Published : 09 Dec 2014 11:04 AM
Last Updated : 09 Dec 2014 11:04 AM
ஆசிரியை: சாம் ஏன் ஸ்கூலுக்கு லேட்டு?
சாம் (8 வயது): மிஸ்… நான் ஸ்கூல் பஸ்ஸை விட்டு இறங்கினேனா…அப்ப ஒரு பெரிய, அழகான சிவப்பு கலர் பலூன் மரக் கிளையில மாட்டித் தொங்கிக்கிட்டு இருந்துச்சு...
ஆசிரியை: சரி அதுக்கென்ன?
சாம்: அந்தச் சிவப்பு கலர் பலூனோட கயிற்றை எட்டிப் பிடிச்சு இழுத்தவுடனே என் கிட்ட வந்திருச்சு.
ஆசிரியை (கோபமாக): ஏன் லேட்டா வந்தேன்னு கேட்டேன்?
சாம்: கேளுங்க மிஸ்…பலூனோட கயிற்றை இறுக்கமாப் பிடிச்சுக்கிட்டு நடந்து வரும்போது, திடீருனு காத்தடிச்சதும் பலூன் நூலை விட்டுட்டேன். ஆனால் பலூன் எங்கேயும் பறந்து போகவே இல்ல. என் பக்கத்திலேயே நின்னுச்சு… எட்டிப் பிடிக்கலாம்னு பார்த்தா கைக்கு வரவே இல்லை. நான் எட்ட எட்ட பலூன் கொஞ்சம் கொஞ்சமா மேல மேல போச்சு. “என்கிட்ட வரமாட்டியா? போ” அப்படீன்னு சொல்லிட்டு நடக்க ஆரம்பிச்சேன். நான் நடக்க நடக்க என் பின்னாலேயே பலூனும் காற்றில் மிதந்து வந்துச்சு.
டக்குனு வேற தெருவுல நுழைஞ்சு மறைவா நின்னுக்கிட்டேன். பலூன் இங்கேயும் அங்கேயும் அலைஞ்சு, என்னைத் தேட ஆரம்பிச்சிடுச்சு. என்னைக் காணோம்னு பலூன் தேடிக்கிட்டிருக்கும்போது பாய்ந்து பிடிச்சிட்டேன். அப்ப ப்ரியா புளூ கலர் பலூனோட எதிரே வந்தாளா….உடனே என்னோட பலூன் திரும்பவும் என் கையைவிட்டுப் பறந்து ப்ரியாவோட பலூன் கூட விளையாட ஆரம்பிச்சிடுச்சு. சரி சொல்லிட்டு கிளாஸுக்கு வந்தேன்
ஆசிரியர்: ஒழுங்கா ஸ்கூலுக்கு வந்து படிக்கச் சொன்னா, தெரு தெருவா சுற்றி வந்து விளையாடிட்டு, பொய்யா சொல்லுற? இப்படித்தான் போன வாரம் வேற கதை சொன்ன, உன் வாயைத் திறந்தாலே பொய்தான் வரும். ‘இனிமேல் இப்படி பொய் சொல்ல மாட்டேன்’ என 1000 முறை இம்போசிஷன் எழுதிட்டு வகுப்புக்குள்ள வா.
சாம் சிவப்பு பலூன் கதை சொல்லக் காரணம் என்ன? அவன் பொய் சொல்லும் பழக்கம் உடையவன் என்பதா? அல்லது கற்பனைத் திறன் மிக்கவன் என்பதா?
றெக்கைக் கட்டிப் பறக்கும் மனசு
குழந்தைகளுக்கு கற்பனை வளம் அதிகம். அவர்கள் காணும் ஒவ்வொன்றும் புதிது என்பதால் அதனை மேலும் விரித்துப் பார்க்க மனம் தூண்டும். அதிலும் சாம் போன்றவர்கள் காட்சி ரீதியான அறிவுத்திறன் படைத்தவர்கள். மரத்தில் தொங்கும் ஒரு சிவப்பு பலூனை பார்த்தவுடன் சாம் மனம் சிலிர்த்துக் கொண்டு உற்சாகமாகச் சிறகை விரித்துக் கற்பனை வானில் பறக்கத் தொடங்கிவிட்டது.
அதன் விளைவாக ஒரு அற்புதமான குழந்தை கதைச்சித்திரம் உயிர் பெற்றது. இப்படிப்பட்ட அறிவு உடையவர்களுக்குள் காட்சி ரீதியாகப் பல விஷயங்கள் ஓடிக் கொண்டே இருக்கும். அவர்கள் எப்போதும் முப்பரிமாணங்களில் கற்பனை செய்வார்கள். பல வண்ணங்கள், பல விதமான வடிவங்களால் ஈர்க்கப்படுவார்கள். வெட்ட வெளியில் புதிய உலகை படைப்பார்கள்.
புதியதோர் உலகு செய்வோர்
காட்சி ரீதியான அறிவாற்றலை அரும்பிலிருந்தே ஊக்குவித்தால் அற்புதமான மல்டிமீடியா கலைஞர், கிராபிக்ஸ் கலைஞர், திரைப்படக் கலைஞர், நுண் கலை நிபுணர், கேலிச்சித்திர ஓவியர், கட்டிடக் கலை நிபுணர், புகைப்படக் கலைஞர், சிற்பி, ஆடை வடிவமைப்பாளர் போன்ற படைப்பாளிகள் எதிர்காலத்தில் கிடைப்பார்கள்.
ஆனால் ஒற்றைப் பரிமாணப் பார்வை கொண்ட கல்வி அமைப்பு காட்சிரீதியான அறிவுத்திறனை முளையிலேயே கிள்ளி எறிகிறது. வழக்கமான கல்வி முறையின் கணிப்பில் இவர்கள் அறிவிலிகளாக முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படுகிறார்கள். வழக்கமான அறிவாற்றல்களில் மிகவும் பின் தங்கியவர்கள்தான் உண்மையிலேயே அபாரத் திறன் படைத்தவர்கள் என்கிறார் கார்டனர். காட்சி ரீதியான அறிவுத்திறனில் நம்மை ஆச்சரியப்படுத்தும் விஷயங்கள் இன்னும் பல உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT