Published : 19 May 2015 12:33 PM
Last Updated : 19 May 2015 12:33 PM
நீங்கள் எதிர்பார்த்திருந்த வேலைக்கான நேர்காணல் நாளை நடக்கவிருக்கிறது. அதற்கான தகுதி படைத்தவராகவும் உள்ளீர்கள். உங்களுடைய கல்வி, அனுபவம், தனி விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய ரெஸ்யூம் (resume) மற்றும் சான்றிதழ்களைத் தயார் நிலையில் வைத்துள்ளீர்கள். இவை மட்டும்போதும் என நினைக்கின்றீர்களா?
சமீபத்தில் நண்பர் ஒருவர் நேர்காணலுக்குச் சென்றார். பட்டப்படிப்பில் உயர்ந்த மதிப்பெண், நல்ல தொடர்பு ஆற்றல், புத்திக்கூர்மை இப்படிப் பல திறமைகள் கொண்டவர் அவர். அவரை நேர்காணல் செய்த நபர் அவருடைய ரெஸ்யூமை பார்த்தவுடன் சட்டென முகம் சுளித்தார். “team player, excellent communication skill போன்ற அரதப்பழசான வர்ணனைளைக் கை விடவே மாட்டீங்களா?” எனக் கேட்டார்.
“அது.. வந்து.. சார்!” என்று தயங்கினார் நண்பர். அடுத்தடுத்துக் கேள்விகள் சரமாரியாக வந்து பாய்ந்தன. “உங்களுடைய பேஸ் புக் ஐ. டி. என்ன? அதில் டைம் லைன் ரெஸ்யூம் இருக்கும் அல்லவா? உங்களுக்குப் பிளாக் எழுதும் பழக்கம் உள்ளதா? உங்களுடைய லிங்க்டின் அக்கவுண்ட்டின் சுட்டியை ஏன் குறிப்பிடவில்லை?” எனக் கேட்டார்.
நண்பருக்கோ தலை சுற்றியது. கல்வி, தனித் திறன்கள், வேலைக்குத் தேவையான ஆற்றல் இது போன்ற கேள்விகளைத்தான் கேட்பார்கள் என நினைத்தால் கதை வேறு மாதிரி போகிறதே என்று சோர்வோடு நேர்காணல் அறையைவிட்டு வெளியேறினார்.
வேலையைத் தேடும் ஒருவருக்கு இனிமேல் புதிய பார்வையும், அணுகுமுறையும் அவசியம். குறிப்பாக, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தகுதிக் குறிப்பைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். 2014-ல் அதிகமாகப் பின்பற்றப்பட்ட ரெஸ்யூம் வடிவங்களை இங்குக் காணலாம்.
சமூகவலைத்தளம் ரெஸ்யூம்
நமக்குப் பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ வேலை கிடைப்பதில் சமூக ஊடகங்களின் பங்கு பெருமளவில் உள்ளது. இன்று பல நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான திறமைசாலிகளைக் கண்டறியச் சமூக வலைத்தளங்களைத் துழாவுகிறார்கள். உங்களுடைய ரெஸ்யூம் சமூக வலைத் தளங்களில் இருக்குமானால் அதன் மூலமே முதல் கட்டத் தேர்வு நடத்தப்படுகிறது.
>careercloud.com, >resumesocial.com, >visualcv.com போன்ற இணையதளங்கள் மூலம் உங்களுடைய தன் விவரக் குறிப்பைச் சமூக ஊடகத்தில் உருவாக்கலாம். வேலைக்கான சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானது லிங்க்டின் வலைத்தளம்.
