Published : 03 Nov 2014 01:21 PM
Last Updated : 03 Nov 2014 01:21 PM
சூரிய ஒளி மின்சாரம் மூலம் நிலத்தை உழும் டிராக்டரை விழுப்புரம் மயிலம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
விழுப்புரம் அருகே உள்ள மயிலம் பொறியியல் கல்லூரியில் எலக்ட் ரானிக்ஸ் அண்ட் கம்யூனி கேஷன் பிரிவில் இறுதி யாண்டு படிக்கும் மாணவர்களான வி.பிரேம் நாத், கே.சிவராமன், ஐ.வெற்றிவேல், வி.கே.அருண் ஆகியோர் இணைந்து சூரிய ஒளி மின்சாரம் மூலம் நிலத்தை உழும் டிராக்டரை கண்டுபிடித்து அக்னி என்ஜினீயரிங் கல்லூரி நடத்திய போட்டியில் முதல் பரிசை பெற்றுள்ளனர்.
விவசாயம் பிழைக்க
விவசாயத்தில் உற்பத்தி செலவு அதிகரித்ததால் பலர் விவசாயத்தை கைவிட்டு வேறு தொழில்களுக்கு மாறி வருகின்றனர். இதைத் தவிர்க்க எங்களால் முடிந்த உதவி செய்யும் வகையில், விவசாயத்தில் உள்ள இடர்பாடுகளை நானும் எனது நண்பர்களும் இந்த முயற்சியில் இறங்கினோம் என்கிறார் மாணவர் பிரேம்நாத். விழுப்புரத்தில் உள்ள தோட்டகலை இயக்குநரிடம் இது தொடர்பாக கலந்தாலோசனை நடத்தினோம்.
இதைத் தொடர்ந்து சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் டிராக்டர் தொழில்நுட்பத்தை உருவாக்க முடிவு செய்தோம். துணை பேராசிரியர் ராஜபார்த்திபனின் ஆலோசனையின்படி இதற்கான முயற்சியில் இறங்கினோம். வழக்க மான டிராக்டரோடு ஒப்பிடுகையில் நாங்கள் வடிவமைத்த டிராக்டருக்கு எரிபொருள் செலவு இல்லை. எடை குறைவாக இருப்பதால் மண்ணில் உள்ள மண்புழுக்கள் போன்ற நுண்ணுயிர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும்.
ரிமோட்
வயலின் வரப்பில் அமர்ந்து கொண்டு ரிமோட் மூலம் இந்த டிராக்டரை இயக்கலாம். நாங்கள் வடிவமைத்த டிராக்டரில் மூன்று சக்கரங்கள் இருக்கும். முன்புறம் அல்ட்ரா சென் ஸார் பொருத்தியுள்ளோம். இதனால் வயலில் கற்களோ, பாறைகளோ தென்பட்டால் வாகனம் தன் பாதையை மாற்றிக்கொள்ளும். மேலும் கலப்பை மேலே தூக்கிக் கொள்ளும்.
வாகனத்தின் மேலே சோலார் பேனல்கள் அமைத்துள்ளோம். ரிமோட் மூலம் 15 மீட்டர் தூரத்தில் இருந்து இந்த வாகனத்தை இயக்க முடியும். வழக்கமாக ஒரு டிராக்டர் தோராயமாக 2000 கிலோ எடை இருக்கும். நாங்கள் தயாரித்த டிராக்டர் 200 கிலோவுக்கு குறைவாகவே இருக்கும். இதனை தயாரிக்க ரூ.5 ஆயிரம் செலவானது.
வணிகரீதியாக இதை ரூ.1 லட்சத்தில் உருவாக்க முடியும். சோலார் பேனல்களுக்குத்தான் அதிக செலவாகும். இதை அரசு மானியத்துடன் அளித்தால் குறைந்த தொகையில் உருவாக்க முடியும் என்றார்.
விரைவில் உற்பத்தி
துணை பேராசிரியர் ராஜ பார்த்திபன் கூறும்போது: விவசாயி ஒரு ஏக்கர் நிலத்தை உழவு செய் வதற்கு டிராக்டர் வாடகை, டீசல் மற்றும் ஆள் கூலி எல்லாம் சேர்த்து சராசரியாக 3,௦௦௦ ரூபாய் செலவு ஆகிறது. இந்த இயந்திரமானது முழுவதுமாக சூரியசக்தியை மட்டுமே பயன்படுத்தி இயங்குகிறது.
எரிபொருள் ஏதும் பயன்படுத்தாதலால் சுற்று சுழல் பாதிப்பு தடுக்கப்படுகிறது. வணிகரீதியாக இதைத் தயாரிக்க ஒரு நிறுவனம் எங்களுடன் பேசியுள்ளது. அவர்களுடன் இணைந்து விரைவில் இதை விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT