Published : 24 Feb 2015 12:06 PM
Last Updated : 24 Feb 2015 12:06 PM
“இந்திய வேளாண்மையின் மிகப்பெரும் பகுதி பருவமழையை மட்டுமே முழுமையாகச் சார்ந்திருக்கிறது. ஆகவே, மழைநீரின் சேகரிப்பும், பயன்பாடும் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தது. மழைநீரின் ஆகப் பெரும்பான்மையான அளவு நீர் ஓடைகளாகவும் நதிகளாகவும் பெருக்கெடுத்தோடி கடைசியாகக் கடலில் சென்று சேர்ந்து விடுகிறது.
விலைமதிப்பற்ற நீர்த்திரவம் இவ்வாறாக நம்பமுடியாத அளவு மிகப்பெரும் அளவுகளில் நாட்டுக்குப் பயன்படாமல் போய் முடிகிறது. இது மாபெரும் தேசியப் பிரச்சினை. இந்த நதிகளின் நீர்வளங்களைக் கட்டுப்படுத்தி பயன்படுத்துவதன் மூலம், மிகப்பரந்த நிலப்பகுதிகளை வளம் செறிந்த பூமியாக மாற்ற முடியும். இதற்குத் தேவை தீரமிக்க, மிக நன்கு திட்டமிடப்பட்ட நடவடிக்கை மட்டுமே!”
இதை யார் சொல்லியிருப்பார் என உங்களால் ஊகிக்க முடியுமா?
1930-ல் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி.ராமன். ‘தண்ணீர் என்று ஒரு அமுதம்’ (Sir C.V.Raman “Water: the elixir of life”) எனும் கட்டுரையில் இதை எழுதியிருக்கிறார்.அவர் மேலும் கூறுகிறார்.
“தண்ணீரைப் பற்றிய ஓர் அசாதாரணமான உண்மை, நுண்ணிய வண்டல் மண் துகள்களைத் தன்னுள் முழுமையாக நிறைத்துக் கொண்டு சுமந்து செல்லும் அதனுடைய ஆற்றல்தான்! மழைநீரால் தண்ணீரைப் பெறும் ஏரிகளில், அந்தந்த ஏரிநீருக்கே உரித்தான நிறங்களின் மூலத் தோற்றுவாய் இதுதான். மழைநீர்ப் பிடிப்புப் பகுதிகளில் அமைந்துள்ள பூமியின் இயல்பைப் பொறுத்து இந்த நிறங்கள் மாற்றமடைகின்றன.
“வண்டல் மண் சுமந்து செல்லும் நீர், கடலின் உப்பு நீருடன் அதிவிரைவான வேகத்தில் கலந்து சங்கமமாகும் போது, நீரில் கலந்துவரும் மண்படிவுகள் அங்கு பிரிக்கப்பட்டுக் கீழே படிகின்றன. நீரின் நிறம், களிமண்ணின் செந்நிறம் அல்லது வண்டல்மண்ணின் பழுப்பு நிறத்திலிருந்து அடுத்தடுத்துத் தொடர்ந்து மாறி மாறி மஞ்சள், பச்சைநிற இழையோட்டங்களாகி கடைசியில் ஆழ்கடலின் நீலநிறத்தை அடைந்து விடுகிறது.
இவ்வாறு கொண்டு போய்க் குவிக்கப்பட்ட வண்டல் மண் படிவுகளால் மாபெரும் துண்டு நிலங்கள் உருவாக்கப் பட்டு வந்திருக்கின்றன. இத்தகைய நிலம், வழக்கமாக மிக வளம் செறிந்ததாகவே இருக்கும்.” என்கிறார் அவர்.
மழை நீர்ப் பிரவாகங்களைக் கட்டுப்படுத்தி, முறையாகப் பயன்படுத்தாமல் அவற்றின் போக்கில் விட்டு விட்டால், வளமான வண்டல்மண் பூமியைக் கூட அரித்தெடுத்து அவற்றைத் தரிசு நிலங்களாக்கி விடும் வல்லமையும் அதே நீரோட்டங்களுக்கு உண்டல்லவா?
அந்த அம்சத்தையும் இக்கட்டுரையின் மையப்பகுதியில் ராமன் ஆராய்கிறார் தண்ணீர் என்ற அமுதம் நஞ்சாகவும் மாறிவிடாமல் தடுப்பது மனிதர்களின் கைகளில்தான் இருக்கிறது என்பதை இதன் மூலம் நினைவூட்டுகிறார் அவர்.
“சாத்தியமான ஒவ்வோர் இடத்திலும் பொருத்தமான வகை மரங்களைத் திட்டமிட்ட வகையில் வளர்ப்பது என்பதுவும் இந்தியாவின் மிக அவசரத்தேவைகளில் ஒன்று.
இத்தகைய தாவரப் பெருக்கம் நாட்டுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பேசப்படாத ஒரு பெரும் செல்வத்தின் மூலவளமாக அமையும். மண்அரிப்பை அவை தடுப்பதுடன், வீணாகக் கடலில் சென்று சேரும் மழை நீரைப் பாதுகாக்கவும் உதவுபவையாக அமையும்” என்கிறார் ராமன் தீர்க்க தரிசனத்துடன்.
இந்த கட்டுரையில், ராமன் முன்வைக்கும் கருத்துகள் காலத்தைக் கடந்து இன்றைய சூழலுக்கும் பொருந்தும் விதத்தில் உள்ளன. ராமன் விளைவு என்பது தண்ணீர் விளைவுகளைப்பற்றிய அவரது ஆய்வுகளையும் சேர்த்துத்தான் போலிருக்கிறது!
தொடர்புக்கு: kamalalayan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT