Published : 29 Aug 2017 11:08 AM
Last Updated : 29 Aug 2017 11:08 AM
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து ஓராண்டு விலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு எதிர்பார்த்தது. ஆனால், இது தொடர்பான வழக்கில், ஆகஸ்ட் 22 அன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று தீர்ப்பளித்தது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.எம். கான்வில்கர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
நீட் தேர்விலிருந்து ஓராண்டு விலக்கு அளிக்கும் தமிழக அரசின் அவசரச் சட்டத்தை ஆதரிக்க முடியாது என்று மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, வேறு எந்தத் தரப்பு வாதங்களையும் அனுமதிக்காத நீதிபதிகள், “தமிழ்நாட்டில் நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு உடனடியாக நடத்தப்பட வேண்டும். செப்டம்பர் 4-ம் தேதிக்குள் கலாந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களின் தரவரிசைப் பட்டியலைத் தமிழக அரசு ஆகஸ்ட் 23 அன்று வெளியிட்டது. ஒருவேளை, செப்டம்பர் 4-க்குள் கலந்தாய்வை நடத்த இயலாவிட்டால் கூடுதல் அவகாசம் கேட்கப்படும் என்று தமிழகச் சுகாதாரத் துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தனிநபர் அந்தரங்கம் அடிப்படை உரிமை
ஆதார் தொடர்பான வழக்கில், அரசியல் சாசனச் சட்டத்தின் 21-வது பிரிவின்படி, தனிநபர் அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 24 அன்று தீர்ப்பளித்தது. “தனிநபர் அந்தரங்கம் என்பதை எளிமையாக விளக்க வேண்டுமானால், ஒவ்வொரு மனிதரையும் அவமதிக்காமல் தனியாக இருக்க அனுமதிப்பதாகும்” என்று உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது.
தலைமை நீதிபதி ஜெ.எஸ். கேஹர் உள்ளிட்ட ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தனிநபர் அந்தரங்கம் சார்ந்த இந்த முக்கியமான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. 547 பக்கங்களில் வெளியாகியிருக்கும் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, தனிமனிதச் சுதந்திரங்களான உணவு பழக்கம், பாலியல் தேர்வு உள்ளிட்டவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு, நலத் திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், தனிநபர் அந்தரங்கம் அடிப்படை உரிமை என்ற தீர்ப்பை வழங்கி உள்ளனர். ஆனால், ஆதார் பிரச்சினையை 2015-ம் ஆண்டிலிருந்து உச்ச நீதிமன்றத் தனி அமர்வு விசாரித்துக்கொண்டிருப்பதால், இந்த அமர்வு ஆதார் பிரச்சினையை நேரடியாகப் பேசவில்லை. இந்த அமர்வில் தலைமை நீதிபதியுடன், நீதிபதிகள் ஜெ. சலமேஸ்வர், எஸ்.ஏ. போப்டே, ஆர்.கே. அகர்வால், ஆர்.எஃப். நரிமன், ஏ.எம். சப்ரே, டி.ஒய். சந்திரசூட், எஸ்.கே. கவுல், எஸ். அப்துல் நஸீர் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்தி தேசிய மொழியாக முடியாது: சித்தராமையா
கர்நாடக முதல்வர் சித்தராமையா இந்தி மொழியை மற்ற மாநிலங்கள் மீது திணிக்க முடியாது, நாட்டின் தேசிய மொழி இந்தி அல்ல என்றும் தெரிவித்திருக்கிறார்.
பாஜகவை மதவாதக் கட்சி என்று தெரிவித்திருக்கும் அவர், இந்தக் கட்சி நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை அழித்துவருவதாகவும் சொல்லியிருக்கிறார். கர்நாடகாவில் இந்தி பயன்பாட்டை எதிர்த்து நடைபெற்றுவரும் போராட்டங்கள், கர்நாடக மாநிலத்தின் தனிக் கொடி தேவையை வலியுறுத்தும்போது இந்தக் கருத்துகளை அவர் தெரிவித்தார்.
“இந்தி மொழியைத் திணிக்க முடியாது. அந்த மொழியைக் கற்பதா, வேண்டாமா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். இந்தி தேசிய மொழி அல்ல, அப்படி ஆகவும் முடியாது. நாட்டிலிருக்கும் மொழிகளில் அதுவும் ஒன்று. நான், எந்த மொழியைக் கற்பதையும் எதிர்க்கவில்லை.
ஆனால், அதை மக்கள்மீது திணிக்காதீர்கள்” என்று ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
ரயில்வே வாரியத்தின் புதிய தலைவர்
ரயில்வே வாரியத்தின் புதிய தலைவராக அஷ்வனி லோஹானி, ஆகஸ்ட் 24 அன்று பொறுப்பேற்றார். உத்தரப்பிரதேசத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த கைஃபியத் எக்ஸ்பிரஸ், கலிங்கா உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துகளுக்குப் பொறுப்பேற்று ஆகஸ்ட் 23 அன்று ரயில்வே வாரிய தலைவர் ஏ.கே. மிட்டல் ராஜினாமா செய்தார். இந்நிலையில், ரயில்வே வாரியத்தின் புதிய தலைவராக ஏர் இந்தியா இயக்குநர் அஷ்வனி லோஹானி உடனடியாக நியமிக்கப்பட்டார்.
"பயணிகளின் பாதுகாப்பு, ரயில் நிலையங்களை நவீனப்படுத்துவது ஆகியவற்றுக்கே முன்னுரிமை தருவேன். சுகாதாரம், ஊழல் ஒழிப்பு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்" என்று அஷ்வனி லோஹானி தெரிவித்தார். இந்த இரண்டு ரயில் விபத்துகளுக்குப் பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவும் ராஜினாமா செய்ய முன்வந்தார். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி அவருடைய ராஜினாமாவை ஏற்க மறுத்தார்.
ஆகஸ்ட் 19 அன்று, நிகழ்ந்த கலிங்கா உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 24-ல் நிகழ்ந்த கைஃபியத் எக்ஸ்பிரஸ் விபத்தில் 70 பேர் காயமடைந்தனர்.
மோடி அரசு பதவியேற்றபின், நடந்த 27 பெரிய ரயில் விபத்துகளில் 259 பயணிகள் உயிரிழந்திருப்பதாக மத்திய அரசின்மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியிருக்கிறது.
இன்ஃபோசிஸுக்குப் புதிய தலைவர்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் செயல் இயக்குநரும் இணை நிறுவனருமான நந்தன் நிலேகணி 8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவராக ஆகஸ்ட் 25 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் அல்லாத முதல் தலைமைச் செயல் அதிகாரியான விஷால் சிக்கா, தனது பதவியை ஆகஸ்ட் 18 அன்று ராஜினாமா செய்தார்.
விஷால் சிக்காவின் ராஜினாமாவுக்கு நிறுவனர் நாராயண மூர்த்திதான் காரணம் என்று இன்ஃபோசிஸ் நிர்வாகக் குழு குற்றம்சாட்டியது. இதையடுத்து, இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் நெருக்கடியான சூழல் உருவானது. அந்நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் குறையத் தொடங்கின. இந்நிலையில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சவாலான சூழலை நந்தன் நிலேகணி திறம்பட நிர்வகிப்பார் என்று அதன் முதலீட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.
பழமையான திரிகோணமிதி அட்டவணை
3,700 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாபிலோனிய திரிகோணமிதி அட்டவணைதான் உலகின் பழமையான திரிகோணமிதி அட்டவணை என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். ஆகஸ்ட் 24 அன்று, இணையத்தில் வெளியான ஹிஸ்டோரியா மேத்தமெட்டிகா இதழில் இது தொடர்பான கண்டுபிடிப்பு வெளியாகியிருக்கிறது. 1900-களின் தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த அட்டவணை முதன்முதலாக 1945-ம் ஆண்டில்தான் விளக்கப்பட்டது.
கணிதவியலாளர்களின் ஆர்வத்தை நீண்ட காலமாகத் தூண்டிவந்த இந்த அட்டவணையில் இடம்பெற்றிருந்த முக்கோணங்கள் திரிகோணமிதியுடன் தொடர்புடையவை என்று சமீபத்தில் நடைபெற்ற ஆராய்ச்சியில்தான் தெரியவந்திருக்கிறது. கி.மு. 120-ல் வாழ்ந்த கிரேக்க வானியலாளர் ஹிப்பர்கஸ்தான் திரிகோணமிதி உருவாக்கத்தில் தொடர்புடையவர் என்று இதுவரை நம்பப்பட்டது.
இந்த ஆராய்ச்சி முடிவுகள், பண்டைய கிரேக்கர்கள்தான் திரிகோணமிதியை முதன்முதலாகக் கண்டுபிடித்தனர் என்ற கருத்தை உடைத்திருக்கிறது. பாபிலோனியர்களே திரிகோணமிதியைக் கண்டுபிடித்தவர்கள் என்று இந்த ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. பிலிம்ப்டன் 322 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த அட்டவணை 5 அங்குல நீளத்துடனும், 3.5 அங்குல அகலத்துடன் இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT