Last Updated : 02 Jun, 2015 12:29 PM

 

Published : 02 Jun 2015 12:29 PM
Last Updated : 02 Jun 2015 12:29 PM

திறன் கொள் இந்தியா!

அமெரிக்காவில் வசிக்கும் ஒரு நண்பர் “அங்கே சிறு சிறு பணிகளுக்கு எல்லாம் ஆட்கள் வேலைக்குக் கிடைப்பது குதிரைக்கொம்பு” என்கிறார். நீண்டகால அடிப்படையில் வேலை செய்யும் வாய்ப்புடன் அமெரிக்காவுக்குப் போகிற பெரிய மனிதர்கள் பலர் இந்தியாவிலிருந்து தங்களுடனே வீட்டுப் பணிப்பெண்களையும் அழைத்துச் செல்கிறார்கள் என்கிறார் அவர்.

வளர்ச்சியடைந்த பணக்கார நாடுகளில் மட்டும்தான் இப்படிப்பட்ட பிரச்சினை என்று நினைக்கலாம் ஆனால், வளரும் நாடான நமது இந்தியாவிலும் அப்படிப்பட்ட போக்கு வருவதைத் தவிர்க்க முடியாது என்றுதான் தெரிகிறது.

வேலையும் ஆளும்

நம் நாட்டில் “எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை” என்று பலர் காத்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். அதே நேரத்தில் “எங்களுக்கு வேலை செய்வதற்கு ஆட்கள் கிடைக்கவில்லை” என்றும் பலர் காத்துக் கிடப்பதும் உண்மைதான். “கிராமங்களில் நடக்கிற விவசாய வேலைகளுக்குக் கூட இப்போதெல்லாம் பலர் தங்களின் வயல்களில் இயந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். விவசாயத்தை நம்பிப் பெரும்பான்மையான மக்கள் இருக்கும் இந்த நாட்டில் இயந்திரங்களைப் பயன்படுத்தலாமா” என்றும் சில விவசாயச் சங்கங்கள் குரல் எழுப்புகின்றன.

ஆனால், விஷயம் அதோடு முடிந்துவிடவில்லை. “யார் இப்பல்லாம் விவசாய வேலைக்கு வருகிறார்கள்? யாரும் வராததால்தான் நாங்கள் இயந்திரங்களை வைத்து விவசாயத்தை நடத்துகிறோம்” என்று எதிர் விவாதம் செய்வதற்கும் ஆட்கள் இருக்கவே செய்கிறார்கள்.

திறன்மிக்க உழைப்பு

தனக்கான வேலையைத் தேடும் மனிதர்களின் மனதில் என்னதான் சிந்தனைகள் ஓடுகின்றன என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. முக்கியத்துவம் இல்லாத சிறு சிறு வேலைகளைச் செய்வதில் பொதுவாக, மனிதர்களுக்கு விருப்பம் குறைந்துவருவது உலகளாவிய போக்காக இருக்கிறது. இத்தகைய போக்கு இருக்கிற அதே நேரத்தில், ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்குத் திறன் மிக்க உழைப்பாளர்கள்தான் வேண்டும் என் இன்னொருவகையான போக்கிலும் உள்ளன.

இத்தகைய பொருளாதாரத் தேவைகளின் காரணமாக, தங்களின் நாட்டில் உள்ள வேலை செய்யும் சக்தி படைத்த உழைக்கும் மக்களைத் திறன் படைத்தவர்கள், திறன் இல்லாதவர்கள் எனப் பிரித்து ஆராய்கிற முயற்சிகளில் பலநாடுகள் இறங்கி உள்ளன. நாட்டில் உருவாகி உள்ள வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ற வகையில் திறனோடு இருக்கும் உழைப்பாளிகள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை ஆராய்வதற்காக ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.

இங்கிலாந்தில் 75 சதவீதம் பேரும், ஜெர்மனியில் 80 சதவீதம் பேரும் உள்ளனர். ஆனால், இந்தியாவில் இத்தகைய திறன் படைத்த உழைப்பாளர்கள் 2 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளனர் என்கிறார் மத்திய அரசின் தேசியத் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ள திலிப் செனாய்.

இந்தியாவின் முயற்சிகள்

2014-ம் ஆண்டின் சுதந்திர தினத்தில் பிரதமரின் உரையிலும் இந்தப் பிரச்சினை இடம்பெற்றது. “இந்தியா நவீன நாடாக மாற வேண்டும் என்றால் திறன் மேம்பாடு மூலம் திறன் படைத்த இந்தியாவாக மாற வேண்டும்” என்றார் நரேந்திர மோடி.

நமது நாட்டின் தற்போதைய வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ற முறையில் இளைஞர்களைத் திறன்மிக்க முறையில் வளர்த்தெடுப்பதற்காகத் தேசியக் கொள்கையையும் மத்திய அரசு உருவாக்கியுள்ளது.தற்போது மத்திய அரசின் பல்வேறு துறைகளின் மூலமாக 70க்கும் மேற்பட்ட திட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஏறத்தாழ ஏழாயிரம் கோடி ரூபாய்கள் அளவுக்கு இதற்காகச் செலவழிக்கப்படுகிறது.

தனி அமைச்சகம்

இத்தகைய பயிற்சிகளின் தரத்தை மேம்படுத்தத் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு என்ற பெயரில் தனி அமைச்சகமே உருவாக்கப்பட்டுள்ளது. திறன் மிக்க உழைப்பின் தேவைக்கும் அது கிடைப்பதில் உள்ள பற்றாக்குறைக்குமான இடைவெளியை நிரப்புவதில் இளைஞர்களுக்குப் பயிற்சியளிப்பதில் இந்த அமைச்சகம் கவனத்தைச் செலுத்துகிறது. நாடு முழுவதும் இதற்கான பயிற்சி மையங்கள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன.

1,500 கோடி ரூபாய் செலவில் 14 லட்சம் மாணவர்கள் உள்ளிட்ட 24 லட்சம் பேருக்குத் திறன் வளர்ச்சிக்கான பயிற்சிகள் அளிக்கப் பட்டு இந்த மையங்களின் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்கிறது எம்ப்ளாய்மெண்ட் இதழ்.

திறன் பயிற்சிகள்

தேசியத் திறன் மேம்பாட்டுக்கான கழகம் கடந்த ஐந்தாண்டுகளில் 50 லட்சம் பேருக்குப் பயிற்சி அளித்துள்ளது. ஆனாலும், தேசியத் திறன் வளர்ச்சி பல்கலைக்கழகங்கள், பல்வகைத்திறன்களை வளர்க்கும் நிறுவனங்கள் என்ற பெயர்களில் புதுவகையான பல முயற்சிகள் வர உள்ளன. இவற்றின் மூலம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் உள்ள தனித்தன்மையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற வகையில் திறன்மிக்க உழைப்பாளர்களையும் சிறப்பான தொழில் முனைவோர்களையும் சமூகத்தில் அடித்தளத்தில் படைப்பாக்கத் திறன் கொண்ட புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்குபவர்களையும் ஊக்கப் படுத்தும் வகையிலான பயிற்சிகளை இத்தகைய நிறுவனங்கள் அளிக்கும். தனியார் மற்றும் வெளிநாடுகளின் அனுபவங்களையும் உதவிகளையும் பங்களிப்புகளையும் இந்தப் பணிக்காகப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கும் மாணவரா நீங்கள்? அல்லது படித்து முடித்து வேலை வாய்ப்புகளைத் தேடிக்கொண்டு இருக்கும் இளைஞரா நீங்கள்? வேலைவாய்ப்புத் துறையில் நடைபெற்றுவரும் இத்தகைய மாற்றங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு உங்களின் அணுகுமுறையை அமைத்துக் கொண்டீர்கள் என்றால் உங்களின் தொழில் வாழ்க்கை சிறப்பானதாக அமையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x