Published : 16 Jun 2015 12:04 PM
Last Updated : 16 Jun 2015 12:04 PM
பள்ளி மாணவர்களுக்கு எளிய முறையில் கணிதம் கற்பிக்கப் புறப்பட்டிருக்கிறார்கள் ஏ.சி.பிரபுவும் , சாமி சுரேஷ்குமாரும். இருவருமே நூற்றுக் கணக்கான அரசுப் பள்ளிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு எளிய முறையில் கணிதத்தைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.
என்ன கற்பிக்கிறார்கள்?
“பெருக்கல் வாய்ப்பாட்டை ரொம்ப எளிதாக மாணவர்கள் மனதில் பதிய வைக்கிறோம்! 2 முதல் 19 ஆம் வரையிலான ஒவ்வொரு பெருக்கல் வாய்ப்பாட்டுக் கணக்குக்கும் 2 நொடியில் போடக்கூடிய மனக்கணக்கு சூத்திரங்கள் இருக்கின்றன. அதைத்தான் சொல்லிக்கொடுக்கிறோம்!” என்கிறார்கள் இந்த இளைஞர்கள்.
இதற்காக Maths Made Easy என்று ஒரு புத்தகமும் வெளியிட்டுள்ளார்கள். பிரபு சென்னை லயோலா கல்லூரியில் கணிதவியலில் எம்.எஸ்.ஸி, எம்.பில் பட்டம் பெற்றவர். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி செய்து கொண்டிருக்கிறார். சுரேஷ்குமார் பி.எஸ்ஸி கணிதத்தில் கோல்டு மெடல் வாங்கியவர்.
புதுக்கோட்டையில் எளிய விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர் பிரபு (9629483526). சென்னையில் வசித்தபோது காசிமேடு, வண்ணாரப் பேட்டையில் ஏழை எளிய மாணவர்களுக்குக் கணிதம் சொல்லிக்கொடுத்துள்ளார்.
பிறகு, அரசுப் பள்ளிகளைத் தேடிச்சென்று கணக்கு கற்றுக்கொடுக்க தொடங்கியிருக்கிறார். கோவையில் பி.எச்டி படிக்குபோதும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி கற்பிப்பதை விடவில்லை. அப்படி ஒரு டியூசன் சென்டரில் அறிமுகமாகி நண்பரானவர்தான் சுரேஷ்குமார். பிறகு, இருவரும் இணைந்து மாணவர்களைத் தேடிச் சென்று கணிதம் கற்பிக்க ஆரம்பித்துள்ளனர்.
நமது கல்வி முறையை இன்னமும் எளிதாக்காமல் கல்வித் தரத்தில் உலக அளவில் முதல் 10 இடங்களில் நம்மால் இடம்பிடிக்க முடியாது. அதற்கான சிறு முயற்சியையே நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம் என்கின்றனர் இந்த இளைஞர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT