ஒவ்வொரு குழந்தை பேசுவதையும் கேட்க நேரம் எங்கே இருக்கிறது?” என்கிறது ஆசிரியர்களின் தரப்பு. ஆனால், பொம்மைகள் மாதிரி வெறுமனே கேட்பவர்களாகக் குழந்தைகளை வைத்திருப்பது அல்ல கல்வியின் நோக்கம்.

பத்துத் தலை ராவணர்கள்

ஒரு கணித ஆசிரியருக்குக் கணிதம்தான் எல்லாம். அறிவியல் பாடத்தைப் பற்றி கவலை கிடையாது. அறிவியல் ஆசிரியருக்கோ, சமூக அறிவியலில் என்ன இருக்கிறது என்பது பற்றிய சிந்தனை இல்லை. ஆங்கில ஆசிரியர் தமிழ்ப் பாடம் பற்றி அறிந்து கொள்ளவும் வேண்டாம். தமிழாசிரியரோ வேறு எந்தப் பாடம் பற்றியும் சிந்திக்கத் தேவையில்லை. ஆனால், ஒரு மாணவர் மட்டும் பத்துத் தலை ராவணன் போல அனைத்துப் பாடத்துக்குள்ளும் தலையைக் கொடுத்தே தீர வேண்டும்.

கணித மேதை சீனிவாச ராமானுஜம் கணக்கில் சாதித்ததைப் பிற பாடங்களில் சாதிக்க முடியவில்லை.அதனால் நம் கல்விமுறையால் தூக்கியெறியப்பட்டார். அவர் மட்டுமல்ல, பத்துத் தலை ராவணனாக இருக்க முடியாத குற்றத்துக்காக, பள்ளிக் கல்வியைக் கைவிட்டவர்களின் பட்டியல் நீளம்.

எழுத்தை அழிக்கும் சாய்ஸ்

மாணவர்களின் அன்றாட வாழ்வோடு கல்வி தொடர்பில்லாமல் போனதால்தான் 'ஏட்டுச் சுரைக்காய்' எனக் கேலி செய்யப்படுகிறது. யஷ்பால் கமிட்டி கல்விச் சீர்திருத்தங்களை முன்மொழிவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னதாக, நான் ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் பணியாற்றி வந்தேன்.

ஒரு கேள்விக்கு நான்கு பதில்களைத் தந்து ஏதேனும் ஒரு பதிலைத் தேர்வு செய்யும் முறையை ரேனோ சாஸோ எனும் ஆப்பிரிக்கக் கல்வியாளர் அறிமுகம் செய்தார். அறிவை உடனடியாய் சோதித்துப் பார்க்க வசதியான முறை என்று உலகம் அதை உடனே ஏற்றுக் கொண்டாடிவிட்டது. ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐ.ஏ.எஸ் தேர்வு வரை அறிமுகம் செய்துவிட்டது. இந்த முறையால் குழந்தைகள் தங்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை எழுத்தில் பதிக்கும் வழக்கம் குறைந்துகொண்டே போய் 1980 முதல் ஏறத்தாழ நாற்பது வருடங்களில் தமிழில் தானாக எழுத முடியாதவர்களாக (ஆங்கிலம் ... சொல்லவே தேவை இல்லை) இரண்டு மூன்று தலைமுறைகளை மாற்றிவிட்டது.

அதிலிருந்து மாணவர் ஆறுமுகம் எப்படித் தப்பிப் பிழைத்தார் என்பது ஆச்சரியம்தான்.

இட்லி இதிகாசம்

பள்ளியின் ஒரு விழாவுக்கு மாவட்டக் கல்வி அதிகாரி அழைக்கப்பட்டிருந்தார். அவர் பழங்காலக் கோத்தாரி கல்விமுறைப்படி கற்றவராக இருந்தார். “இந்தக் கல்வி எப்படி வாழ்க்கையில் பயன்படும் என்பதை உங்களில் யாராவது விளக்க முடியுமா? என அவர் கேட்டார். அந்தக் கேள்வி மாணவர்களுக்கு மட்டுமல்ல அங்கிருந்த ஆசிரியர்கள் உள்ளிட்ட எல்லாருக்குமானதாக இருந்தது. அதிகாரியின் முன்பாக, தங்களது வாயைத் திறக்க எந்த ஆசிரியரும் தயாராக இல்லை. தொடர்ந்து பேசலாமா, வேண்டாமா என அதிகாரி திணறினார். இதுபோன்ற தருணங்களின் மவுனம் நம் கல்வியின் தோல்வியைப் பறைசாற்றும் ஒன்று.

யாரும் பேசாததால் தனது கேள்விக்கான பதிலை அதிகாரியே சொல்ல முயன்றார். அந்தப் பெரிய கூட்டத்திலிருந்து அப்போது அந்த ஆறாம் வகுப்பு மாணவர் எழுந்து நின்று கைதூக்கினார். “நான் சொல்றேன் சார்” என்றார். அவர்தான் ஆறுமுகம். பள்ளியே அதிர்ந்து போய்ப் பார்த்தது.

ஆறுமுகம் மைக் முன் அழைக்கப்பட்டார். தலைமை ஆசிரியர் பதற்றத்தில் கண்களை மூடிக் கொண்டார். ஆறுமுகம் தயக்கமில்லாத குரலில் “ இட்லியை வைச்சு இதை விளக்கலாம் சார்... இட்லி செய்யணும்னா என்னென்ன பொருள்கள் தேவை? அதுக்கெல்லாம் நாம பேர் வைக்கணும்.. கரெக்ட்டா பேர் வைக்கணும்னா தமிழ்ப் பாடம் நமக்கு நல்லாத் தெரியணும். இத்தனை கிலோ அரிசிக்கு இத்தனை கிராம் உளுந்து, எவ்வளவு மாவுல எத்தனை இட்லி செய்யலாம்னு கணக்கு போட நமக்குக் கணக்கு பாடம் தெரியணும். ஊறவைக்கிறது, அரவை மிஷின்ல அரைக்கிறது... ஆவியில வேகவைக்கிறது எல்லாம் சயின்ஸ் படிச்சாத்தான் சார் புரிந்துகொள்ளலாம். மனுசங்க எப்போ சமைக்கக் கற்றுக்கிட்டாங்க? இட்லி எப்போ கண்டுபிடிச்சாங்கன்னு நாமத் தெரிஞ்சுக்கணும்னா வரலாறு படிக்கணும் சார்.. ரெடியான இட்லிங்களை வீட்ல எப்படிப் பகிர்ந்து சாப்பிடுறோங்கிறது பொருளாதாரம் சார்.. ” அவருக்குச் சரி என்று பட்டதைச் சரளமாகச் சொல்லிக் கொண்டே போனார்.

வகுப்பறையின் அமைதி

தனது பாடத்தைத் தாண்டி மற்ற விஷயங்களை விவாதிக்க விரும்பாத ஆசிரியர்களுக்கு முழுமையான, புதிய பாடத்தின் அர்த்தத்தைச் சொல்ல ஆறுமுகம் மாதிரி மாணவர்கள் தேவை.

‘வகுப்பறையில் மாணவர்களை அமைதியாக இருக்குமாறு வலியுறுத்தாதவரை ஆசிரியரும் கற்றுக்கொள்கிறார்' என்கிறது யஷ்பால் கமிட்டி அறிக்கை. பள்ளிக்கு வெளியில் உள்ள வாழ்க்கையைப் பள்ளி அறிவோடு தொடர்பு படுத்துவதே அடிப்படையான தேவை. அதற்குக் குழந்தைகளைப் பேச அனுமதிக்கும் வகுப்பறைகள் தேவை. நம்மைவிட சிறப்பாகக் குழந்தைகளால் எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க முடியும் என்பது என் நம்பிக்கை.

‘அறிந்ததிலிருந்து அறியாததை நோக்கி’ எனும் மாண்டிசோரி கல்வியின் அடிப்படைக்கு ஒரு உதாரணம் ஆறுமுகம். கல்வியை ஒரு முழுமையான செயல்பாடாகப் பார்க்க என்னைப் பயிற்றுவித்தவர் ஆறுமுகம் தான்.

குழந்தைகளோடு யார்?

1927-ல் கூட்டப்பட்ட ஒரு கல்வி மாநாட்டுக்குக் காந்தியடிகள் வந்தார். வரும் வழியில் இருந்த ஒரு பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்தார். காந்தியிடம் ஆசிரியர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டார்கள். “நான் ஆங்கிலப் பாடத்தோடு சம்பந்தப்பட்டவன்” “நான் அறிவியல்'’ ‘'நான் கணிதத்தோடு சம்பந்தப்பட்ட ஆசிரியர்’' என்று அவர்கள் தங்களை அறிமுகம் செய்துகொண்டபோது “அப்படியானால் இங்கே குழந்தை களோடு சம்பந்தப்பட்டவர்கள் யாருமே இல்லையா?' என்று காந்தி கேட்டாராம்!

என்னைக் குழந்தைகளோடு சம்பந்தப்பட்டவராக மாற்றிய ஆறுமுகம் தற்போது கடலூர் பாண்டிச்சேரி போக்குவரத்தில் ஒரு பேருந்து நடத்துநராக தினசரி நூற்றுக்கணக்கான மக்களை பாதுகாத்துக்கொண்டிருக்கிறார்.

கட்டுரையாளர், சிறுவர் இலக்கியத்துக்காக சாகித்ய அகாடமி வழங்கும் பால சாகித்ய புரஸ்கர் விருதை 2014-ம் ஆண்டில் பெற்றவர்.

தொடர்புக்கு: eranatarasan@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x