Published : 22 Dec 2013 12:00 AM
Last Updated : 22 Dec 2013 12:00 AM

ஊடகங்களில் சாதிக்க உதவும் படிப்புகள்

பிளஸ் 2 வகுப்பில் வணிகவியல், அறிவியல் என இரு பிரிவுகளில் படித்தவர்களும் பி.எஸ்சி. விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கலாம். மூன்றாண்டு ஆங்கிலவழிக் கல்வி பட்டப் படிப்பு இது. செய்தி ஊடகம், சினிமா, வெப்-டிசைன், புகைப்படத் துறை, விளம்பரத் துறை ஆகியவை வளர்ச்சிப் பாதையில் செல்வதால், இப்படிப்பு மாணவர்களின் சிறந்த தேர்வாக அமையும். பிளஸ் 2 வகுப்பில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் இதற்கு இடம் ஒதுக்கப்படுகிறது. சில கல்லூரிகளில் நுழைவுத் தேர்வும் உண்டு. இதில் 60 சதவீதம் பயிற்சிக் கல்வி என்பதால், தமிழ்வழிக் கல்வி மாணவர்களும் எளிதில் தேறலாம்.

இதில் வெப் டிசைனிங், கிராஃபிக்ஸ் டிசைனிங், பிரின்ட்டிங் பப்ளிகேஷன், மல்டி மீடியா, அட்வர்டைசிங், போட்டோகிராஃபி, சவுண்ட் டெக்னாலஜி, வீடியோகிராஃபி உள்ளிட்டவை கற்பிக்கப்படுகின்றன. பொதுவாக பிளஸ் 2-வில் வணிகவியல் பிரிவு படித்தவர்களுக்கு, அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க முடியாதே என்ற ஏக்கம் இருக்கும்.

ஆனால், அவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேரடியாக ஐந்தாண்டு படிப்பான எம்.எஸ்சி. எலக்ட்ரானிக் மீடியா பட்டப் படிப்பு படிக்கலாம். இது பலருக்கும் தெரியாது. எலக்ட்ரானிக் மீடியாவின் ஆதிக்கம் சர்வதேச அளவில் வளர்ச்சி கண்டு வரும் நிலையில், இதைப் படிப்பவர்களுக்கு சிறந்த எதிர்காலம் நிச்சயம்.

பிளஸ் 2 வகுப்பில் எந்தப் பிரிவு படித்த மாணவர்களும், பி.ஏ. இதழியல் (ஜர்னலிசம்) படிக்கலாம். பிரின்டிங் மீடியாவும் விஷுவல் மீடியாவும் பெரும் வளர்ச்சி கண்டுவரும் நிலையில், இதை படிப்பவர்களுக்கான வேலைவாய்ப்பு கூடுதலாக இருக்கிறது.

ஆங்கில மொழித் தொடர்பு, டிசைனிங் பிரின்ட்டிங், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், எடிட்டிங் விஷுவல் கம்யூனிகேஷன், ஸ்போர்ட்ஸ் ஜர்னலிசம், போட்டோகிராஃபிக் பிரின்டிங் உள்ளிட்டவை இதில் கற்பிக்கப்படுகின்றன. சினிமா, டி.வி. நிகழ்ச்சி, எஃப்.எம். என தற்போது மீடியாவில் பெண்கள் பெருமளவு சாதிக்கிறார்கள். எனவே, பெண்களும் இதைத் தேர்வு செய்து ஆர்வத்துடன் படித்தால் மீடியா துறையில் சாதனை படைக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x