Published : 17 Mar 2015 11:08 AM
Last Updated : 17 Mar 2015 11:08 AM
அருணாசலப் பிரதேசம் என்றால் ‘சூரியன் உதிக்கும் நாடு’ என்று பொருள்.காலிகா புராணம், மகாபாரதத்தில் இந்தப் பகுதிகள் குறித்த தரவுகள் இருக்கின்றன. ஆதிகாலத்தில் திபெத், பர்மாவிலிருந்து பழங்குடியினர் குடியேறினர். வடமேற்கு பகுதியை மொன்பா வம்சமும் வடக்குப் பகுதியைப் பூட்டானும் திபெத்தும் மற்றப் பகுதிகளைச் சுதியா வம்சமும் பின்னர் வந்த அஹோம் வம்சமும் ஆண்டது. 1858-ல் ஆங்கிலேயர்கள் வந்தனர். 1875-ல் வடக்கு எல்லைப்புறப் பகுதியைத் தங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப் படிப்படியாக ஊடுருவல் கொள்கையை ஆங்கில அரசு பின்பற்றியது.
இந்திய - சீனப் போர்
இந்தியாவின் எல்லையைத் தீர்மானிக்க 1912- 13-ல் பிரிட்டிஷ் இந்தியா, சீனா மற்றும் திபெத் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை சிம்லாவில் நடந்தது. இதில் மக்மோகன் எல்லைக்கோடு வகுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை சீனா பிறகு நிராகரித்தது. 1935-ல் அது வெளியிட்ட வரைபடம் மூலம் அருணாசலப் பிரதேசத்தின் சில பகுதிகளையும் திபெத்தையும் சொந்தம் கொண்டாடியது.
நீடித்த இந்தச் சர்ச்சையால் இந்திய - சீனப் போர் மூண்டது. 1959 ஆகஸ்ட் 26-லும் பின்னர் முழு வீச்சில் அக்டோபர் 1962-லும் சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் நுழைந்தன. அருணாச்சலப்பிரதேசம் முழுமைக்கும் தாக்குதல் நடத்தின. பின்னர் மக்மோகன் எல்லையைத் தோராயமாக ஏற்பதாகக்கூறி சண்டை நிறுத்தம் செய்து 1963-ல் இந்தியப் போர் கைதிகளையும் சீனா விடுவித்தது. இந்தப் போர் மூலம் திபெத் உடனான பண்டமாற்று வியாபாரம் முடிவுக்கு வந்ததுடன் திபெத் தனிநாடாக உருவாகும் வாய்ப்பும் முறியடிக்கப்பட்டது.
நெஃபா உருவாக்கம்
இதன்பின்னர் 1954-ல் வடகிழக்கு எல்லைப்புற முகமை (நெஃபா) உருவாக்கப்பட்டது. (North East Frontier Agency (NEFA). அருணாசலப் பிரதேசத்தின் அன்றைய பெயர் இதுதான். வெளியுறவுத் துறையுடன் அஸ்ஸாம் ஆளுநரின் கட்டுப்பாட்டில் இப்பகுதி இருந்து வந்தது.
பின்னர் 1972-ல் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு அருணாசலப் பிரதேசம் என அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பெயர் சூட்டினார். பின்னர் 1975-ல் சட்டப்பேரவை அமைக்கப்பட்டது. 1978 மார்ச் 4-ம் தேதி 33 உறுப்பினர்களுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட யூனியன் பிரதேச அவை அமைந்தது. 1987 பிப்ரவரி 20-ம் தேதி மாநில அந்தஸ்தை அடைந்து நாட்டின் 25-வது மாநிலமாக உதித்தது.
1630 கி.மீ. எல்லை
அண்டை நாடுகளுடன் 1630 கி.மீ. தூரத்துக்குச் சர்வதேச எல்லையைப் பகிரும் மாநிலம் இது. மேற்கில் பூட்டான் (160 கி.மீ.), வடக்கு மற்றும் வடகிழக்கே சீனா (1080 கி.மீ.), கிழக்கே வங்கதேசம் (440 கி.மீ.), தெற்கே அஸ்ஸாம் எல்லைகளாக அமைந்துள்ளன.
கலப்பில்லா கலாச்சாரம்
நிலப்பகுதியைக் கமெங், சுபான்ஷ்ஸ்ரீ , சியாங், லோகி மற்றும் டிரா ஆற்றுப் பள்ளத்தாக்குகள் பிரிக்கின்றன. மிகப்பெரிய மலைகளும் வனங்களும் ஏற்படுத்திய இயற்கையின் தடையால் பழங்குடி யினங்களின் அடை யாளங்களும், மொழிகளும் எவ்விதக் கலப்புக்கும் உள்ளாகாமல் தனித்துவத்துடன் தழைத்தோங்க வழிவகுத்தன.
சமூக- சமய ரீதியாகப் பழங்குடியினரை 3 கலாச்சாரக் குழுக்களாகப் பிரிக்கலாம். இதில் மோன்பாஸ் பிரிவினர் பெரும்பாலும் விவசாயிகள். மிக உயர்ந்த மலைகளில் மெம்பர்களும், கெம்பர்களும் வசிக்கின்றனர். கிழக்குப் பகுதியில் கெம்ப்டியர், சிங்போஸ் இனத்தினர் ஹீனயான புத்த மதக் கொள்கையைப் பின்பற்றுகின்றனர்.
இரண்டாம் பிரிவான அதி, அகா, அபாதனி, பாங்னி, நிஷ்கி, மிஜி மற்றும் தொங்சாகர்கள் உள்ளிட்ட பிரிவினர் டொன்யி – போலோ, அபோ-தானி என்ற பெயரில் சூரியனையும் சந்திரனையும் வணங்குகின்றனர். வழிபாடுகளில் விலங்குகளைப் பலியிடுகின்றனர். படியடுக்கு சாகுபடி மற்றும் மாற்றுச் சாகுபடியுடன், ஈர நெல் சாகுபடி மூலம் கணிசமான வேளாண் பொருளாதாரத்தில் ஈடுபடுகின்றனர். அபாதனி மக்கள்
நெல்லுடன் வயலிலேயே மீன் வளர்ப்புத் தொழில் செய்வதில் வல்லவர்கள். ஒரே சாகுபடியில் நெல்லுடன் இருமுறை மீன் அறுவடையும் நடக்கும். மூன்றாவது குழுவினர் டிரா மாவட்டத்தில் வசிக்கின்றனர். இதில் நோக்டெ மற்றும் வான்சோஸ், ஹார்டி இனக்குழுவினர் குறிப்பிடத்தகுந்தவர்கள். பண்டைய வைஷ்ணவத்தைப் பின்பற்றுவர்கள்.
மொழிகளின் ஆதிக்கம்
ஆசியாவிலேயே அதிகமான மொழிச் செறிவுள்ள மாநிலம். சுமார் 30 முக்கிய மொழிகளும் 50-க்கும் மேற்பட்ட கிளை மொழிகளும் பேசப்படுகின்றன. அவை பெரும்பாலும் திபெத், பர்மா, பூட்டான் பகுதியில் புழக்கத்தில் இருப்பவை. போடிக், தான்யி மொழிகள் பரவலாகப் பேசப்படுகின்றன. இடு, மிஜி, திராகு, சிங்போ, ஷான் மொழியும் இவை தவிர அஸ்ஸாமி, வங்கமொழி, நேபாளி, இந்தி ஆகியவையும் பேசப்படுகின்றன. ஆங்கிலம் அங்கீகரிக்கப்பட்ட அலுவல் மொழி.
மக்கள் தொகை 13.84 லட்சம் பேர். எழுத்தறிவு 65.38 சதவீதம். ஆயிரம் ஆண்களுக்கு 938 பெண்கள் என்பது பாலின விகிதாச்சாரம். இந்து மதம் 34.6 சதவீதம், டோனி - போலோ மதம் 30.7 சதவீதம், கிறிஸ்தவம் 18.7 சதவீதம், பவுத்தம் 13 சதவீதம், இஸ்லாம் 1.9 சதவீதம், சீக்கிய மற்றும் சமண மதம் தலா 1 சதவீதம் பேர் பின்பற்றுகின்றனர்.
டோலமைட், கிராபைட், நிலக்கரி, சுண்ணாம்பு, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, மார்பிள் உள்ளிட்ட முக்கியமானக் கனிம வளங்களைக் கொண்டுள்ளது. நெல், மக்காச்சோளம், தினை, கோதுமை முக்கியப் பயிர்கள். எண்ணை வித்துகள், உருளை, இஞ்சி, கரும்பு, காய்கறிகளும் பயிரிடப்படுகின்றன.
பழங்குடி பண்டிகைகள்
மோபின், சோலங், நய்யோகும், லொஸ்ஸர், சி-டோனி, பூரி-பூட், டிரீ, ரேஹ், சிபாங் யாங், சலோ-லொகு, தாமலாடு, சரோ உள்ளிட்டவை பழங்குடி மக்களின் முக்கியப் பண்டிகைகள். பெரும்பாலும் நடனங்கள் அவர்களது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகவே திகழ்கிறது. ஆடைகள் மற்றும் தலைப்பாகை தனித்துவம் மிக்கவை.
தவங், ஜிரோ, பாசர் நகரங்கள் நாம்தாபா, மவுலிங் தேசியப் பூங்காக்கள், மூங்கில் பாலத்துடன் கூடிய சேலா ஏரி, ருக்மணியுடன் கிருஷ்ணர் வாழ்ந்ததாகக் கூறப்படும் ருக்மணிநகர், பாவங்களைப் போக்குமென நம்பப்படும் பரசுராம் கண்ட் ஏரி, பனி மூடிய இமயமலைகள் என மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது.
அதிக மழை பொழிவு உள்ள மாநிலம் இது. மே முதல் செப்டம்பர் மாதங்களில் ஏறக்குறைய 4100 மி.மீ. மழை பெய்கிறது. 5 ஆயிரம் தாவரங்கள், 85 பாலூட்டி வகைகள், 500 பறவை இனங்கள், அதிக எண்ணிக்கையிலான பட்டாம்பூச்சிகள் எனப் பல்லுயிர் தேசமாக இருக்கிறது.
வற்றாத ஆறுகளும் பெரிய மரங்களும் கரும்பு தோட்டங்களும் விளைந்த மூங்கில்களுமாய்ப் பசுமை மாறா நாடாக விளங்கும் அருணாசலப் பிரதேசம் இயற்கை செதுக்கிய தேசம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT