Published : 16 Dec 2013 12:00 AM
Last Updated : 16 Dec 2013 12:00 AM
சூரியனின் முக்கியத்துவத்தை 6,000 ஆண்டுகளுக்கு முன்னரே, உலகின் முதன்மை நாகரிகங்களில் ஒன்றான மெசபடோமியாவை சேர்ந்த மக்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள். சூரியனை "ஷமாஷ்" என்று அழைத்த அவர்கள், அதை வாழ்த்திப் பாடல்களையும் பாடியிருக்கிறார்கள்.
சூரிய ஒளி, பழங்காலத்தில் வெப்பம் தருவதற்கு மட்டும் பயன்படவில்லை. சூரியனைக் கொண்டு நேரம் கண்டுபிடிக்க அக்கால மக்கள் அறிந்திருந்தனர். வானில் சூரியன் இருந்த நிலையைக் கொண்டே மக்கள் நேரத்தைக் கணக்கிட்டனர் (நம் தாத்தா, பாட்டிகள் வானத்தில் சூரியன் இருக்கும் நிலையைப் பார்த்தே நேரம் சொன்னது இப்படித்தான்). பிறகு இதை அடிப்படையாகக் கொண்டு சூரியக் கடிகாரமும் கண்டுபிடிக்கப்பட்டது.
சூரியக் கடிகாரம்
சூரிய ஒளி நன்கு படும் இடத்தில் ஒரு கோலை நட்டு வைத்து, அதன் நிழல் தரையில் விழுவதைப் பார்த்துப் பாபிலோனியர்கள் நேரத்தைக் கணக்கிட்டனர். சூரியக் கடிகாரமும் இதேபோலவே செயல்படுகிறது. அதன் மையத்தில் செங்கோண முக்கோண நிலையில் ஒரு தகடு வைக்கப்பட்டிருக்கும் (கடிகாரத்தில் உள்ள முள்ளைப் போல). சூரியன் நகர்வதற்கு ஏற்பக் கடிகாரத்தில் நிழல் விழுவதைப் பொருத்து நேரத்தைக் கணக்கிடுவார்கள். இதுவே நவீனக் கடிகாரத்துக்கும் அடிப்படையாக இருந்திருக்க வேண்டும்.
18ஆம் நூற்றாண்டில் வான் ஆராய்ச்சித் தகவல்களைச் சேகரிக்க ஜெய்ப்பூரில் பல கட்டடங்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் சாம்ராட் இயந்திரம் எனப்படும் மிகப் பெரிய சூரியக் கடிகாரம். புது டெல்லியில் "ஜந்தர் மந்தர்" என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள வான் ஆராய்ச்சி மையமும் இப்படிப்பட்ட ஒன்றே.
ஒரு சிறு தாவரம் உணவை உற்பத்தி செய்வது முதல், துணி காய வைப்பது, வற்றல் போடுவது, மின்சாரம் தயாரிப்பது என எத்தனையோ விஷயங்களுக்குச் சூரிய வெப்பமே அடிப்படையாக இருக்கிறது. சூரிய ஒளி இல்லாவிட்டால் உலக இயக்கம் அப்படியே நின்றுவிடும். ஆனால், சூரிய வெப்பம் நமக்குச் செய்யும் நன்மைகளை மனதில் கொள்ளாமல் பெரும்பாலான நேரம், அதை தூற்றவே செய்கிறோம்.
பூமிப் பந்து 22 அரை டிகிரி சாய்ந்து இருப்பதால் நிலநடுக்கோடு, நிலநடுக்கோட்டுக்குத் தெற்கேயுள்ள வெப்பமண்டலப் பகுதிகளில் பகல் முழுக்க நல்ல வெளிச்சம் கிடைக்கிறது. இதன் காரணமாக நம்மைப் போன்றவர்களுக்கு இயல்பாகவே தோல் கறுத்து விடுகிறது அல்லது மாநிறத்தில் உள்ளது. இது பல்வேறு தோல் நோய்களை அண்டவிடாதவாறு செய்கிறது. அதேநேரம் மேற்கு நாடுகளில் பகலில்கூடச் சூரியன் தோன்றாத ஊர்கள் உண்டு. அண்டார்ட்டிகாவில் ஆறு மாதம் பகல், ஆறு மாதம் இரவு என்றிருக்கும். அதனுடன் ஒப்பிடும்போது பகலில் நமக்குக் கிடைக்கும் சூரிய வெளிச்சம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் மூலமே நமது உற்பத்தி நடவடிக்கைகளில் பெரும்பாலானவை நடக்கின்றன.
சூரியன் நிலைக்குமா?
இப்படிச் சூரியன் எவ்வளவோ நன்மைகளை நமக்கு வழங்கி வந்தாலும், சக்திமிக்கதாக இருந்தாலும், அதுவும் ஒரு நாள் அழியப் போகிறது தெரியுமா?
சூரியப் பந்துக்குள் உள்ள ஹீலியம் வாயு தொடர்ந்து எரிவதால்தான் இவ்வளவு வெளிச்சமும், வெப்பமும் நமக்குக் கிடைக்கின்றன. ஹீலியம் வாயு தீர்ந்து போய் சூரியன் அழியலாம் என்கிறார்கள் ஒரு தரப்பு விஞ்ஞானிகள். மற்றொரு தரப்பினரோ சூரியன் வெடித்துச் சிதறிப் பூமியைப் பாதிக்கலாம் என்கிறார்கள். ஆனால் இது குறித்து இப்போது நாம் கவலைப்பட வேண்டியதில்லை. இதெல்லாம் குறைந்தபட்சம் 50 கோடி முதல் அதிகபட்சம் 500 கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் நடக்க வாய்ப்பு உண்டாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT