Published : 28 Jan 2014 12:00 AM
Last Updated : 28 Jan 2014 12:00 AM
தொழில்நுட்பக் கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகளில் கூட்டுச்சேர்ந்து செயல்படுவது தொடர்பாக ஆஸ்திரேலியாவின் டீக்கின் பல்கலைக்கழகத்துடன் சென்னை ஐ.ஐ.டி. புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ஐ.ஐ.டி.யில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
டீக்கின் பல்கலைக்கழகம் சார்பில் அதன் துணைவேந்தர் ஜேன் டென் ஹாலந்தரும், ஐ.ஐ.டி. சார்பில் அதன் இயக்குநர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தியும் ஒப்பந்த ஆவணங்களை பரஸ்பரம் பரிமாறிக்கொண்டனர்.
ஐ.ஐ.டி. மாணவர்கள் டீக்கின் பல்கலைக்கழகத்துக்குச் சென்று கல்வி பயில்வர். ஆராய்ச்சியிலும் ஈடுபடுவர். இதேபோல், டீக்கின்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள் ஐ.ஐ.டி.யில் படிக்க வருவார்கள். ஆராய்ச்சியிலும் ஈடுபடுவார்கள்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து ஐ.ஐ.டி. இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி கூறுகை யில், “கல்வி ஆராய்ச்சி தொடர்பாக உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களுடன் ஐ.ஐ.டி. இதுபோன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. டீக்கின் பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இரு தரப்பிலும் 5 மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.
ஆய்வு
ஏற்கெனவே பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி மாணவர்கள் இங்கு ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.
டீக்கின் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜேன் கூறுகையில், “முதல்கட்டமாக மெட்டீரியல் இன்ஜினீயரிங் மற்றும் உற்பத்தி துறையிலும் தொடர்ந்து எரிசக்தி, நீர் மேலாண்மை, எஃகு, பயோ-மெடிக்கல் உள்ளிட்ட துறைகளில் கூட்டுமுயற்சி மேற்கொள்ளப்படும்” என்று குறிப்பிட்டார். ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில், ஐ.ஐ.டி. சர்வதேச மற்றும் பழைய மாணவர்கள் விவகாரப்பிரிவு டீன் பேராசிரியர் ஆர்.நாகராஜன், டீக்கின்ஸ் பல்கலைக்கழக இணை துணைவேந்தர் கேரி ஸ்மித், பேராசிரியர் பீட்டர் ஹாக்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT