Published : 26 May 2014 02:49 PM
Last Updated : 26 May 2014 02:49 PM
சிங்கமோ காட்டில் வாழ்வது. அதற்கும் மலைச்சிகரத்திற்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றலாம். சிங்கம் நடந்து செல்லும்போது முன்பக்கம் மட்டுமே பார்த்து நடப்பதில்லை. இடையிடையே நின்று, தான் நடந்தவந்த பாதையைத் திரும்பிப் பார்த்தபடி செல்லும். இதை அரிமா நோக்கு என்பர். சிங்கத்தின் பார்வை, இலக்கியத்திலும் அரசியல் களத்திலும் அடிக்கடி சொல்லப்படும் உவமை. ஆனால் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கே இந்த உவமை மிகவும் பொருந்தும்.
அரசின் உயர்ந்த பணியிடங்களுக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு, இவை மட்டும்தான் பாடங்கள், குறிப்பிட்ட நூல்களைப் படித்தால் மட்டும் போதும் என்ற வரையறைகள் எதுவுமில்லை. பாடத்திட்டம் ஓரளவுக்கு விரிவானதாகவே இருக்கும். தேர்வு அறிவிக்கப்படுவதற்கு முன்பே தயாரிப்பில் ஈடுபடும் மாணவர்களும்கூடக் கடைசி நேரத்தில் படித்தாக வேண்டிய பாடங்களில் சிலவற்றைப் புரட்டிப் பார்ப்பதற்கும்கூட நேரமில்லாது பதற்றமடைவார்கள். கடைசியில் ஏதாவது ஒரு புள்ளியில் படிப்பதை நிறுத்திக்கொண்டு ஏற்கெனவே படித்தவற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்றால் அதற்கும்கூட நேரம் அனுமதிக்காது.
எவ்வளவு படித்திருக்கிறோம் என்பதைப் போலவே படித்தவற்றை எந்த அளவுக்கு தெளிவாக உள்வாங்கிக் கொண்டிருக்கிறோம், அவற்றை நினைவில் வைத்திருக்கிறோம் என்பவையும் போட்டித் தேர்வுகளின் வெற்றி வாய்ப்புகளை உறுதிசெய்கின்றன. எனவே படிப்பதற்கு ஒதுக்கும் நேரத்தில் ஏற்கெனவே படித்திருப்பதைத் திருப்பிப் பார்ப்பதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.
யு.பி.எஸ்.சி. மற்றும் டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வுகளில் குறைந்தபட்ச வினாக்கள், பள்ளிப் பாடநூல்களிலிருந்து கேட்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. பள்ளியில் படித்ததைப் பள்ளியோடும் கல்லூரியில் படித்ததைக் கல்லூரியோடும் மறந்துவிடுபவர்கள், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும்போது மீண்டும் அந்தப் பாடநூல்களைத் தேடியெடுத்துப் படித்தே ஆகவேண்டும். யு.ஜி.சி. தேர்வுகளுக்குத் தயாராவோர் முதுகலைப் படிப்பில் படித்ததை மட்டுமல்லாது இளங்கலைப் படிப்பின்போது படித்ததையும் படிக்க வேண்டும். ஒரு பாடத்தின் நுட்பங்களைத் தெரிந்துகொண்டிருக்கிறோமா என்பதோடு, அதன் அடிப்படைகளும் நமக்குத் தெரிந்திருக்கிறதா என்று பரிசோதிப்பதும் இந்தத் தேர்வுகளின் நோக்கமாக இருக்கிறது.
ஒரு துறையின் நுட்பமான விவரங்கள் ஒருசிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். ஆனால் அதன் அடிப்படை விஷயங்கள் பெரும்பாலும் அனைவருக்குமே தெரிந்திருக்கக்கூடும். எழுதுவது போட்டித் தேர்வு என்பதால் அனைவரும் பதில் அளிக்க வாய்ப்பு உள்ள கேள்விகளுக்கு நாமும் கண்டிப்பாகப் பதில் அளித்தாக வேண்டும். மற்றவர்கள் பதிலளிக்க வாய்ப்பில்லாத கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தயாராக இருக்க வேண்டும். அடிப்படைக் கேள்விகளுக்கான பதில்களை அளிக்க வேண்டுமென்றால் சிங்கத்தின் நடையைப் பின்பற்றி, பழைய பாடப் புத்தகங்களைப் பரணிலிருந்து இறக்கியெடுத்துப் படித்துத்தானாக வேண்டும்.
சிங்கத்தின் நடை மட்டுமல்ல... சிங்கத்தின் உணவுமுறையும்கூடப் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குப் பொருந்தக் கூடியதுதான். சிங்கம் தனக்குத் தேவையானபோது மட்டுமே வேட்டையாடும். மற்ற மிருகங்களைப் போலத் தேவைக்கு மேலாக வேட்டையாடிக் குவித்துவைப்பதில்லை. குறிப்பிட்ட பாடத்திட்டம் இல்லை என்கிற சூழ்நிலைகளில், மாணவர்கள் தங்களுக்குத் தொடர்புடையதாகக் கருதும் நூல்கள் அனைத்தையும் வாங்கிக் குவித்துவிடுவது வழக்கமாக இருக்கிறது. குறிப்பிட்ட கால வரையறைக்குள் அவை அனைத்தையும் படித்து முடிக்க முடியாமலும் போகலாம். எனவே எது மிக முக்கியமானதோ அதற்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும். தொடர்புடைய பிற புத்தகங்களையும் படிக்க வேண்டும் என்றால் நேரம் அனுமதித்தால் மட்டுமே முயலவும்.
சிங்கம் சிகரத்தில் ஏறுமா என்பது கேள்வியல்ல. சிங்க நடை போட்டால்தான் சிகரத்தில் ஏற முடியும் என்பதுதான் பதில்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT