Published : 27 Jun 2017 11:06 AM
Last Updated : 27 Jun 2017 11:06 AM
சிலம்பரசன் என்னும் பெயரில் பல மாணவர்கள் என்னிடம் படித்திருக்கிறார்கள். டி.ராஜேந்தர் நம் சமூகத்துக்கு அளித்த பெயர். தம் மகனுக்கு அவர் சிலம்பரசன் என்று பெயர் சூட்டி அவரைக் குழந்தை நட்சத்திரமாகத் திரைப்படத்தில் அறிமுகப்படுத்திய பிறகே இந்தப் பெயர் தமிழ்ச் சமூகத்தை ஆட்கொண்டது. ஆண்டுதோறும் வரும் சிலம்பரசன்களை வேறுபடுத்திக்கொள்ள ஏதாவது ஓர் உத்தியைக் கையாளத்தான் வேண்டும். அதற்குப் பட்டப்பெயர் கொஞ்சம் உதவும். என்னிடம் பயின்ற ஒருவர் ‘சிலுப்பி சிலம்பரசன்.’
மாணவர்களுக்கு உதவித்தொகை வரவில்லை என ஒருமுறை மாணவர்கள் வகுப்பைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்தினர். அதில் முன்னணியில் ஐந்தாறு பேர் நின்றனர். அவர்களில் ஒருவர் சிலம்பரசன். யார் யார் என அடையாளம் காணப்பட்டு அவர்களை எல்லாம் அழைத்துக் கல்லூரி முதல்வர் அறையில் விசாரணை நடந்தது. அன்றைக்குத் துறைத் தலைவர் பொறுப்பில் இருந்ததால் சிலம்பரசனை அழைத்துச் சென்றேன்.
தலைமைப் பண்பை வளர்க்க வாய்ப்பில்லை
சிலம்பரசனுக்குத் தாய் தந்தை இருவருமே இல்லை. இளவயது முதலே பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவர். வேலைக்குச் சென்று சுயமாகச் சம்பாதித்துக்கொண்டே படித்தார். வகுப்புக்குத் தவறாமல் வந்துவிடுவார். உழைப்பிலும் கெட்டி. சம்பாத்தியத்தை நிலைப்படுத்துவதிலும் கெட்டி. படிப்பிலும் நல்ல ஈடுபாடு உள்ளவர். வேலை நிமித்தமாக வெளியுலகப் பழக்கம் நிறைந்தவர் என்பதால் எல்லாரிடமும் மிகவும் இயல்பாகப் பேசுவார். பொது வேலையை எடுத்துச் செய்வதிலும் நல்ல ஆர்வம் உடையவர்.
அவரது தலைமைப் பண்பை வளர்ப்பதற்கேற்ற வாய்ப்புத்தான் இல்லை. அதனால்தான் நான்கு பேருக்கு முன்னால் தலைவனாக நிற்கும் ஆசையில் முன்னணிப் படையில் ஒருவராகிவிட்டாரே தவிர, அவருக்குப் போராட்ட ஆசையெல்லாம் இல்லை. முன்கூட்டியே சொல்லி அழைத்துச்சென்றேன். “என்ன திட்டினாலும் மெரட்டுனாலும் பதில் பேசக் கூடாது. இனிமே செய்ய மாட்டேன் அப்படீன்னு மட்டும் சொல்லு போதும்” என்பதுதான் ஆலோசனை. விசாரணையின்போது ஒன்றும் பிரச்சினை இல்லை. நான் சொன்னபடியே சிலம்பரசன் நடந்துகொண்டார்.
நெருடல் ஏற்பட்டுவிட்டது
நானும் பரிந்து பேசினேன். எல்லாம் சுமுகமாகப் போய்க்கொண்டிருந்தது. எச்சரித்து அனுப்பிவிடுவார்கள் என்ற நிலையில் சின்னக் காரியம் ஒன்றைச் செய்தார். தலையில் அடர்ந்த முடி உடையவர் அவர். வலது ஓரமுடி கற்றையாக இறங்கிப் பக்க நெற்றியை முழுக்க மறைத்துக் காற்றிலாடிக் கொண்டிருக்கும். சில சமயம் அது கண் பக்கம் வந்து நெருடித் தொந்தரவு கொடுக்கும். முதல்வர் அறையில் தலையை லேசாகக் குனிந்து நின்றுகொண்டிருந்தவர் சற்றே நிமிர்ந்தபோது அப்படி ஒரு நெருடல் ஏற்பட்டுவிட்டது.
