Published : 27 Jan 2015 01:11 PM
Last Updated : 27 Jan 2015 01:11 PM

இம்ப்ரூவா, இம்ப்ரொவைஸா? :ஆங்கிலம் அறிவோமே - 42

முதலில் adjective என்றால் என்ன என்பதை அறிந்து கொள்வோம் (அல்லது வேகமாக ஒரு ரிவிஷன் செய்துவிடுவோம்).

Adjective என்பது ஒரு வார்த்தையை விளக்கும் பகுதி. அதாவது noun ஆக இருக்கும் ஒரு சொல் குறித்த விவரிப்பு இது.

It is a ---------- idea. கோடிட்ட இடத்தில் என்ன வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்துவீர்கள் என்று யோசியுங்கள்.

Good? Nice? Fabulous?

இப்படி எந்த வார்த்தையாக இருந்தாலும் அது adjective.

Truth என்பது noun. True என்பது adjective.

He speaks truth. This is a true statement.

Decency ​என்பது noun. Decent என்பது adjective.

Adjective என்பது அளவைக் குறிப்பதாகவும் இருக்கலாம். He spent all money என்பதில் ‘all’ adjectiveதான். He spent no money என்றோ, He spent some money என்றோ குறிப்பிட்டால் அந்த வாக்கியங்களில் உள்ள ‘no’ ‘some’ ஆகிய வார்த்தைகள்கூட adjectivesதான்.

I ate two mangoes என்ற வாக்கியத்தில் mangoes என்ற ​noun-ஐ (எவ்வளவு என்று) விவரிக்கிறது two என்ற வார்த்தை. இந்த விதத்தில் two என்பது adjectiveதான்.

One, two, three போன்றவை numbers என்பது நமக்குத் தெரியும். ஆனால் first, second, third போன்றவை ​numbers அல்ல. அவை ordinals. (எண்களை numbers என்று மட்டுமல்ல cardinals என்றும் குறிப்பிடுவார்கள்).

Ordinalsகூட adjectiveதான் என்பதற்காக அதை இங்கு குறிப்பிட்டேன் The first man to climb the Everest என்ற வாக்கியத்தில் ‘first’ என்பது adjective. Man எனும் noun குறித்து அது (எத்தனையாவது மனிதன் என்று) விவரிக்கிறது.

இந்த இடத்தில் லேட்டாக வந்தாலும், லேட்டஸ்ட்டாகவும், சுவையாகவும் வந்துள்ள ஒரு வாசகர் கடிதத்தைக் குறிப்பிடுவதுதான் நியாயம்.

“What is your ordinal as a child to your ​parents?” இப்படிக் குறிப்பிடலாமே என்கிறார் அவர். (“உன் பெற்றோருக்கு நீ எத்தனையாவது குழந்தை?’’ என்பதற்கான மொழி பெயர்ப்பு இது என்பது உங்களுக்கு விளங்கி இருக்கும்).

IMPROVE - IMPROVISE

தொலைக்காட்சி நடனப் போட்டிகளின் சில நடுவர்கள் “அடுத்த தடவை நிறைய ப்ராக்டீஸ் செய்து நல்லா இம்ப்ரொவைஸ் செய்யணும்’’ என்ற ஒரு வாக்கியத்தை அடிக்கடி பயன்படுத்துகின்றனர். இது சரியான பயன்பாடு அல்ல.

Improve என்பது வேறு. Improvise என்பது வேறு.

Improve என்பது முன்னேற்றம் காண்பது. அதாவது மேம்படுத்திக் கொள்வது. கொஞ்சம் திட்டமிட்டு இதைச் செய்ய வேண்டும்.

Improvise என்பது அந்த​ நொடியில் மேம்படுத்துவது. இதில் உடனடிச் செயல்பாடு என்பது முக்கியம். சில பிரபல நகைச்சுவை நடிகர்கள் தங்கள் ஸ்க்​ரிப்டில் இல்லாத வசனங்களையெல்லாம் கூறிக் கைதட்டல் வாங்குவார்கள். அதாவது அந்த நொடியில் அவர்கள் தங்களுக்குத் தோன்றியதைக் கூறி அந்தச் சூழலின் தன்மையை மேம்படுத்துகிறார்கள். இப்படி உடனடியாகச் செய்யப்படும் மேம்பாடுதான் Improvisation.

At? At the rate of?

@ என்பதன் பொருள் என்ன? இது எதற்காக மின்னஞ்சல்களில் தவறாமல் இடம் பெறவேண்டும்?

இந்தக் குறியீட்டை நெதர்லாந்தில் ‘குரங்கு வால்’ என்றும், இத்தாலியில் ‘நத்தை’ என்றும் அழைக்கிறார்கள். 1885-ல் இது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட தட்டச்சுக் கருவிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதற்கு முன்பு பல வருடங்களாகவே இடத்தைக் குறிக்க இது சுருக்கமாகப் பயன்பட்டது. He lived @ Vellore என்பது போல. @ என்பதை எழுதும் ​நேரத்தில் ‘at’ என்றே எழுதியிருக்கலாமே, இதுவா சுருக்கம் என்கிறீர்களா? நியாயம்தான். ஆனால் தட்டச்சு செய்யும்போது ஒரு ஸ்பேஸ் குறைவதுகூடச் சில விஷயங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.

மின்னஞ்சல் முகவரி என்பது அந்தத் தகவல் எங்கே அளிக்கப்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது. முதன் முத​லில் இந்த முறை கண்டுபிடிக்கப்ட்டபோது தகவல் அனுப்புபவரின் முகவரி, தகவல் பெறுபவரின் முகவரி இரண்டுக்குமிடையே ஒரு முக்கியமான வித்தியாசம் தேவைப்பட்டது. அதாவது பெறுபவரின் முகவரியிலுள்ள ஒரு எழுத்து அனுப்புபவரின் முகவரியில் மிக நிச்சயமாக இருக்கக் கூடாது. இதற்கு ஒரு தீர்வாகத்தான் @ மின்னஞ்சல்களில் அறிமுகமானது (ஏனென்றால் எண்களோ, எழுத்துகளோ, நிறுத்தக் குறிகளோ அனுப்புபவரின் முகவரியில் இருக்க வாய்ப்பு உண்டு).

@ குறியீட்டுக்குப் பின்னால் இருப்பது தகவல் பெறும் கணினியின் (Host computer) பெயர். @ என்பதற்கு முன்னால் இருப்பது குறிப்பிட்டவரின் தனி அடையாளம்.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x