Published : 16 Dec 2014 02:55 PM
Last Updated : 16 Dec 2014 02:55 PM
ஆசிரியர் இல்லாத வகுப்பறை ஒன்றில் இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சலசலவெனப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முன்னே இருக்கும் சாம்பல் நிறச் சுவரில் ஒரு கரும்பலகை இருக்கிறது. வகுப்பறையின் கதவு மூடப்பட்டிருக்கிறது. திடீரென வகுப்பாசிரியர் கதவைத் திறந்து வகுப்புக்குள் நுழைய, மாணவர்கள் திடுக்கிட்டுப் பேச்சை நிறுத்திவிட்டு எழுந்து நிற்கிறார்கள்.
ஆசிரியர்தான் உள்ளே வந்துவிட்டாரே எனச் சிலர் உட்காரலாம் எனச் சற்றே குனியும் போது, சைகையில் அவர்களை நிற்கும்படி சொல்கிறார் ஆசிரியர். தன் கைக் கடிகாரத்தின் நொடி முள்ளை உற்றுப்பார்க்கிறார். உடனே வகுப்பறை சுவரில் பொருத்தப்பட்டிருக்கும் ஸ்பீக்கரில் ஒரு குரல் ஒலிக்கிறது. “நான் உங்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் பேசுகிறேன். பாடம் கற்கும் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஆனால் இன்று முதல் பள்ளியில் சில மாற்றங்கள் அமலாகும் என்பதைத் தெரிவிக்கிறேன்.
இனி உங்கள் ஆசிரியர் அறிவுரை கூறுவார். அவர் சொல்வதை அப்படியே பின்பற்றுங்கள். இந்தப் பள்ளிக்கும், உங்கள் சக மாணவர்களுக்கும் பெருமை சேர்ப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். நன்றி பசங்களா!.”
2+2=5
அனைவரையும் உட்காரச் சொல்லிவிட்டு, ஒரு சாக்பீஸ் எடுத்து கரும்பலகையில் 2 + 2 = 5 என எழுதுகிறார் ஆசிரியர். எல்லா மாணவர்களும் பரபரப்படைய, ‘ச்சூ’ என அதட்டிவிட்டு, “இது தான் இன்றைய முதல் பாடம். இரண்டை இரண்டோடு கூட்டினால் ஐந்து. எல்லோரும் சொல்லுங்கள். திரும்பத் திரும்பச் சொல்லுங்கள்” என்கிறார். எல்லா மாணவர்களும் அப்படியே சொல்கிறார்கள்.
ஒருவன் மட்டும் தயக்கத்தோடு தன் கை விரல்களைத் தூக்கி, “2+2 நிச்சயமாக 4 என்று தானே நான் நினைத்தேன்” என மெல்லிய குரலில் கேட்கிறான். “நீ எதையும் யோசிக்க வேண்டிய அவசியமில்லை. 2+2=5 தான்” என மிரட்டலான குரலில் ஆசிரியர் சொல்கிறார். ஆனால் வேறொரு மாணவன் விருட்டென எழுந்து உரத்த குரலில், “எப்போதுமே 4-ஆக இருந்தது, இப்போது எப்படி 5-ஆக மாறும்?” எனக் கேட்கிறான். எரிச்சலுறும் ஆசிரியர் “யார் உனக்குப் பேச அனுமதி தந்தது? என்னையே கேள்வி கேட்கிறாயா? 2+2=5 எனச் சொல்லு” என்கிறார்.
ஆனால் அவனோ தன் சக மாணவர்கள் பக்கமாகத் திரும்பித் தன் கைவிரல்களைக் கொண்டு நான்குதான் எனச் சைகை காட்டுகிறான். ஆசிரியரிடமும் “4 என்று உங்களுக்கே தெரியும், பின்பு ஏன் சொல்ல மறுக்கிறீர்கள்?” என வாதாடுகிறான். கடும்கோபத்துடன் ஆசிரியர் வகுப்பறை விட்டு வெளியேறுகிறார்.
சிறந்த மாணவன் யார்?
அனைத்து மாணவர்களும் பதற்றமடைகிறார்கள். இப்போது மேல் வகுப்பைச் சேர்ந்த தலை சிறந்த மாணவர்கள் 3 பேரை வகுப்புக்குள் அழைத்து வருகிறார் ஆசிரியர். “நீங்கள் சொல்லுங்கள் 2 + 2 = என்ன?” விறைப்பாக நின்றபடி, முகத்தில் எந்தச் சலனமும் இன்றி அவர்கள் மூன்று பேரும் ஒரே குரலில் “சார், 5 சார்” என்கிறார்கள். “நன்று” என்கிறார் ஆசிரியர்.
கரும்பலகையில் தான் முன்பே எழுதிய ஈக்வேஷனில் 5-ஐ மட்டும் அழித்துவிட்டு இதுவரை மறுத்துப் பேசிய மாணவனிடம் “இப்போது நீ இதற்கான பதிலை எழுது” என்கிறார். இவன் கையில் சாக்பீஸ் எடுக்கிறான். மேல் வகுப்பைச் சேர்ந்த 3 மாணவர்களும் அவன் பின்னால் நின்றபடி மிஷின் கன் போல் தங்கள் கைகளை உயர்த்திப் பிடிக்கிறார்கள். “இது தான் உன் கடைசி வாய்ப்பு” என்கிறார் ஆசிரியர். இவனோ அவர்களை ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு, கரும்பலகையில் அழுத்தந்திருத்தமாக “4” என எழுதிவிட்டு வகுப்பைப் பார்த்து நிற்கிறான்.
கடைசி வாய்ப்பு
3 மாணவர்களும் மிஷின் கன் போல வைத்திருக்கும் கைகளை வேகமாக இயக்க, கரும்பலகையில் எழுதப்பட்டிருக்கும் ‘4’- ன் மேல் ரத்தம் தெறிக்கிறது. மாணவனின் உடல் தரையில் சரிந்து விழுகிறது. மாணவர்கள் அனைவரும் உறைந்துபோய் பார்க்கிறார்கள்.
“இன்னைக்கு எடுத்த பாடம் வேறு யாருக்காவது புரியவில்லையா?” என கேட்டுவிட்டு “அதை இங்கிருந்து அப்புறப்படுத்துங்கள்” என ரத்தம் வழிந்தோடியபடி கிடக்கும் மாணவன் உடலைச் சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர். மீண்டும் வகுப்பு தொடர்கிறது. கரும்பலகையில் வழிந்தோடும் ரத்தத்தை டஸ்டர் கொண்டு அழித்துவிட்டு, 2 + 2 = 5 என எழுதுகிறார் ஆசிரியர். எல்லாரும் அப்படியே நோட் புக்கில் எழுதும்படி கட்டளையிடுகிறார். எல்லோரும் 2+2 =5 என மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்லிக்கொண்டே எழுதுகிறார்கள்.
ஒரு மாணவன் மட்டும் தன் நோட்டில் 2 + 2 =5 என எழுதி, பின்பு அந்த 5-ஐ பென்சிலால் சரசரவென அடித்துவிட்டு ‘4’ என எழுதுகிறான்.
குறுக்கு விசாரணை
இது “2+2=5” எனும் இரானிய குறும்படம். கல்வி அரசியல், சமூக அரசியல் குறித்து ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகம் ஏற்படுத்த முடியாத தாக்கத்தை இந்த 7 நிமிட குறும்படம் ஏற்படுத்துகிறது. காட்சி மொழியின் வலிமை, படைப்பாளரின் காட்சி ரீதியான அறிவுத்திறன், கல்விமுறை மீதான கடும் விமர்சனம், சமூக அநீதி மற்றும் அரசியல் அடக்குமுறைக்கு எதிரான அறைகூவல் எனப் பல்வேறு படிமங்கள் இந்தத் திரை உரையில் விரிந்து கிடக்கின்றன.
ஒரு கருத்தைக் காட்சியாக மொழி பெயர்க்கும் விதம்தான் காட்சி ஊடகத்தின் மையம். ’2+2=5’ படம் அதற்கு சிறந்த உதாரணம். இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் அதிகம் பேசவில்லை. ஆனால் ஒவ்வொரு ஃபிரேமும் நம்முடன் உரையாடிக்கொண்டே இருக்கிறது. மாணவர்களின் கலகலப்பான பேச்சு, அதிரடியான ஆசிரியர், அதன் பின் நிகழும் பதறவைக்கும் சம்பவங்கள் என அனைத்தையும் ஒரு மவுன சாட்சியாக அந்த வகுப்பில் மாட்டப்பட்டிருக்கும் கரும்பலகை பார்த்துக் கொண்டே இருக்கிறது.
சாம்பல் நிறத்தில் இருக்கும் சுவர் இது உயிரோட்டமற்ற இடம் என்பதை உருவகப்படுத்துகிறது. ஆசிரியரை எதிர்த்துப் பேசும் மாணவன் கண்கள் ஒளிர்கின்றன. ஆனால் அவர் அழைத்து வரும் சிறந்த மாணவர்களின் கண்களோ அசைவற்று இருக்கின்றன. அவர்களின் உடல் அசைவு கூட புரோகிராம் செய்யப்பட்ட ரோபோவைப் போல இருக்கிறது. இப்படிக் காட்சி ரீதியாகவும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
மாற்றுக் கல்வி தேவை
“நான் சொன்னதை மட்டும் செய். நீ சுயமாக யோசிக்க வேண்டிய அவசிய மில்லை” என்னும் வார்த்தைகள் குழந்தைக்கு எதிரான வன்முறையாகும். இந்த வார்த்தைகளைப் பெருவாரியான பள்ளி ஆசிரியர்களின் உதடுகள் உச்சரிக்கின்றன. சுடர்விடும் அறிவுடன் துள்ளித்திரியும் குழந்தையின் சுயசிந்தனையை வளர்த்தெடுக்க வேண்டிய கல்விக்கூடங்கள் அவர்களின் சுயத்தை அழிக்கின்றன.
“மவுனம் காக்கவும்” என்னும் வழிமுறை குழந்தையை முறைப்படுத்தி, ஒழுங்குபடுத்தி, அமைதியை நிலை நாட்டும் வழியல்ல. அது சுய சுந்தனையை மரணப்படுக்கையில் தள்ளுவதற்குச் சமம்.
தினம் தினம் ஒரே வகுப்பில், ஒரே வரிசையில் அமர்ந்து, ஒரே பாடத்தை எல்லோரும் ஒன்றுபோல ஒரு வருடம் முழுக்கக் கற்று, அடுத்த வகுப்புக்கு முன்னேற வேண்டும் என்கிறது தற்போதைய கல்வித் திட்டம். இந்த வழக்கத்திற்கு ஒத்துப்போக முடியாத குழந்தை நசுக்கப்படுகிறது. இத்தகைய கல்விமுறைக்கு மாற்றாக ஒரு மாற்றுக் கல்விமுறை சாத்தியம் என்று நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் பன்முக அறிவுத்திறன் பற்றிய கோட்பாடு சொல்கிறது.
அதிலும் காட்சி ரீதியான அறிவுத் திறன் படைத்தவர்களுக்கு மாற்றுக் கல்விமுறை உடனடித் தேவை என்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT