Last Updated : 10 Feb, 2015 03:14 PM

 

Published : 10 Feb 2015 03:14 PM
Last Updated : 10 Feb 2015 03:14 PM

அறிவுபூர்வமாக என்னை அறிந்தால்!

ராஜி அவ்வளவாகப் பேசமாட்டாள். கல்லூரி வகுப்புக்கு ஆசிரியர் வராத நேரத்தில் நானும் என் தோழிகளும் கூட்டாக இணைந்து எங்கள் வகுப்பறை வாசலில் அடர்ந்த கிளைகள் பரப்பி நிற்கும் வேம்பு மரத்தடியில் அரட்டை அடித்துக் கொண்டிருப்போம். ஆனால் ராஜியோ அமைதியான ஓர் இடத்தில் தனியாக உட்கார்ந்து எதையோ படித்துக் கொண்டிருப்பாள். அல்லது அவளுடைய டைரியில் என்னமோ எழுதிக் கொண்டிருப்பாள்.

பல சமயம் தன்னந்தனியாக நூலகத்தில் புரியாத அதி மேதாவித்தனமாக நூலுக்குள் மூழ்கிப் போயிருப்பாள். அவள் படிப்பில் ரொம்பவும் சுட்டி. ஆனால் குழுவாக இணைந்து படிக்கக் கூப்பிட்டால், ‘எனக்கு குரூப் ஸ்டடி செட் ஆகாது! வேணும்னா உனக்குத் தனியா சொல்லித்தரேன்” என்பாள். உம்மனா மூஞ்சி, மண்டகனம் போன்ற பட்டப் பெயர்கள் வைத்தோம்.

ஏன் இப்படி?

பழகப் பழக ராஜியுடைய சுபாவமே அமைதியாக இருப்பது என்பது எனக்குப் புரியவந்தது. நாளடைவில் நானும் அவளும் நல்ல தோழிகளானோம். இருப்பினும் என்னிடம்கூட அதிகமாகப் பேசமாட்டாள். இது போன்ற பல ராஜிக்களை நீங்களும் சந்தித்திருப்பீர்கள். ஏன் நீங்களேகூட இது போன்ற குணாதசியம் கொண்டவராக இருக்கலாம்.

தனியாக அமர்ந்து தனக்குள்ளேயே பல விஷயங்களை ஆழமாகச் சிந்தித்து, ஆராயும் நபர் மற்றவர் பார்வைக்குப் பகல் கனவு காண்பவராகத் தோன்றலாம். யாரோடும் பழகத் தெரியாத உம்மனா மூஞ்சி அல்லது திமிர் பிடித்தவராகக் காட்சி அளிக்கலாம்.

ஆனால் இது ஒருவிதமான அறிவுத்திறன் என்கிறார் உளவியல் நிபுணர் கார்டனர். அத்திறனுக்குப் பெயர் தன்னிலை அறியும் திறன். 1983-ல் ஹாவர்ட் கார்டனர்தான் முதன்முதலில் தன்னிலை அறியும் திறன் எனும் கருத்தியலை உருவாக்கினார். அதற்கு அவர் ஆங்கிலத்தில் சூட்டிய பெயர் இண்ட்ராபர்சனல் இண்டலிஜன்ஸ் (Intrapersonal intelligence).

தன்னை அறிந்தவர்

தன்னிலை அறியும் திறன் உடையவர்கள் தன்னைத் தானே நன்கு புரிந்து வைத்திருப்பார்கள். அவர்களுடைய பலம், பலவீனம் இரண்டையும் கணித்து வைத்திருப்பார்கள். ஒரு திரைப்படம் பார்த்தாலோ, ஓர் இடத்துக்குச் சென்றாலோ, புத்தகம் வாசித்தாலோ அந்த அனுபவத்தை, அதன் மூலம் தெரிந்து கொண்ட விஷயங்களை அசைபோடும் பழக்கம் இருக்கும்.

அவர்களுடைய அனுபவங்களை டயரிக் குறிப்பாக எழுதுவது, உணர்வுகளைக் கவிதையாக வடிப்பது போன்ற காரியங்களை லயித்துச் செய்வார்கள். தனிமை விரும்பியாக இருப்பார்கள். குழுவாக இணைந்து ஒரு செயலைச் செய்வதைக் காட்டிலும் தனியாக இயங்கவே விரும்புவார்கள்.

குழு மனப்பான்மை என்று சொல்வார்களே அதாவது, பலர் செய்யும் செயலை அப்படியே பின்பற்றுவது அத்தகைய இயல்பு இவர்களுக்குக் கிடையாது. தன்னிச்சையாக முடிவெடுப்பார்கள். தான் செய்யும் செயலில் பூரணத்துவம் இருக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருப்பார்கள்.

தன்னைச் சரியாக அறிந்தவர்தான் சிந்தனையாளராக, சாதனையாளராக எழ முடியும். தத்துவ அறிஞர், கவிஞர், எழுத்தாளர், விஞ்ஞானி, துப்பறியும் நிபுணர், உளவியல் நிபுணர், மனவியல் ஆலோசகர், அவ்வளவு ஏன் நடிகர், இயக்குநர், ஓவியர், இசைக் கலைஞர் போன்ற கலைத் துறை சார்ந்தவர்களிடமும் கூட அதிக சதவீதத்தில் இருப்பது தன்னிலை அறியும் திறன்தான்.

ஆராயப்படாத வாழ்க்கைக்கு அர்த்தமில்லை என்றார் சாக்ரடீஸ். அப்படி வாழ்க்கையை உள்ளார்ந்து பார்த்து ஆராயும் அறிவுத்திறன்தான் இந்தத் தன்னிலை அறியும் திறன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x