வரைபட வடிவில் ரெஸ்யூம்
அதிகப்படியான கவனத்தை ஈர்க்கும் வகைமையைச் சேர்ந்தது இன்ஃபோகிராஃபிக் ரெஸ்யூம் (Infographic resume). எழுத்து மொழி மூலமாக மட்டும் உங்களை விவரிப்பது அந்தக் காலம். வரைபடம், சித்திரம் மற்றும் கிராபிக்ஸ் படங்கள் மூலமாக வண்ணமயமாக தனிப்பட்ட விவரங்களை, சாதனைகளைப் பட்டியலிடும் காலம் வந்துவிட்டது. கற்பனைத் திறனோடும் அதே நேரம் புரியும்படியாகவும் உங்கள் ரெஸ்யூமை வடிவமைக்கும்போது பார்க்கும் அத்தனை பேரின் கவனத்தையும் ஈர்க்கும். மேற்கத்திய நாடுகளில் சமீபக் காலமாகப் பின்பற்றப்படும் பாணி இது.
பேஸ்புக் டைம் லைன் ரெஸ்யூம்
பேஸ்புக்கில் அக்கவுண்ட் இல்லாத இளைஞர் ஒருவரை இன்று காண்பது அரிது. அனேகம் பேர் பேஸ்புக்கில் அக்கவுண்ட் தொடங்கும்போது தன் விவரக் குறிப்புகளைப் பதிவு செய்வார்கள். நாளடைவில் கேளிக்கைக்காக மட்டுமே தகவல்களைப் பரிமாறுதல், படங்களைப் பதிவேற்றம் செய்தல் என்பதாக மாறிப்போகும். ஆனால் இன்றைய நிறுவனங்கள் உங்களுடைய பேஸ்புக் டைம் லைனை கணக்கில் எடுத்துக்கொள்கின்றன என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.
வீடியோ ரெஸ்யூம்
பாரம்பரியமான ரெஸ்யூமுக்கு வீடியோ ரெஸ்யூம் மாற்றாகாது. ஆனால், வீடியோ ரெஸ்யூம் என்பது நிச்சயம் கூடுதல் அழகு சேர்க்கும். இந்தப் புதிய அணுகுமுறை மூலமாக நீங்கள் உங்களுடைய சாதனைகள் மற்றும் ஆளுமையைச் சிறப்பாக வெளிக்காட்ட முடியும். >visualvc.com, >careerbuilder.com, >sparkhire.com, >jobster.com அல்லது உங்களுடைய வலைப்பூ மூலமாக வேலை சார்ந்த வீடியோப் பதிவை உருவாக்கலாம்.
தவிர்க்க வேண்டிய சொற்கள்
முதலில் வெட்டி ஒட்டும் பாணியில் வழக்கமான ரெஸ்யூம் வடிவத்தை அப்படியே நகல் எடுப்பதைக் கை விட வேண்டும். ‘team player’, ‘excellent communication skills’, ‘confident leader’, ‘result- oriented’, ‘result driven’ போன்றவை நல்ல வார்த்தைகள்தான். ஆனால், மீண்டும் மீண்டும் அச்சில் வார்த்தார் போல ரெஸ்யூமில் பதிக்கப்படும் சொற்கள் இவை.
ஒரு நிறுவனத்துக்குத் தேவை தனித்துவம் வாய்ந்த பணியாளர். அதற்குச் சுயமாகச் சிந்திக்கும் நபரை அவர்கள் தேடுவார்கள். ஆக, உங்கள் ரெஸ்யூமை வடிவமைக்கும்போது உங்களை எப்படியெல்லாம் வர்ணிக்கலாம் என்பதை நீங்கள்தான் கண்டறிய வேண்டும்.
அதே போன்று, உங்களுடைய தொழில் சார்ந்த வரலாறை கூடுமானவரை ரத்தினச் சுருக்கமாக எழுதுங்கள். மேம்போக்கான வர்ணனைகளை விடுத்துச் சிறப்பம்சங்களை முன்னிறுத்தும் சொற்கள், எண்கள், வடிவங்களைக் குறிப்பிடுங்கள்.
ஆக, ரெஸ்யூமின் அத்தனை சூட்சுமங்களைக் கவனத்தில் கொண்டு காலத்துக்கு ஏற்ப நம்மையும், நம் சுய விவரங்களையும் மேம்படுத்தினால் வேலை நிச்சயம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT