Last Updated : 09 Jul, 2019 11:28 AM

 

Published : 09 Jul 2019 11:28 AM
Last Updated : 09 Jul 2019 11:28 AM

கடந்த வாரம்: சேதி தெரியுமா?

சிறந்த இளம் பல்கலைக்கழகங்கள்

ஜூலை 2: உலகில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்குள் தொடங்கப்பட்ட இளம் பல்கலைக்கழகங்களில் சிறந்த 150 பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது குவாக்குவரெல்லி சைமண்ட்ஸ்(QS) நிறுவனம். முதல் 70-80 பல்கலைக்கழகப் பட்டியலில் இந்தியாவின் ஐஐடி-குவஹாத்தி இடம் பெற்றுள்ளது. 101-150 தரவரிசைப் பட்டியலில், தமிழகத்தின் அண்ணா பல்கலைக் கழகம், ஹரியாணாவின் ஜிந்தல் குளோபல் பல்கலைக்கழகம் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன.

வெப்பமயமாதலால் வேலைவாய்ப்பின்மை

ஜூலை 1: உலக வெப்பமயமாதல் காரணமாக இந்தியாவின் உற்பத்தி 2030-ம் ஆண்டுக்குள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ILO) வெளியிட்டுள்ள அறிக்கைத் தெரிவித்துள்ளது.

‘வெப்பமான கோளில் பணியாற்றுவது’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், கடுமையான வெப்பம் காரணமாக இந்தியாவின் பணி நேரம், 2030-ம் ஆண்டுக்குள் 5.8 சதவீதம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் இந்தியாவில் 3.4 கோடி முழுநேரப் பணிவாய்ப்புகளை இழக்க நேரிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

1,457 பேருக்கு 1 மருத்துவர்

ஜூலை 2: இந்தியாவின் 135 கோடி மக்கள்தொகைக்கு, 1,457 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதம் இருப்பதாக மத்திய இணை சுகாதார அமைச்சர் அஸ்வினி சவுபே மாநிலங்களவையில் தெரிவித்தார்.

உலகச் சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி, 1000 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும். நாட்டில், 11.57 லட்சம் மருத்துவர்கள்தாம் மாநில மருத்துவ கவுன்சில்கள், இந்திய மருத்துவ கவுன்சில்களில் ஜனவரி 31 வரை பதிவுசெய்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர்சேதி-தெரியுமாright

ஜூலை 2: சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த கிரிஸ்டின் லகார்த், ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தற்போது ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவராக இருக்கும் மரியோ திராகியின் பதவிக்காலம் அக்டோபர் 31 அன்றுடன் நிறைவடைவதால், புதிய தலைவராக கிரிஸ்டின் நியமிக்கப்பட்டிருக்கிறார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவராக கிரிஸ்டின் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உலகின் வலிமையான ‘பாஸ்போர்ட்’

ஜூலை 2: 2019-ம் ஆண்டுக்கான உலகின் வலிமையான கடவுச்சீட்டுப் பட்டியலை ‘ஹென்லே’ அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில், ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய இரண்டு நாடுகளின் கடவுச்சீட்டுகளும் உலகின் வலிமையான கடவுச்சீட்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

199 நாடுகள் இடம்பெற்றிருந்த இந்தப் பட்டியலில் இந்தியா 86-ம் இடத்தைப் பிடித்துள்ளது. தென் கொரியா, பின்லாந்து, ஜெர்மனி ஆகிய மூன்று நாடுகள் இரண்டாம் இடத்திலும், டென்மார்க், இத்தாலி, லுக்ஸெம்போர்க் ஆகிய மூன்று நாடுகள் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன.

நீளமான மின்சார ரயில் சுரங்கம்

ஜூலை 3: நாட்டின் நீளமான மின்மயமாக்கப்பட்ட ரயில்வே சுரங்கம் ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தின் செர்லோபள்ளி, ராபுரூ ரயில் நிலையங்களுக்கு இடையில், 6.6 கிலோமீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நீளமான மின்சார சுரங்கத்தைத் தெற்கு மத்திய ரயில்வே, ரூ. 460 கோடி செலவில்  43 மாதங்களில் கட்டிமுடித்துள்ளது. இந்தச் சுரங்கத்தால், கிருஷ்ணாபட்டினம் துறைமுகத்துக்கும், ஒபுலவரிப்பள்ளிக்கும் இடையிலான பயண நேரம் 10 மணி நேரத்திலிருந்து 5 மணி நேரமாகக் குறைந்துள்ளது. 

பள்ளிக்குச் செல்பவர்களின் சதவீதம் குறையும்

ஜூலை 4: 2019-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆய்வறிக்கையில், பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 2021 முதல் 2041-ம் ஆண்டுக்குள் 18.4 சதவீதம் குறையவிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. 5-14 வயது வரையுள்ளவர்களின் மக்கள்தொகை வரும் இருபது ஆண்டுகளில் குறையும் என்று இந்த ஆய்வறிக்கைக் கணித்துள்ளது. 

2019 மத்திய பட்ஜெட் தாக்கல்

ஜூலை 5: 2019-20 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பொதுத்துறை வங்கிகளின் முதல், கடன் மேம்பாட்டுக்காக ரூ. 70,000 கோடி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பான் அட்டை, ஆதார் அட்டை இரண்டையும் ஒன்றுக்குப் பதில் மற்றொன்றைப் பயன்படுத்தும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. கல்வியைப் பொறுத்தவரை, வெளிநாட்டு மாணவர்களை இந்தியாவில் படிக்க ஊக்குவிக்கும் ‘இந்தியாவில் படிப்போம்’ திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கையின் மூலம் பள்ளி, உயர்கல்வியில் மாற்றங்கள் செய்யப்படும். உலகத்தரமான பல்கலைக்கழகங்களை உருவாக்க 2020-ம் நிதியாண்டில் ரூ.400 கோடி ஒதுக்கப்படும். தேசிய ஆராய்ச்சி நிறுவனம், ஆராய்ச்சிகளை ஒருங்கிணைத்து, நிதி வசதி செய்துதரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் செயற்கை நுண்ணறிவு, இணையம், தரவுகள் உள்ளிட்ட புதிய திறன்களை மேம்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x