Published : 04 Jun 2016 01:26 PM
Last Updated : 04 Jun 2016 01:26 PM
நீங்கள் சைக்கிள் பிரியராக இருந்தால், உங்கள் வீட்டின் அலங்காரத்திலும் அதை அழகாகப் பிரதிபலிக்க முடியும். சைக்கிள் மட்டுமல்லாமல் மோட்டார் பைக், கார் என உங்களுக்குப் பிடித்த எந்த ஒரு வாகனத்தை வைத்தும் ஒரு புதுமையான வீட்டு அலங்காரத்தை வடிவமைக்க முடியும். ‘சைக்கிள்’கருப்பொருளில் முழு வீட்டையும் வடிவமைக்க உங்கள் வீட்டில் இருக்கும் மற்ற நபர்களுக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம்.
அப்படியிருந்தால், உங்கள் அறையை மட்டும் மிக எளிமையான வழிகளில் ‘சைக்கிள்’ கருப்பொருளாக வைத்து வடிவமைக்க முடியும்.
வீட்டின் சுவர்களிலிருந்து இந்த அலங்காரத்தைத் தொடங்கலாம். சைக்கிள் சக்கரங்களை வீட்டின் சுவர்களில் பொருத்தி ஒரு வித்தியாசமான சுவர் அலங்காரத்தை உருவாக்க முடியும்.
பல சக்கரங்களை ஒன்றாக இணைத்து ஒரு ‘3டி கொலாஜ்’ சுவர் வடிவமைப்பை உருவாக்கலாம். அதே மாதிரி, சர்வேதச சைக்கிள் போட்டிகளைப் பற்றிய பத்திரிகைகளையோ, படங்களையோ நீங்கள் சேகரித்து வைத்திருந்தால் அவற்றை ஃப்ரேம் செய்து படங்களாகச் சுவரில் மாட்டலாம்.
சைக்கிள் சக்கரங்கள் போன்ற பெரிய பொருட்களை வைத்து வடிவமைக்க விருப்பமில்லாதவர்கள், சின்ன சின்ன பொருட்களை வைத்து வடிவமைக்கலாம். உதாரணமாக, சைக்கிள் வடிவமைப்பில் இருக்கும் மேசை கடிகாரத்தை வாங்கலாம். இந்த ‘சைக்கிள்’ கடிகாரங்கள் ஆன்லைன் ஸ்டோர்களிலேயே கிடைக்கின்றன.
‘சைக்கிள்’ அச்சடிக்கப்பட்டிருக்கும் திரைச்சீலைகள், தலையணைகள் போன்றவையும் இப்போது கிடைக்கின்றன. இவை அறைக்கு ஒரு முழுமையான ‘சைக்கிள்’ வடிவமைப்பு தோற்றத்தைக் கொடுக்க உதவும்.
உங்களுக்குக் கலைப்பொருட்கள் மீது ஆர்வமிருந்தால், விதவிதமான சைக்கிள் ஓவியங்களை வாங்கி அறையில் வைத்து அலங்கரிக்கலாம். இந்த வகையான ஓவியங்கள் இப்போது ‘கிராஃபிக்’ வடிவமைப்பிலும் கிடைக்கின்றன. உங்களுடைய ‘பட்ஜெட்’ ஒத்துழைத்தால் இந்த சைக்கிள் கருப்பொருளில் சுவரோவியங்கள், புடைப்புச் சிற்பங்கள் போன்றவற்றையும் வடிவமைக்கமுடியும்.
சைக்கிளின் சக்கரங்களை வைத்தே ஒரு மேசை, நாற்காலியை வடிவமைக்க முடியும். இதற்கு நேரமில்லையென்று நினைப்பவர்கள் ‘சைக்கிள்’ அச்சடிக்கப்பட்டிருக்கும் நாற்காலியை வாங்கலாம்.
அப்படியில்லாவிட்டால் மரத்திலேயே சைக்கிள் சக்கரங்களின் வடிவமைப்பை உருவாக்கி அதன் மேல் ஒரு மரப்பலகையைப் பொருத்தி எளிமையாக ‘சைக்கிள்’ மேசையை உருவாக்கலாம். சக்கரங்களில் மேல் கண்ணாடி பலகையைப் பொருத்தினால் அதே ‘காஃபி’ மேசையாகப் பயன்படுத்தலாம்.
சக்கரம் மட்டுமல்லாமல் சைக்கிள் எல்லா பாகங்களையும் வீட்டில் இந்த மாதிரி அலங்காரத்துக்குப் பயன்படுத்த முடியும். உதாரணத்துக்கு ‘ஹேண்டில் பார்’யை மட்டும் தனியாகச் சுவரில் பொருத்தி அதைத் துணிகள் மாட்டுவதற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இது எதுவும் ஒத்துவரவில்லையென் றால், ஒரு சைக்கிளை வாங்கி அறையின் சுவரில் கட்டி தொங்கவிட்டுவிடலாம். இது மற்ற சின்னச் சின்ன பொருட்களுடன் சேர்ந்து ‘சைக்கிள்’ கருப்பொருள் அறையின் தோற்றத்தை முழுமையடையச் செய்துவிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment