Last Updated : 25 Apr, 2017 11:12 AM

 

Published : 25 Apr 2017 11:12 AM
Last Updated : 25 Apr 2017 11:12 AM

நினைப்பதெல்லாம் தெரிந்துவிட்டால்!

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பர்க் அவருடைய மனைவி பிரிஸில்லாவோடு சேர்ந்து மோமோ (சீன உணவு) சமைத்துக்கொண்டிருக்கும் ஒரு படம் கடந்த வாரம் வாட்ஸப்பில் வைரலானது. “நம்மை எல்லாம் ஃபேஸ்புக்குக்கு அடிமையாக்கிவிட்டுத் தன்னுடைய குடும்பத்தோடு இனிமையாக நேரம் கழிக்கிறார் மார்க்” என்கிற கமெண்ட் டோடு அந்தப் படம் உலாவியது.

மூளையோடு இணைக்கப்படும் கணினி

இது கிண்டலாகத் தோன்றினாலும், நல்லதற்கோ கெட்டதற்கோ இணையத்தில் இயங்கும் பெரும்பாலோரை ஃபேஸ்புக் கட்டிப்போட்டிருப்பது என்னவோ நிஜம். இந்நிலையில் தன் வீச்சை இன்னும் விரிவுபடுத்த பல நடவடிக்கைகளை ஃபேஸ்புக் நிறுவனம் எடுத்துவருகிறது. அதில் ஒன்று கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த ரெஜினா டுகானை ஃபேஸ்புக்கில் பணியமர்த்தியது. அதன் அடிப்படை நோக்கம், மென்மேலும் பலரை இணைய உலகத்துக்குள் இழுத்துவந்து ஃபேஸ்புக் பயனாளிகளாக அவர்களை மாற்றுவதுதான். இதில் ரெஜினாவின் பங்கு என்ன?

கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோஸ் நகரில் சர்வதேசச் சமூக வலைதளங்களின் ஜாம்பவான்களை ஒருங்கிணைத்து கடந்த புதன்கிழமை மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற மார்க் ஸூக்கர்பர்க், “இனி உங்கள் மனதில் நினைப்பதை நேரடியாகத் தட்டச்சிடலாம். விரல்களைக் கொண்டு தட்டச்சிடுவதைவிடவும் இது அதிவேகமாக இருக்கும். இதற்காக மூளைக்கும் கணினிக்கும் இடையில் ஒரு தொடர்பு ஏற்படுத்தப்படும்” என அறிவித்தார்.

மவுன மொழி

அவரைத் தொடர்ந்து ‘பில்டிங் 8’ (Building 8) என்கிற அந்தப் புதிய தொடர்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் உறையவைத்தார் அதை உருவாக்கிய ரெஜினா டுகான். இவர் 2012-ல் கூகுளில் இணைவதற்கு முன்னால், அமெரிக்க ராணுவ உயர் ஆய்வு திட்ட நிறுவனத்தில் (DARPA) பணியாற்றியவர்.

எடுத்த எடுப்பில் ரெஜினா கேட்ட கேள்வி, “உங்களுடைய மூளையிலிருந்து நேரடியாக டைப் பண்ண முடிந்தால் எப்படியிருக்கும்?”. அதை அடுத்து, செயலற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் சென்சார் சிகிச்சை மூலமாகத் தட்டச்சிடும் வீடியோவை திரையில் அவர் காட்டினார். எந்த அறுவைசிகிச்சையும் இன்றி, எந்தவிதமான கருவிகளையும் உங்களுடைய உடலில் பொருத்தாமலே இதைச் சாத்தியமாக்க முயற்சிக்கிறது ஃபேஸ்புக் எனப் பெருமையாக அவர் அறிவித்தார்.

“ஒரே நிமிடத்தில் 100 வார்த்தைகளைத் தட்டச்சிடும் அளவுக்கு அதி சக்திவாய்ந்த மவுனப் பேச்சு அமைப்பை (silent speech system) உருவாக்குவதுதான் எங்களுடைய குறிக்கோள். உங்களுடைய ஸ்மார்ட் ஃபோனில் தற்போது நீங்கள் தட்டச்சிடுவதைவிடவும், ஐந்து மடங்கு வேகமாக இது செயல்படும்,“ என்கிறார் ரெஜினா. அதைத் தொடர்ந்து, நரம்பு மண்டலத்தை வாசித்து அவற்றை டிஜிட்டல் சிக்னலாக மொழிபெயர்க்கும் தொழில்நுட்பத்தின் செயல்முறை விளக்கம் காட்டப்பட்டது.

சுதந்திரத்துக்குள் ஊடுருவலா?

வெறும் ஆறு மாதங்களுக்கு முன்பாகத் தொடங்கப்பட்டதுதான் ‘பில்டிங் 8’ ஆய்வு. அது வெற்றிகரமாக முன்னேறுவதால் கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு இயற்பியல் சோதனைக்கூடம், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவ மையம் ஆகியவை இப்போது ஃபேஸ்புக்கோடு கைகோத்துள்ளன. தற்போது இயந்திரங்களைக் கொண்டு மொழியையும் பேச்சையும் மென்தகவல்களாக மாற்றும் ஆராய்ச்சியாளர்கள், விழி நரம்பு மண்டலத்தில் ஆய்வு மேற்கொள்பவர்கள், செயற்கை நரம்பு மண்டலம் குறித்த ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஒரு விஷயத்தை யோசித்தாலே போதும் கருவியில் தட்டச்சாக்கும் என்பது ஹாலிவுட் சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களில் மட்டுமே இதுவரை பார்த்த ஒன்று. ஒருவருடைய சிந்தனை ஓட்டத்தில் உள்ள அத்தனை விஷயங்களையும் ஒரு தொழில்நுட்பச் சாதனத்தால் கிரகித்துவிட முடியும் என்பது ஆச்சரியமூட்டும் அதேவேளையில், கூடவே அதிர்ச்சியூட்டவும் செய்கிறது. இது தனிமனிதச் சுதந்திரத்துக்குள் ஊடுருவுவதாக மாறிவிடாதா?

“நிச்சயமாக இல்லை” என்ன இப்போதே சொல்லிவிட்டது ஃபேஸ்புக் நிறுவனம். “உங்களுடைய சிந்தனைகளை எல்லாம் டீகோட் செய்வது இதன் நோக்கம் அல்ல. நீங்கள் சொல்ல நினைத்ததை மட்டும்தான் இது டிஜிட்டல் திரைக்குக் கொண்டுவரும். எப்படிப் பல ஒளிப்படங்களை கிளிக் செய்தாலும்கூட உங்களுக்குப் பிடித்ததை மட்டும்தான் ஷேர் செய்கிறீர்களோ, அதுபோலதான் இதுவும்” என விளக்கம் அளிக்கிறது.

எழுத்தின் எதிர்காலம்?

அதிநவீனத் தொழில்நுட்பச் சாதனங்களை முற்றிலும் மறுதலிப்பது சாத்தியமற்றது. அதேநேரத்தில் அவற்றின் பயன்பாட்டு எல்லையை ஒவ்வொரு முறையும் தெளிவாக வகுத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

புதிய கண்டுபிடிப்போ தொழில்நுட்ப வளர்ச்சியோ ஏற்படும்போதெல்லாம், இப்படி தனிமனிதச் சுதந்திர எல்லைக்குள் ஊடுருவுவது தொடர்பான அச்சங்கள் எழவே செய்கின்றன. புதியவற்றை ஏற்க மறுக்கும் மனப்பான்மை இல்லை என்று இதைச் சொல்லிவிட முடியாது. நாம் தற்போது எட்டியுள்ள வளர்ச்சியை அது அபகரித்துவிடக் கூடாதே என்கிற எச்சரிக்கை உணர்வு அதில் அடங்கி உள்ளது. தனிமனிதச் சுதந்திரத்துக்குள் ‘பில்டிங் 8’ ஊடுருவுமோ இல்லையோ ஒன்று நிச்சயம். ஏற்கெனவே மொழியின் பயன்பாடு நாளுக்கு நாள் சிதைந்துகொண்டே போகிறது. மொழியின் இலக்கணத்தை மறந்து வார்த்தைகளை உடைத்து இஷ்டத்துக்கு எழுதும் எஸ்.எம்.எஸ். லிங்கோ (SMS lingo) ஏற்கெனவே வந்துவிட்டது. அதையும் தாண்டி உணர்வுகளை வெளிப்படுத்தும் வடிவங்களான எமோஜிக்கள் (Emojis) ஸ்மார்ட்ஃபோனிலும் கணினியிலும் எழுத்து மொழியின் பயன்பாட்டை அரிதாக்கிவிட்டன.

ரெஜினா டுகான்

இப்படியிருக்க, மூளையிலிருந்து நேரடியாக வார்த்தைகளைக் கிரகித்து எழுதும் டிஜிட்டல் தொழில்நுட்பமும் எதிர்காலத்தில் வரப்போகிறது என்றால், மொழியின் எழுத்து வடிவம் என்னவாகும்?



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x