அவர் கழுத்தை ஒருச்சாய்த்துத் தலையைத் தூக்கி அசைத்தால் முடி கண்ணை விட்டுக் கொஞ்சம் மேலே போய்விடும். இது அவரது வழக்கமான செயல். முதல்வர் அறையிலும் அப்படித் தலையைத் தூக்கி முடியை மேலேற்றினார். அதுவரைக்கும் சாதகமாகப் போய்க்கொண்டிருந்த பேச்சுவார்த்தை, அந்த ஒரே ஒரு தூக்கலில் அப்படியே குலைந்து பாதகமாகிவிட்டது. அந்தத் தூக்கலை முதல்வர் நேராகப் பார்த்துவிட்டார். அவரை அவமதிக்கும் விதமாகவும் “என்னை நீ என்ன செய்துவிட முடியும்” என்று சவால்விடும் தன்மையிலும்தான் அந்தத் தூக்கல் நிகழ்ந்தது என்று முதல்வர் கருதிக்கொண்டார்.
சட்டென்று ஒரு தந்திரம்
கோபத்தோடு “பாருங்க, இவ்வளவு பேசிக்கிட்டு இருக்கறம், தலைய என்ன சிலுப்புச் சிலுப்பறான் பாருங்க. இவனயெல்லாம் டிசி குடுத்து அனுப்புனாத்தான் காலேஜ் உருப்படும்” என்று முதல்வர் கர்ஜித்தார். சிலம்பரசனின் மேனரிசம் எனக்கு ஏற்கெனவே தெரியும் என்பதால், நான் அவ்விதம் பொருள் கொள்ளவில்லை. அதைப் பற்றி முதல்வரிடம் அந்தச் சூழலில் விளக்கிப் புரியவைக்கவும் முடியாது. ஆனால், பையனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும். சட்டென்று எனக்குள் ஒரு தந்திரம் உதித்தது.
பொய்க் கோபத்தோடு சிலம்பரசனை வேகமாகத் திட்டத் தொடங்கினேன். “என்னத்துக்கு உனக்கு இத்தன முடி. மொதல்ல இன்னைக்கிப் போய் முடி வெட்டிக்க. நாளைக்கு முடி வெட்டிக்கிட்டுத்தான் காலேஜ்குள்ள வரணும். இந்த மாதிரி தலயச் சிலுப்பிக்கிட்டு நின்னயினா நானே டிசி குடுக்கச் சொல்லீருவன் போ” என்று என் திட்டல், அவரை அனுப்பும் “போ” என்பதுடன் முடிந்தது. அவரும் அங்கிருந்து எப்போது வெளியேறலாம் என்னும் எதிர்பார்ப்புடனும் தவிப்புடனும் நின்று கொண்டிருந்தவர்தான். ஆகவே, உடனே வெளியேறிவிட்டார். இன்னும் கொஞ்சம் கூடுதலாகத் திட்டி முதல்வரைச் சாந்தப்படுத்த நேர்ந்தது. “இனிமே அவனால எந்தப் பிரச்சினையும் இல்லாத நான் பாத்துக்கறன்” என்று உறுதிகொடுத்துவிட்டு வந்தேன்.
- சிலம்பரசன்
எங்க அந்தச் சிலுப்பி?
முதல்வர் அறையில் சிலம்பரசன் தலையைச் சிலுப்பிய காட்சியே எனக்குள் நிலைத்துப் பெரும்சிரிப்பை உண்டாக்கிற்று. வகுப்புக்கு வந்து “எங்க அந்தச் சிலுப்பி?” என்றேன். மாணவர்களுக்கும் சிரிப்பு. “முதல்வர் அறையில தலயச் சிலுப்புனயே அப்படி இன்னொருக்காச் சிலுப்பிக் காட்டு” என்றேன். வெட்கம் முகம் முழுக்கப் படர்ந்தது. மாணவர்கள் எல்லாரும் “நல்லாச் சிலுப்புவாங்கய்யா. அங்கயும் வந்து சிலுப்பிட்டானா? டேய், இன்னொருக்காச் சிலுப்புடா” என்று அவனை ஓட்டினார்கள்.
அன்றைக்கு முதல் அவர் ‘சிலுப்பி சிலம்பரசன்’ ஆகிவிட்டார். சிலுப்ப வாகான முடியை அவர் வெட்டிக்கொள்வாரா? நானும் வெட்டச் சொல்லிக் கட்டாயப்படுத்தவில்லை. “கொஞ்ச நாளுக்கு முதல்வர் கண்ணுல பட்றாம இருந்துக்கோ” என்றேன். “சரிங்கய்யா” என்று நிமிர்ந்தார் தலையைச் சிலுப்பி.
பெருமாள் முருகன், எழுத்தாளர்,
தமிழ்ப் பேராசிரியர்
தொடர்புக்கு: murugutcd@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT